
என்ன செய்தாயடா கள்வனே என்னை!!! ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
இது என்ன விந்தை....
என்ன செய்தாயடா என்னை...
என் கள்வனே...
எங்கோ இருந்தாலும்,
உன் அருகாமை உணர்கிறேன்...
என்னுள்..
இலை தீண்டும் காற்றாக
என் மனம் தீண்டிப் போகிறாய்...
யாருமறியாமல்.
என்ன செய்தாயடா என்னை...
என் கள்வனே...
அன்றாடப் பொருட்களெல்லாம்,
என்றோ நீ சொன்ன வார்த்தைகளை,
என் நினைவிற்குள் சொல்லி,
கேலி செய்கிறது...
என்னை...
திரையில் வரும் காட்சிகள்,
ஏதோ ஒரு நொடியில்,
எதிரொலி(ளி)க்கிறது..
என்னுள்..
உன் முகமாய்..
உன் குரலாய்...
உன் குணமாய்..
என்ன செய்தாயடா என்னை...
என் கள்வனே...
இதயச்சிறைகளில் கண்ணடிக்கும்
ஆழ்மனதில் உறைந்த உன் சேட்டைகளால்,
அடிக்கடி வெட்கத்தைச் சுகிக்கிறேன்...
அடுத்த நொடி நாணத்தால் சிவக்கிறேன்...
பெண்ணாய்...
என்ன செய்தாயடா என்னை...
என் கள்வனே...
தனியாகச் சிரிப்பதாய்,
தாயென்னை சீண்டுகிறாள்...
குழைவாகப் பேசுவதாய்,
தோழியென்னைப் பழிக்கிறாள்...
வேறங்கோ இருப்பதாக,
வீட்டிலுள்ளோர் கேட்கிறார்கள்...
என்ன செய்தாயடா என்னை...
என் கள்வனே...
உணவைக் கண்டால்,
உலகத்தை மறப்பேனென்று
உற்றார் கேலி செய்த என்னை,
உன்னையே நினைக்க வைத்தாய்...
உணவையும் மறந்து...
என்ன செய்தாயடா என்னை...
என் கள்வனே...
ஒன்பது மணிக்கெல்லாம்,
உறங்குமென்னை நீ,
ஒன்றானாலும் உறங்கவிடுவதில்லை...
நினைவென்னும் கல்லெறிந்து...
என் நித்திரைக்குள்...
என்ன செய்தாயடா என்னை...
என் கள்வனே...
சில நேரங்களில்
தலையணைகள் நீயாகி,
என் தனிமையை வெல்கிறாய்...
பல நேரங்களில்,
தலையணைகள் துணையாக,
என்னைத் தனிமையில் கொல்கிறாய்...
என்ன செய்தாயடா என்னை...
என் கள்வனே...
பசலை வந்த தலைவிகளைப்
பாடத்தில்தான் படித்திருந்தேன்..
பார்த்த நொடி முதலென்னை,
பாடாய்ப்படுத்துகிறாய்..
பார்வைக்கு தூரமாகி..
பசலைக்குப் பேரமாகி...
என்ன செய்தாயடா என்னை...
என் கள்வனே...
என்ன செய்தாயடா ...
என் கள்வனே...
என்னை...