
காதலென்னும் தேர்வு
காதலிப்பவர்களே
தீர்ப்பெழுதும்
கூரிய கத்திமுனை...
காதல்..
காதலிப்பவர்களே
தரப்படுத்தும்
நீதிபதிகளாய்...
காதலில்...
உருவம் இல்லாத ஒன்றுதான்..
உருவகப்படுத்துகிறது பலவிதமாய்...
காதல்.
பங்குபெறுவதும் அவர்களே...
பட்டம் சூடுவதும் அவர்களே...
உயர்த்திப் பிடிப்பதும் அவர்களே...
தாழ்த்திப் பழிப்பதும் அவர்களே...
உன்னதமாக்குவதும் அவர்களே...
உருக்குலைப்பதும் அவர்களே...
காதல் தோன்றும் தருணங்களும்
கைரேகை வரிகளைப் போலேவே...
அவரவர்க்கு வித்தியாசமாகிறது..
பார்த்த நொடியில் சிலருக்கு...
பார்க்காமல் கூட சிலருக்கு...
பார்த்துப் பழகி சிலருக்கு...
பழகிப் பார்த்து சிலருக்கு..
மனதால் ஒன்றி சிலருக்கு..
மணமாகி வென்று சிலருக்கு..
கண்களின் தீண்டலில்
பிறக்கிறது ...
காதல் சிலருக்கு...
உணர்வுகளின் தோன்றலில் உருவாகிறது ...
காதல் சிலருக்கு....
உள்ளங்களின் கூடலில்
கருவாகிறது....
காதல் சிலருக்கு...
எண்ணங்களின் இணைப்பில்
எழுகிறது ...
காதல் சிலருக்கு....
கொள்கை மாறாமல்
கட்டுக்குள்..
காதல் சிலருக்கு...
எல்லை மீறுவதையே
கொள்கையாய்..
காதல் சிலருக்கு...
உணர்வுகள் மட்டுமே காதலாய்..
சிலருக்கு...
காதல் மட்டுமே உலகமாய்..
சிலருக்கு.
அருகில் வராமலேயே
அஞ்சியே விலகி நின்றது
எண்பதுகளின் காதல்...
கரம் தொடாமலேயே
காத்திருந்து இரசித்தது
தொண்ணூறுகளின் காதல்..
முத்தங்களுக்குள்
மூழ்கித் திளைக்கிறது
இரண்டாயிரத்தின் காதல்...
மொத்தத்தையும்
ருசித்து சிரிக்கிறது
நவயுகத்துக் காதல்...
ஆம்...
காதல் ஒன்றுதான்...
காதலிப்பவர்கள்தான்...
உருவம் கொடுக்கிறார்கள்.
காதலுக்கு..
காதலென்னும் நதியது
கடலதில் ஒன்றாகக் கலந்தாலும்,
தடுப்பணை கட்டித் தடுத்தாலும்,
இருவேறு உணர்வுகளை
இதயத்தில் சுமக்க வைக்கும்...
வென்று திளைத்தவரும்
வெம்பி துடிப்பதுண்டு..
நின்று அழுதவரும்
நினைவால் மகிழ்வதுண்டு..
காதல் முறிந்ததென்று
உயிரை முடித்தவருமுண்டு.
உயிர் உள்ளவரை - காதலை
உள்ளத்தில் சுமப்பவருமுண்டு..
காதல் செய்து இதயத்தில்
காயப்பட்டு நிற்பவருமுண்டு...
காயப்பட்ட இதயத்திற்கு - காதலால்
மருத்துவம் செய்பவருமுண்டு..
கசாப்புக் கடைக்காரராய்
காயங்களையும் தருகிறது...
காதல்...
அறுவை சிகிச்சை நிபுணராய்
மருத்துவமும் செய்கிறது....
காதல்...
பேரின்பத்தைப் பருகியவர்கள் பரவசப்படுகிறார்கள்...
காதலில்...
பெருமிதம் கொள்கிறார்கள்...
காதலால்...
சிற்றின்பம் தேடியவர்கள்...
சிதைந்து போகிறார்கள்...
காதலில்...
சிதைத்தும் போகிறார்கள்...
காதலை...
காதலர்களே தீர்மானிக்கிறார்கள்....
காதலின் பொருளினை...
காதலுக்கு இரண்டு பக்கம்...
அது காதலர்களின் மறுபக்கம்....
காதல்....
இன்பங்களை நல்கும் ஒருபக்கம்....
இதயங்களைக் கொல்லும் மறுபக்கம்...
கசாப்புக்கடையில் காத்திருக்கும்
சதையுண்டு அலையும்
நாயொன்றின் உணர்வே...
காமம் தேடுவதை மட்டும்
காதலென்று சொல்வது...
உடற்கூடலில் தொலைவது
காமம்....
உயிர் பிரியும் வரை வாழ்வது
காதல்...
மகத்துவம் உணராதோர்
உடற்கூறு செய்கிறார்கள்...
பிணங்களை...
தனித்துவம் பெற்றோர்
மருத்துவம் செய்கிறார்கள்...
மனங்களை...
ஆம்..
காதலிப்பவர்களே
தீர்ப்பெழுதும்
கூரிய கத்திமுனை...
காதல்..
✍️ கவிஞர் விஜயநேத்ரன்