
நானும் அவனும் : என் எண்ணத்தில் என்னவன்.
எனக்கும் கனவுகள் உண்டு...
என்னவனைப் பற்றி....
ஏதுமில்லை என்றாலும் எல்லாமுமாய் என்னை நேசிக்கும்
என்னவனைப் பற்றி... எனக்கும் கனவுகள் உண்டு...
ஆணழகன் வேண்டுமென்ற ஆசையெல்லாம் எனக்கில்லை..
அவனழகாய் நான் மட்டும் போதுமென்று
அவன் உள்ளத்தில் நினைத்து வாழும்
ஆசை மட்டுமே எனக்குண்டு..
கட்டுமரத் தேகம் கொண்ட கட்டழகு வேண்டாம்...
களைப்பில் நான் சாய்ந்திட அவன் தோள் கொடுத்தால் போதும்..
ஆடம்பர வாழ்வெதிலும் விருப்பமில்லை எனக்கு..
அவன் அன்பென்ற பேரலையில் நனைந்து
என் அன்றாடம் நகர்ந்தாலே போதும்..
உலகைச் சுற்றி எல்லாம் பயணம் போக வேண்டாம்...
அவன் கைகோர்த்து சிறுதூரம் ஒன்றாக நடந்தாலே போதும்..
மொத்தத்தில் பெரிதாய் எதுவும் தேவையில்லை..
நான் பெரிதாய் எண்ணும் என்னவன்,
நானிருக்கிறேன் உன்னுடன், உனக்காகவென்று,
என் கரம் கோர்த்து அவன் சிரம்தாழ்த்தி,
அன்பாயென் உச்சிமுகர்ந்து ,
அவன்பால் அணைத்துக்கொள்ளட்டும் என்னை...
அதுபோதும் எனக்கு... உயரம் பறந்திடுவேன்....
உலகில் அதிஷ்டசாலி நான்தானென்ற உன்னத நினைப்போடு..
கை கோர்த்து, தோள் சாய்ந்து
மடியில் உறங்கி அன்பில் கிறங்கி
காதலாகி கசிந்துருகி கடைசிவரை...
அவனுடைய காதலை நான் ஆள வேண்டும்...
என்னுடைய காதலில் அவன் வாழ வேண்டும்....
என்னுள் அவனும்... அவனில் நானும்...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்