பகலவன் மெல்லக் களைப்பில் அயர்ந்திட
பிறையவள் வெட்கத்தில் அரைமுகம் காட்டிட
மின்னொளி பரவிடும் பொன்னெழில் நேரம்
கண்விழியோரமாய்க் கசிந்தது ஈரம்....
இடுகாட்டுப் பிணமென எரிகிறேன் மனதினில்
இதயத்துள் புதைக்கிறேன் ஆசையின் சாம்பலை..
பிரசவத்தின் வலியை தாங்கிடும் மனது
பிறர் சாபத்தில் உடைகிறது நொறுங்கி...
வலிகளைத் தினம் சுமந்திடும் இமைகள்
விழிநீரையே விடையாய்ப் பிரசவிக்கிறது...
மலடி என்ற வெற்றுச் சொல் கேட்டு,
மொத்தமாய் மரணிக்கிறது உயிரைத் தவிர....
அப்பா பேரு தெரியாமல் - அதைத் தூக்கி
குப்பையில் வீசுமுன்னே சொன்னால்கூட, பேதையிவள் வளர்த்திடுவேன் என்மகளாய்..
பேறு அதைப் பெற்றிடுவேன் தாயாய்..
பெண்மகவு பிறந்ததென்று பிடிக்காமல்
மண்ணுக்குள் புதைக்காமல் - எந்தன்
கண்ணோரம் காட்டிடுங்க அவளை
கண்ணாகக் காத்திடுவேன் மகளாய்...
பெத்தெடுக்க முடியாமல் பேதை மனம் வலிக்கிறது
தத்தெடுத்தும் தாயாகத் தினமிங்கு துடிக்கிறது
இரவல் வெளிச்சத்தில் உறவைத் தேடுகிறேன்
இதயத்தால் அவள்வரவை எண்ணி வாடுகிறேன்....
அம்மா எனக் கேட்கும் ஆசையோடு.....
✍️ கவிஞர் விஜயநேத்ரன்