ஆணி வேர் வீழ்ந்தாலும் அடையாளம் மாறிடுமோ??.. ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
கையிலா தூக்கி வச்சு,
கண்ணமூடி வேண்டிகிட்டு
வம்சத்த தழைக்க வைக்க,
வழி கொடுத்தான் கருப்பனுன்னு,
சாமியாடி சொன்னதுல,
குதூகலமா ஆயிட்டாங்க...
குடும்பத்துல மொத்தப்பேரும்...
மாரியாத்தா மனசுவச்சு
மகனாவே கொடுத்திருக்கா,
நேந்துகிட்டா கிடாரெண்டை,
நிறைமனசா கொடுத்துடுவோம்
குத்தங்குறை இல்லாம,
கொழந்தையக் காத்துக்கோனு,
அழகம்மை ஆசி சொன்னா..
அம்மனையும் வேண்டிநின்னா..
தொட்டிக்குள்ள கெடந்தவனைத்
தொட்டுத் தூக்கி கொஞ்சி விட்டு,
முழியப்பாரு அப்பஞ் சாடையென
முனியாண்டி தாத்தா சொல்ல,
வைரத்தா பாட்டி சொன்னா..
மூக்கப்பாரு ஆத்தா மாரி..
செத்துப் போன தாத்தனே
புள்ளையாகப் பொறந்திருக்கான்.
விட்டுப்போன ஒறவப்பாக்க
வீடு தேடி வந்திருக்கான்.
பக்குவமா பாத்துக்கோனு,
பாத்துப் பாத்து சொன்னாரு
பொங்கி வந்த கண்ணீர
பொறங்கையில் துடைச்சுக்கிட்டு.
கூட்டாளி நாபகத்த கூடயே சொமந்திருந்த,
தொண்ணூறு வயசான தொரைராசுக் கிழவன்.
வளர்ந்து போகையில,
வழியில பாக்கையில,
யாரோ ஒரு ஆளு,
இது யாரு' னு கேட்டாக்க,
'இன்னாரு புள்ள' யுனு
தெரிஞ்சவங்க சொன்னாங்க...
ஐயனும் ஆத்தாளும்
பக்கத்துல இல்லேனாலும்,
அவுகளோட மவனாக
அடையாளம் கொடுக்கிறாங்க...
அய்யாவும் ஆயாவும் ,
மண்ணவிட்டுப் போனாலும்,
அவங்களோட பேரனாத்தான்...
ஊருக்கார பாக்குறாங்க.
பனைமர உசரத்துல
பாதிவர வளந்தாலும்,
ஜில்லாக் கலெக்டர்னு
நல்லா பேரு வாங்கினாலும்,
அவங்களோட பிரதி தானே..
ஆயுசுக்கும் ஒலகத்துல....
அடிமரமே மறைஞ்சாலும்
ஆலமர விழுது வாழும்..
அவதாரம் மாறுனாலும்
அடையாளம் அவர்தானே..
அடுத்த தலைமுறையா
அது பே(வே) ரா நாளும் நீளும்.
✍️ கவிஞர் விஜயநேத்ரன்