ஆனந்த யாழ் மீட்டிய அற்புத மகள் - நீயா நானா சிறப்பு கவிதை
✍️ கவிஞர் விஜயநேத்ரன்
கரத்தில் வாங்கிய மகளின் தர அட்டையை,
கையெழுத்திட்டுவிட்டு,
கண நேரத்தில் கடந்துவிடுவதாக,
பெருமை பேசுகிறாள்...
பட்டங்கள் பெற்ற தாய்...
அட்டையில் இருந்த மதிப்பெண்களும்,
அன்றாடம் காணும் சாதாரண ஒன்றாக,
அலுவலகக் கோப்புகளாய்
பத்தோடு பதினொன்றாகக்கூட,
உள்ளத்தில் தோன்றியிருக்கலாம்..
அதிலொன்றும் தவறுகள் இல்லை..
அதையாறும் குற்றமும் சொல்லவில்லை..
அவளெங்கே தோற்றால் தெரியுமா??..
அத்தனை பேர் கூடிய அரங்கில்,
அவளுடன் வாழ்கின்ற துணைவனை,
அற்பமாய்ப் பேசிய அந்த வார்த்தைகளில்..
எங்கோ அமர்ந்து ஏபிசிடி படிப்பாரென்று
ஏளனமாய் அவள் பேச,
என் தந்தை தோற்கவில்லை என்று
ஆதரவாய் மகளணைக்க,
அத்தனை வலிகளும் மறைந்து போயிருக்கும்...
அந்த நொடியிலே மறந்து போயிருக்கும்...
அந்த மனிதனுக்கு...
எழுபது எண்பது என்று
அட்டையில் தெரிந்த எண்களெல்லாம்,
அவர் சுமக்கும் கனவுகளென்று,
அற்புதமாகச் சொன்னார்...
அற்பமாய் நினைத்தவர்களுக்கு...
எண்ணாலும் எழுத்தாலும் மட்டுமே,
இவ்வுலகம் இயங்கிவிடுவதில்லை..
எண்ணங்களின் துணையாலும்தான்..
ஆம்...
படித்தவன் உலகைக் கண்களால் பார்க்கிறான்..
பாமரன் உலகை மனதால் பார்க்கிறான்...
இன்னும்....
பட்டங்கள் பெற்றாலும்,
பகுத்தறியப் பழகுங்கள்..
மட்டமாய்ப் பேசாமல்,
மனிதத்துடன் பேசுங்கள்...
மனதால் பாருங்கள்...
மனிதத்துடன் வாழுங்கள்...
மகத்துவத்தை அடைவீர்கள்...
வாழ்த்துக்களுடன்,
✍️ கவிஞர் விஜயநேத்ரன்