இலக்கை நோக்கிப் பயணிக்கும்
இந்தவொரு பயணத்தில்
இடையூறுகள் சிகரமாகலாம்...
இலக்குகள் தொடுவானமாகலாம்..
வென்றவரும் தோற்றவரும்,
வழிநெடுகில் நிற்பவரும்,
வேடிக்கை கடைவிரித்து ,
வழியெங்கும் அளித்திடலாம்..
அறிவுரையும் அறவுரையும்...
அவரவரின் விருப்பத்திற்கு...
போராடும் உன்னைக் கண்டு,
நகையாடிச் சிரிக்கலாம்...
வேரோடு உன்னைப் பெயர்க்க,
விதிக் கதைகள் கூறலாம்...
பூவாக மலர்ந்தாலும்
நாரென்றேப் பார்க்கலாம்..
செந்தாமரையுன் மேல்,
சேரல்லிப் பூசலாம்..
இன்னும் அது தொடரலாம்..
இழிவு பல பேசலாம்...
ஆனால்..
வெற்றியை நீ தொட்டுவிட்டால்,
வழிக்கதைகள் இடம் மாறும்...
வசைமொழிகள் புகழ்கீதமாகும்..
சேரல்லி வீசியவர்கள்
செந்தூரத் திலகமிடுவர்...
நாரென்று நினைத்தார்கள்
பூவோடு முன் வரலாம்.....
பச்சோந்தி நிறம் மாறும்..
பல்லிளித்து உறவாடும்..
எத்தனையோ முகஸ்துதிகள்
எதிர் வந்து நின்றாலும்,
எப்போதும் போல் நீயும்
அப்போதும் கடந்து விடு...
அடி நெஞ்சில் அன்பு வைத்து
கரம் கொடுத்து உதவியோர்க்கு
சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல
அந்த நொடி மறந்திடாதே...
கடிவாளக் குதிரையென,
நடை போட்டுத் தொடர்ந்து விடு...
அடுத்து ஒரு இலக்கு வைத்து..
அன்புகொண்ட இதயத்தோடு...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்
https://www.kavignarvijayanethran.com/