
செட்டிநாடு : அழகான வாழ்வில் அது பேசும் அறவியலும்
அகமெனப் புறமென அழகிய வரமென
யுகமொரு முகமென பழகிய உறவென
தினமொரு விழாவினில் திகட்டா உணவென
மனமதில் குழந்தையாய் மகிழ்ந்திடும் நாடிது....
சுண்ணாம்புக் குழைத்தெடுத்து சுடுசெங்கல் சேர்த்துவைத்து
விண்ணோடு விளையாடும் கார்முகிலும் இளைப்பாறும்
அண்ணாந்து பார்த்தால் தோன்றிடும் ஆசையினில்
கண்ணோடு நிழலாடும் கண்கவர் மாளிகைகள்
ஆத்தங்குடி கல்லெடுத்து அழகாய் செதுக்கிவைத்து
தேக்குமரக் கட்டைகளை இரகமாய்த் தேர்ந்தெடுத்து
கதவோடு சன்னலெனக் கனிவாய் இழைத்தெடுத்து
கலைநயமாய்ச் சிற்பமெனக் காட்சிக்கு விருந்தளிக்கும்.
பனையோலை பெட்டிசெய்து பார்வைக்கு வண்ணமிட்டு
கலையோடு வெண்துணியில் பூவாய் நூல் நெய்து
அரிய மரச்சாமான் அழகாய் அணிவகுக்கும்
அரண்மனையாய் விருந்தளிக்கும் அற்புத மாளிகைகள்.
இருபுறமும் திண்ணையோடு இனிதே வரவேற்று
இல்லமெங்கும் அறைகளென
உள்ளமதை கொள்ளையிடும்
சித்திரை வெயிலோ மார்கழிக் கடுங்குளிரோ
மொத்தக் குளுகுளுப்பில் நித்திரைக்கு சுகமளிக்கும்
அரைத்த மசாலாவில் அளவோடு மிளகிட்டு
கொதிக்கும் கோழிக்கறி குடற்பசியைத் தூண்டிவிட
உரித்த ஆட்டிறைச்சி உப்புகண்டமாய் உருமாற
வறுத்த மீன்கறியின் வாசனையில் நாவொழுக
உக்காரைக் கந்தரப்பம் கருப்பட்டிப் பணியாரம்
உகந்தக் கவுனியோடு வெள்ளைப் பணியாரம்
தேன்குழல் மனகோலம் சீடையின் சுவைக்கு
வானவரும் வந்திடுவர் வாங்கியுண்ண வரிசைகட்டி..
அள்ளிக் கொடுத்து அமரரான அழகப்பரெனும்
வள்ளலவர் பெயரோடு வாழும் கல்விச் சாலைகள்
அதனோடாயிரம் ஜன்னல் மாளிகையும் சிறப்பளிக்க
அழகானக் கற்றளியாய் அமைந்திருக்கும் கோயிலோடு
அன்னைத் தமிழுக்கும் ஆலயத்தை எழுப்பித்த
ஊரானக் குடியோடு கோட்டையதில் பட்டியும்
ஊருணி வயலோடு ஏரிகுளம் மங்கலமும்
புரமாறு மதியோடு புரிசிலைக்குறிச்சியென்று
வரமாகத் தோன்றிய வாழ்வியலின் அங்கங்களாய்
அறம் வளர்க்கும் செட்டிநாட்டின் ஊர்களதுவோடு
வடக்கே வெள்ளாறு வைகையது தெற்கினிலே
வங்கக்கடல் கிழக்கில் அரசன் கோட்டையது மேற்கில்
எல்லைகளாய் அமைந்தெழில் கொஞ்சுகின்ற
பிள்ளை மனங்கொண்டவர்கள் நீக்கமற வாழ்கின்ற
பிறவிக்கும் சிறப்பளிக்கும் செட்டிநாடிதுவாம்.
கணியன் பூங்குன்றன் இசைத்தமிழ்க் கண்ணதாசன்
இனிய திரை தந்த முத்துராமன் மகேந்திரன்
இன்னிசை வைத்தியநாதன் இவர்களோடு சாம்பசிவர்
எல்லையில்லாத் திரைவளர்க்கும் கலைக்கூடம்
எங்கள் மெய்யப்பர் அவரளித்த திரைஎடுப்பரங்கம்
என்றும் செட்டிநாட்டின் புகழ்பேசும் கலையுலகில்.
வெள்ளையனை எதிர்த்து நின்ற வேலுநாச்சியாரும்
வெடிகலமதில் உயிர்விட்ட வீரமங்கைக் குயிலியும்
வளரியென்னும் ஆயுதத்தை அகிலத்திற்களித்து
விடுதலைக்குக் குரல்கொடுத்த மருதிரு வீரர்களும்
வெற்றித் திருமகனாம் முத்துராமலிங்கர் புகழோடு
வரலாறாய் வாழ்கின்ற அரும்பெரும் நாடிதுவே
வாங்கபோங்கயென்று வாய்மொழியில்
கனிவோடு
மங்கல விழாக்களதில் மனம் நிறைக்கும் மகிழ்வோடு
சங்கடத்தில் நின்றிருந்தால் சமயத்தில் தோள்கொடுத்து
வங்கிக் கணக்கெனவே வாணிகத்தில் சிறப்புற்று
வளமிகு வாழ்வளிக்கும் வளர்பிறையாய் அருளளிக்க
குறைவில்லா மரியாதை நிறைவாக எதிரொலிக்க
அளவில்லா அன்போடு உள்ளத்தால் வரவேற்று
எழிலான வாழ்வியலைத் தலைமுறைக்கும் எடுத்தளித்து
என்றும் நிலைத்திருக்கும் வரலாற்றில் செட்டிநாடே...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்