
அவனும் அவளும்
பேசிக்கொண்டார்கள்...
"மகளிர் தின வாழ்த்துகள் " என்றானவன்..
'நன்றி ' என்று புன்னகைத்தவளிடம்
" ஆணும் பெண்ணும் சமம்தானே
அதிலென்ன பெண்கள் தினத்திற்கு மட்டும்
இத்தனை சிறப்பு..."
ஆழ்மனதின் குமுறலை வினவாக்கினான் அவன்...
" தாய்ப்பாலுக்குப் பிறகு
உனக்கு கிடைத்ததென்னவோ"
அடுத்த நொடியே பதிலளித்தான்....
" ஆட்டுப்பால், எருமைப்பால் ஆகாதென்று
பக்குவமாய்த் தந்தனர்....
பசுவின் பாலை எனக்கு...
உனக்கென்ன தந்தார்கள்??
இதெல்லாம் தரவில்லையா??" என்ற எதிர் கேள்வியோடு....
" ஹா... ஹா..ஹா..
நான் சிறப்பானவள் இல்லையா...
இதை விடச் சிறப்பானதே தந்தார்கள்....
" என்றவளிடம்
" அப்படியா???. அப்படியென்ன பால்" என்றான் சற்றே ஆர்வத்தோடு...
" கருவாகி உருவாகி கண்விழித்துப் பார்த்ததுமே...
கள்ளிப்பாலைப் புகட்டினர்...
என் பால் என்னவென்று தெரிந்ததும்.. "
சொன்னவள் குரல் உடைந்தது இப்பொழுது ....
கேட்டவன் மனதும் அதே நிலைதான்...
இப்பொழுது இவள் முறை...
" அடுத்த என்ன செய்தாய்"
" நண்பர்களுடன் விளையாடினேன்...
பள்ளிக்குச் சென்று பாடம் படித்தேன்..."
என்றவன் பதிலுக்கு
" ஓ... இவ்வளவு இருக்கிறதா..."
என்றாள்.
" ஏன்... நீ பள்ளிக்குப் போனதில்லை யா??..
இது அவன் வினா...
"அடுப்பங்கரையோடு மல்லுக்கட்டவும்
அடுத்துப் பிறந்தோரை தூக்கி சுமக்கவும்
அப்பாவுக்கு சேவை செய்யவுமே
அன்றாடம் தீர்ந்து போக...
பள்ளிக்குப் போகவும் நேரமில்லை...
போ என்று சொல்லவும் யாருமில்லை..."
அவளின் பதில் கேட்டு அதிர்ந்து விட்டான்....
ஏன் சொல்லவில்லை
என்றவினா மட்டும் வந்தது அவனிடம்...
" அரைப் புள்ளி காற்புள்ளி வைத்து
கடக்க நினைக்கும் போதொல்லாம்...
அடுத்த வீட்டிற்குச் செல்பவளுக்கு
படிப்பெதற்கு...
பள்ளிக்குச் சென்றாள் பாதை மாறி விடுவாள்....
கல்லூரிக்குச் சென்றால் காதல் செய்திடுவாள்..
காலத்தோடு ஒரு கல்யாணத்தை பண்ணிடுங்க...
இப்படியாக,
உள்ளிருந்து ஒரு குரல்..
ஓங்கி ஒலிக்கும்...
எங்கள் மொத்தப் புள்ளியும் முற்றுப்புள்ளியாகும்...
அந்த நொடியே...
" இப்படிச் சொன்னவள் கண்கள் நீர்சிந்தின...
கன்னங்களை நனைத்து,
அவளைப் போலவே ஒளிந்து கொண்டது...
மறைவுக்குள்...
ஆனால்,.
அவன் கண்ணீர் துளிகள் காயாமல் நின்றன...
காயாத இவள் வடுக்களுக்குச் சான்றாக...
" மணவாழ்விற்குப் பிறகாவது
மங்கலம் பிறந்ததா?? "
மறுதலிப்புடன் உதிர்த்தது அவன் உதடுகள்...
"ஆடையிழந்தேன்...
அடையாளம் துறந்தேன்..
அழகியல் தொலைத்தேன்...
வீடும் ஊரும் மாறியது.
விதியில் மட்டும் மாற்றமில்லை..
ஆயிரம் எலும்புகள் ஒன்றாக உடையும்
அத்தனை வலிகளைச் சுமந்தேன்.
ஆண்மகன் அவனென்று சொல்ல..
என்னிடம் குறை சொல்லை வெல்ல...
தட்சணை கொடுத்தால் பட்சணம் ஆகலாம்...
தட்டில் குறைந்தால் பருவத்தில்
வேகலாம்...
ஒன்றோ இரண்டோ ஒப்புக்குப் பெற்றாலும்
வட்டிக்கு வசூலென்று தட்சணையில் தீரவில்லை..
பற்றிய சிறு தீயில் ஒருநாள் பிணமானேன்..
முற்றிய மனத்தீயில் தினம் தினம் இரணமானேன்..
இப்படித்தான் கடந்து வந்தேன்..
இருபதாம் நூற்றாண்டை.."
இப்பொழுது அவள் நிறுத்திவிட்டாள்...
அவன் மட்டும் தொடர்ந்தான்...
கண்ணீரோடும்...
கவலையோடும்...
" இரவொன்று இருந்தால்
பகலொன்று வாராதா??
இடைவேளை தீர்ந்தால்
புது வேளை தோன்றாதா??
புதிதாய் உதிர்த்தான்...
புதிராய் நின்றவளிடம் ...
" உண்மைதான்...
விடியலொன்று வந்தது...
சிறு சிறு துளியாய்...
துளிகள் சேர்த்தோம்... நீரானது....
நீரினைச் சேர்த்தோம்... ஆறானது...
ஆறுகள் கூட... எங்கள் பேரானது....
அரிதாரம்தான் கலைந்து
அவதாரம் ஆகினோம்..
அடுத்தவர் நிழல் பிரிந்து
அடையாளம் தேடினோம்.
பள்ளிக்குச் சென்றோம்...
பல்கலையும் அறிந்தோம்..
அடுத்ததாய் ஒரு வேலை...
அது காட்டும் எம் நாளை..
தொடக்கம் இதுதான்...
இன்னும்....
தொலைதூரம் போகவேண்டும்...
இப்பொழுது உணர்ந்தாயா...
இந்நாளின் பெருமையினை..".
இப்பொழுது அவன் சொன்னான்...
" மா தவம் தான் உன் வாழ்க்கை...
மன்னிப்பாய் என் வார்த்தை...
உனக்கு சொல்கின்றேன்..
உள்ளத்தால் சொல்கின்றேன்..
மகளிர் தின நல்வாழ்த்தை
மனமகிழ உனக்காக....
இனிய மகளிர் தின நலவாழ்த்துகள்.....