கதிரவன் சுட்டெரிக்கும் வேனிற்காலம்,
கார்முகில் ஆர்ப்பரிக்கும் மழைக்காலம்,
பனித்துளி நிறைந்திருக்கும் குளிர்காலம்,
பார்வைக்கு விருந்தளிக்கும் வசந்தகாலம்
இப்படி எதுவாயிருந்தாலென்ன..
அப்படி என்ன இருக்கிறதென்று ,
களித்து இரசிக்கும் மனமில்லாமல்,
கற்களாய் கடந்து செல்பவருக்கு,
எல்லாமே ஒன்றுதானே...
கடந்துவிட்ட நேற்றைய பொழுதுகளால்
கண்களுக்குத் திரையிட்டு,
எதிர்வரும் நாளைய விடியல்களால்
கடிவாளச் சிறையிட்டு,
இழந்து விடுகிறோம்...
இன்பந்தரும்.,
இன்றைய நொடிதனை... ..
புதுமழை கொண்டுவரும் மண் வாசம்,
அடைமழை கொணர்ந்திடும் நீர்வாசம்,
சாரலில் மிதந்து வரும் தென்றல் - அது
தேகத்தில் கலந்து தரும் புது நேசம்,
இலை மீது துயில் கொள்ளும் பனித்துளி,
இரை தேடி குரலெழுப்பும் பறவை ஒலி,
கால்களை வருடிடும் கடலலைகள்,
காலையில் காட்டிலும் கீர்த்தனைகள்..
பச்சை நிறப் பட்டாடை,
பகட்டாய் மேலுடுத்தி,
நிறைமாதக் கர்ப்பிணியாய்,
நிலம்பார்க்கும் நெற்பயிர்கள்,
காட்டைச் சீராக்கும் யானைகள்,
களித்து ஓய்ந்திருக்கும் குரங்குகள்,
துள்ளி ஓடுகின்ற மானினங்கள்,
துரத்தி பிடிக்கின்ற சிங்கம் புலி,
ஓங்கி வளர்ந்திருக்கும் புல்லினங்கள்- அதில்
தங்கி ஓய்வெடுக்கும் புள்ளினங்கள்,
கலைக்குச் சாட்சியாகும் கற்சிலைகள்
கண்ணுக்குக் காட்சியாக்கும் கலைத்திறைகள் ,
நெருங்கிப் பயணிக்கும் பயணங்கள்,
குறிஞ்சிப் பூவாகும் நினைவலைகள்,
அரும்பாய் விரல் பிடிக்கும் மழலைகள்,
அழகாய் இதழ்விரிக்கும் புன்னகைகள்,
மனிதம் பரப்புகின்ற மனிதர்கள் - பூமியில்
புனிதம் நிரப்புகின்ற புனிதர்கள்...
இப்படியாக,
ஏதோவொன்றை கடந்துதான் செல்கிறோம்...
கண்ணிருந்தும் இரசிக்காமல்...
மண்ணில் அடைபட்ட விதை,
துளிர்த்தெழுந்து மரமாகும்...
கல்லில் அடைபட்ட நீர்,
கிளர்ந்தெழுந்து ஊற்றாகும்..
அடை மழையிலும் ,
அவ்வப்போது சூரியன் உதிக்கும்...
அக்னி வெயிலிலும்,
அவ்வப்போது மழை பொழியும்...
நாம்தான் தயாரா யில்லை...
அதை ரசித்திட..
இன்பமோ துன்பமோ நிரந்தரமில்லை...
இருக்கும் நிகழ்வை ரசித்துக் கொண்டே,
கடந்திடுவோம்... இதயத்தால்...
உங்கள்,
✍️ கவிஞர் விஜயநேத்ரன்