
வல்லமை தாராயோ : நலங்கெடப் புழுதியில் வீசி எரிந்த வீணை
இறைவா...!
எனைப் படைத்தாய் இந்த மண்ணில்...
ஏன் படைத்தாய் ஒரு பெண்ணாய்???....
பிழை என்ன நான் செய்தேன்??
பெண்ணென்று ஏன் பிறந்தேன்??..
தளிராய் மலர்ந்தேன் தாய் மடியில்...
செடியாய் வளர்ந்தேன் தந்தையின் தோளில்...
அன்பாய்க் கரம் பிடித்து
அழகாய்ச் சுற்றி வந்தேன்
அண்ணவன் அரவணைப்பில்...
அவன் நிழற் கொடியாய்....
என்னில் அது மீளவில்லை...
ஏனோ அது நீளவில்லை...
மழலைத் தோலுரித்து மாற்றங்கள் கொடுத்து
மங்கையெனும் உடை மாற்றினாய்...
நட்பென்ற நிழல் கொடுத்தாய்....
சில நாட்களதில் இடம் கொடுத்தாய்...
இந்நிழலையும் நீ பறித்தாய்..
இளைப்பாறி முடிக்கும் முன்னே
இதுபோதுமென்றே நீ...
இருந்தும் அமைதி கொண்டேன்....
இருப்பதில் நிறைவு கண்டேன்...
விருந்துண்ட நாட்கள் போதுமென
விழாயென்ற ஒன்று நீ எடுத்தாய் ...
மங்கையிவள் மண வாழ்வுக்கு
மணாளன் ஒருவனை நீயேகொடுத்தாய்...
இறைவா இது நீ கொடுத்த வாழ்வென்று
இதயத்தில் கனவுகளை சுமந்து
இல்லற வாழ்வுக்குள் அடி வைத்தேன்...
வாழையடி வாழையாய் வாழ்வாயென
வாழ்த்தொலிகள் செவிசேர,
ஆனந்தமாய் வாழ்வாயென அண்ணனவன் வாழ்த்த,
இல்லறம் வாழ்வு இனிதாகட்டுமென
சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்த,
புகுந்த வீடு செல்வாயென அனுப்பி வைத்தாய்.....
தந்தையவருக்கு அன்பு விடை சொல்லி,
தாயவள் மடிக்கு நன்றி சொல்லி,
அண்ணனின் வாழ்த்ததைப் பெற்று,
அங்கு வந்தவரின் ஆசி பெற்று,
இங்கிழந்த உறவுகளைத் தேடி,
அங்கு வந்தேன் அவன் கரம் பற்றி...
ஆனந்தம் பொங்கும் வீடு என்றெண்ணி
அடி எடுத்துவைத்தேன் அங்கே..
ஆரம்ப வாழ்க்கை சென்றது அமைதியாய்....
நாளும் விடிந்தது....
நாட்களும் நகர்ந்தது ..
வெறுமையே நிறைந்தது....
அன்பை உணரவில்லை
ஆசை உணர்வுமில்லை
இன்பம் தீண்டவில்லை
ஈடிதல் நிறைவேறவில்லை
உள்ளத்தில் மகிழ்வுமில்லை
ஊடல் மாறவில்லை
என்னுள் நானேயில்லை
ஏனோ அது புரியவில்லை
ஐயம் குறையவில்லை
ஒன்றும் விளங்கவில்லை
ஓர்நாளும் உறங்கவில்லை
ஆட்கொண்ட தனிமைச் சுழலில்
ஆரம்பமானது சிறிதாய் புயல்...
எனக்கென்று வாய்த்தவன் தனக்கென்று இருந்தான்...
என் கனவுகள் என்னவென்று
நானே மறந்து போனேன்....
நாளும் மரத்து போனேன்.....
என்னுள் மரித்து போனேன் ...
எங்கோ தொலைந்து போனேன்...
கட்டில் மெத்தை பீரோ போல
காட்சிப் பொருளாய் நானும் ஆனேன்...
விட்டில் பூச்சியாய் வீணாய் வீழ்ந்து
விளக்கொளியில் எரிந்தே போனேன்...
இதுதான் தினமெனக்கு வாடிக்கை
இப்படித்தான் நகர்ந்ததென் வாழ்க்கை...
இறைவா உனக்கேன் வேடிக்கை
இதயத்தால் வேண்டினேன் அவன் கை...
அதற்கும் வைத்தான் முற்றுப்புள்ளி
அவனும் ஆனான் வெற்றுப் புள்ளி...
வெற்றுத்தாளாய் எனைக் கிறுக்கி
வீதியில் எறிந்தாயே நொறுக்கி....
வீணென்று எழுதினாயோ ஏட்டில்... விடையொன்று நீ உரைப்பாய் இறைவா .....???
✍️ கவிஞர் விஜயநேத்ரன்