தொலைதூரக் காதல் : அசலைப் பிரதிபலிக்கும் பிரதிகள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்
தூரத்து மழையின் ஈரத்தை,
மண்வாசமாய்ச் சுமந்து வரும்,
இளந்தென்றல் காற்றாக,
எங்கோ இருக்கும் உன்னை,
எனக்குள் சுமந்து வருகிறது...
உன் நினைவலைகள்..
அன்றாடம் அற்பமெனக் கடந்த
திரையிசைப் பாடல்கள் வரிகள்,
அர்த்தம் சொல்லுகின்றன..
உன் பிரிவின் துயரினால்..
அவ்வப்போது காணுகின்ற,
காணொளிப் பாடல்களில்,
நாயகிகள் முகங்கள் மறைந்து,
உன் முகமாய் உருமாறுகிறது..
அதில் வருகின்ற,
கொஞ்சல்கள் உனதாகி,
வெட்கங்கள் நினைவாகி,
புன்னகைப் புயலாகி,
வெறுமை நிறைவாகிறது..
நீயில்லா அம்மணித்துளிகள்..
சாலையோரத்தில் நடக்கும் போது
என்னைப் பார்வையை இழுத்தது ..
உன் பெயரை வெளிப்படையாய் சுமந்து
உயரத்தில் இருந்த பெயர்ப்பலகையொன்று..
பூசிய வண்ணங்கள் வெளுத்து,
ஆங்காங்கே துருப்பிடித்து இருந்தாலும்,
அழகாகத்தான் தெரிந்தது அதுவும்..
என்னைப் போலவே,
நெடுங்காலமாய்ச் சுமக்கிறது போலும்
உன் பெயரை....
யாரோ யாரையோ அழைக்கிறார்கள்...
உன்பெயரைச் சொல்லி...
அது நீயில்லை என்றாலும்,
ஏனோ திரும்பிப் பார்க்கிறேன்..
அந்த நொடி அங்கே...
கடந்து சென்றாலும்
காதோரம் ஒலிக்கிறது..
நான் கேட்ட உன் பெயரொலி...
பேருந்து நிலையத்தில்,
விழியசைத்துப் பேசுகிறாள்
வழியோரம் பெண்ணொருத்தி..
விழி மூடிப் பார்க்கிறேன்...
விரிகிறது உன் பார்வை..
எங்கோ ஒலிக்கும் ஒரு குரல்..
என் செவியைத் தீண்டும் வேளை,
அது உன் குரலின் ஏற்ற இறக்கங்களாய்
என் மனதில் அலைபாய்கிறது..
உனக்குப் பிடித்த குளிர்பானம் முதல்,
நீ அடிக்கடி கேட்கும் பனிக் கூழ் வரை,
தனித்து செல்லும் என்னிடம்,
தகராறு செய்கிறது...
" அவள் வரவில்லையா?? " என்று
உன் முகமே தெரிகிறது...
அசலாகவும்.. நிழலாகவும்...
உறக்கம் கலைந்தது முதல்,
உறங்கப் படுக்கும் வரை...
இல்லை... இல்லை..
உறக்கங்களிலும் கூட...
இப்படியாக,
யாரென்று தெரியாத முகங்களில்,
உந்தன் கண்ணசைவை
உந்தன் புன்சிரிப்பை,
இப்படி உந்தன் ஏதோவொன்றை
பிரதிபலிக்கிறார்கள்..
நீ அருகிலில்லாத எந்தன் பயணங்களில்..
அவர்களை கடக்கும் அந்த நொடி,
எங்கோ நீ இருந்தாலும்,
என் கண் முன்னே விரிந்து..
நீள்கின்ற வானமாய்...
என் மனத்திரையில்...
அப்போது ,
வெட்கப் புன்முறுவலோடு,
எள்ளி நகையாடும் உன் விழிகள்,
சொல்லாமல் சொல்கிறது என்னிடம்,
"என்னடா!!!.
காதல் பைத்தியம்..
கண்களை மறைக்கிறதா????? " என்று...
அப்படி கேட்கும் உன்னிடம்
எப்படி சொல்வேன் நான்...
"உன்னைக் காண முடியாத நேரத்தில்,
உன் நினைவுகளே பிரதிபலிக்கின்றன...
ஏதோவொரு செய்கையாய்...
எதிர்வருபவரிடம்....
எத்துனை பிரதிபலித்தாலும்,
அசலை எண்ணியே தவிக்கிறது...
அன்றில் பறவையாய் ஆழ்மனது..
உன் முகம் காணும் நொடிக்காக.. "
✍️ கவிஞர் விஜயநேத்ரன்