காட்சிகள் ஒரு விதம் காண்பது பலவிதம் - ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
காட்சிகள் ஒன்றுதான்
இவ்வுலகில் அனைவருக்கும்....
காண்பவர் விழிகளே
காட்சிப்படுத்துகிறது வெவ்வேறாய்...
மானொன்றைத் துரத்தும் புலி
மானிடற்கு அது வெறும் காட்சி...
துரத்தும் புலியதற்கும்,
ஓடும் மானதற்கும்,
மட்டுமே தெரியும்...
அது வாழ்க்கைப் போராட்டமென்று...
உடல் வருத்தும் பசிக்காக,
ஊன் உண்ணும் புலியும்,
உயிர் பிழைக்கும் நொடிக்காக,
அலைகின்ற மானும்,
வாழ்கிறது இங்கே..
எதிரெதிர் நிலைகளில்..
துரத்தும் புலிக்கிது
தொடர்கின்ற கதை...
ஓடும் மானிற்கோ,
பிழைத்தால்தான் கதை..
உணவுக்காகத் துரத்தும் புலியை
உற்சாகப்படுத்துவர் சிலர்...
உயிர்க்காக ஓடுகின்ற மானுக்காக
பரிதாபப்படுவர் சிலர்...
இந்த உற்சாகமோ, பரிதாபமோ
ஒன்றையும் மாற்றுவதில்லை...
அங்கே...
இங்கே,
புலி வென்றதும், மான் தோற்பதும்
சரியென்றோ தவறென்றோ
சரித்திரத்தில் இல்லை..
அதனதன் பார்வையில்
அவ்வளவும் சரியே..
மனதால் சிந்தித்தால்
மகிமையை உணரலாம்..
மனித வாழ்க்கையின்
மகத்துவத்தை அறியலாம்...
விழி பார்க்கும் காட்சிகள்
ஒன்றாக இருந்தாலும்,
விதிகாட்டும் பாடங்கள்
ஒன்றாக இருப்பதில்லை..
சரியென்றும் தவறென்றும்
ஒன்றுமேயில்லை இவ்வுலகில்...
நமக்குச் சரியாய்ப்படுவது
மற்றவர்க்கு தவறாகலாம்...
நமக்குத் தவறாகப்படுவது
மற்றவர்க்கு சரியாகலாம்...
அவரவர் சூழலே தீர்மானிக்கிறது
அதை சரியென்றும் தவறென்றும்...
அவரவர் விருப்பம் ஈடேறும்..
அவரவர் நிலையில் சிந்தித்தால்.
ஆழ்மனதில் அன்பொழுகும்..
அடுத்தவர் நிலையை சிந்தித்தால்...
நாற்றிசையும் இன்பம் பெறும்...
நடுநிலையோடு சிந்தித்தால்...
பார்த்தனும் சாரதியும் வென்ற
பாரதக்கதை சொல்லும் நீதியும் இதுதான்..
கண்ணனும் காந்தாரனும்,
கர்ணனும் காண்டீபனும்,
துரியனும் தர்மனும்,
விதுரனும் வீஷ்மனும்,
நமக்கு உரைப்பதென்ன.??
உள்ளத்தால் அறிந்துணர்ந்தால்,
உலகையே வென்றிடலாம்...
உண்மையின் பக்கம் நின்றால்,
இறைவனையே வென்றிடலாம்..
சிந்தித்து செயலாற்றுங்கள்
✍️கவிஞர் விஜயநேத்ரன்