
இல்லத்தரசி : இவள் வேலை ஏதும் இல்லாதவள்
இல்லத்தரசி..
ஆம்!!!!
நான் இல்லத்தரசி தான்.....
வேலைக்குச் செல்லாத
வெறும் இல்லத்தரசிதான்...
வேலைகள் ஏதுமில்லாத
வெறும் இல்லத்தரசிதான்...
நான் வைத்த போட்டியில்
காலைக் கதிரவனும் தோற்று
மாலைக்குள் மயங்கி போகிறான்...
உதிக்கும் சூரியனை
கண்டதில்லை ஒரு நாளும்...
விடுப்பேதும் இல்லாமல்
அடுப்பங்கரைக்குள் தினம்
அவனுக்கு முன்னால்...
அடி எடுத்து வைப்பதால் ...
குளிக்கத் தண்ணீர் வைக்கிறேன்
குடிக்கத் தேநீர் கொடுக்கிறேன்
படிக்க வேண்டிய செய்தித்தாளையும்
பார்த்து எடுத்து வைக்கிறேன்...
எனக்காக அல்ல...
என்னைச் சார்ந்தவர்களுக்கு..
அறுசுவையோ பல்சுவையோ
அதிகாலையே செய்யத் துவங்குகிறேன்...
கச்சிதமாய் காலை உணவிட்டு
பக்குவமாய் மதிய உணவினை
பார்த்துப் பார்த்து கட்டி விட்டு
கணவனை அலுவலகம் அனுப்பி
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி
கடிகாரத்தில் மணி பார்க்கிறேன்...
பத்தென்று பல்லிளிக்கிறது....
சில நாட்கள் சாப்பிடுகிறேன்
பல நாட்கள் மறந்து விடுகிறேன்...
தனியாய்ச் சாப்பிட பிடிக்காததால்...
பார்த்துப் பார்த்து செய்தாலும்
பாவம் யாரும் கேட்பதில்லை...
சாப்பிட்டாயா என்று.....
அப்படியே அள்ளி போட்டுவிட்டு
அடுத்த வேலைக்குத் தயாராகிறேன்...
பாத்திரம் கழுவி எடுத்து விட்டு
வீட்டினைத் துடைத்து சுத்தமிட்டு
துணிகளைக் துவைத்துக் காயவிட்டு
மணிதனைப் பார்க்கையில்
முகம் காட்டுகிறது மூன்றென...
சாப்பிடத் தோன்றாமல்
சாய்கிறேன் தரைமீது....
களைப்பினில் கண்மூட...
மயக்கத்தை எழுப்பி விட்டது
மழைவிழும் சத்தம்....
காய்ந்த துணிகளை எல்லாம்
காயப்படுத்தி விடுமென்ற வேகத்தில்
பாய்ந்து செல்வேனோ???....
பறந்து செல்வேனோ????...
பார்த்திபன் வில்லென ...
அத்தனையும் எடுத்து வந்து
பத்திரமாய் வீடு சேர்த்தேன்...
இங்கிதம் தெரியா கடிகாரம்
இப்போது மணி நான்கென்றது...
அவசரமாய்க் கிளம்புகிறேன்
வந்து சேரும் பிள்ளைகளை
அழைத்து வர பள்ளிக்கு....
கூட்டி வந்த பிள்ளைகளுக்கு
குறிப்பறிந்து எல்லாம் செய்து
படிப்பினையும் எடுத்து சொல்லி
இடைவெளியில் சமையல் செய்து
எட்டிப் பார்க்கிறேன் ....
வாசல் வந்த கணவனை....
அத்தையும் மாமாவையும்
அவர் குணமறிந்து கவனித்து
இரவு உணவினை இனிதாய்க் கொடுத்து
வரவு செலவினை முழுதாய்த் தொகுத்து
வந்து சேர்கிறேன் உறங்கிட ...
சிந்தொன்று இசைக்கிறது ...
சிங்காரமாய் மணி 12 என்று...
கண்களை மூடியதும் ...
காலைகள் விடிகிறது...
கனவுகளையும் தாண்டி..
கண்களுக்குள்...
ஏனென்றால்
வேலைக்குச் செல்லாத
வெறும் இல்லத்தரசிதான்...
வேலைகள் ஏதுமில்லாத
வெறும் இல்லத்தரசிதான்...
வெறுமனே வெட்டியாய் இருக்கிறேன் ..
வேலைகள் ஏதுமில்லை.....
நான் வெறும் இல்லத்தரசி தான்...
அடுத்தவர் பார்வைக்கு...
(I'm not working.. just a house wife...)
✍️ கவிஞர் விஜயநேத்ரன்