
காதலின் உயர்நிலை : காலத்தை வெல்லும் காதல்
இருபுறமாய் தாங்கினாலும்,
ஒருமுகமாய்ச் செல்லும்,
மாட்டு வண்டிதான்..
மணவாழ்க்கை..
யாரோ ஒருவரென
எங்கெங்கோ பிறக்கிறார்கள்...
ஆணென்றும் பெண்ணென்றும்...
ஏதோ சூழ்நிலையில்,
எதிரெதிரே நிற்கிறார்கள்..
புதிரான உறவென்று...
சொந்தங்கள் இணைப்பாலோ
சொர்க்கத்தில் வசத்தாலோ,
கணவன் மனைவியென்று
கையொப்பம் இடுகிறார்கள்...
இருவராய் இருந்தாலும்,
இதயத்தால் இணைந்து,
இல்ல(றத்)தில் சிறந்து,
நல்லறமாய் நகர்ந்திட..
உள்ளுக்குள் பிறக்கிறது...
உள்ளத்தின் காதலது...
பார்ப்பதும் சிரிப்பதும்
பன்மடங்கு மகிழ வைக்கும்...
முதல் நிலையில்...
பேசும் வார்த்தையதில்
பெரும் இன்பம் பயக்கும்...
இரண்டாம் நிலையில்...
தொட்டுப் பேசுவதிலும்
கட்டி அணைப்பதிலும்,
காதலை வளர்க்கும்....
அடுத்த நிலையில்..
முத்தத் துளிகளிலும்,
மோட்சம் பெறுவதிலும்,
முழுதாய் மகிழும்...
காதலின் காலங்கள்...
பித்தாய் இருந்த முத்தங்கள் கூட
பழகிப் போகும்...
புதிதாய் என்னவென்று மனம்
தேடிப் போகும்...
தொட்டுப் பேசி கட்டியணைத்தும்,
எட்டி நின்று விட்டுக்கொடுத்தும்,
மகிழ்வில் புன்னகைத்தும்,
நெகிழ்வில் நீர்வடித்தும்,
வலியில் துணைநின்றும்,
வாழ்க்கையை உணர வைக்கிறது...
"காதல் "
அதன்பிறகு...
பார்ப்பதும் சிரிப்பதும்,
பார்வையில் மகிழ்வதும்
தொட்டுப் பேசுவதும்,
கட்டி அணைப்பதும் கூட
இயல்பாக மாறிப்போகும்....
ஆம்...
காதலின் அடுத்த நிலையென்ன...
சதிராடத் துவங்கும்..
அவ்வளவு தானா காதலென்று
அலைபாயத் துவங்கும்...
அந்த ஆழிப்பேரலையில்,
கரையுடைந்து திசைமாறாமல்,
கட்டமைத்துக் கொள்கிறார்கள்...
காதலை உணர்ந்தவர்கள்...
ஆம்..
காதலின் உன்னத நிலையை
காதலால் அடைகிறார்கள்....
அது
புரிதலென்னும் புதிய நிலை..
அரிதாரம் நிகழும் அற்புதநிலை..
இதற்கு,
வார்த்தையில் விளக்கமுடியாத
வாழ்வியலின் அதிசய நிலை..
ஆயிரம் முறை சொல்லும் தருணங்களை விட,
அருகருகே பல்லாண்டு வாழும் நிமிடங்களை விட,
உடைந்து நொறுங்கும் ஓர் நொடியில்,
உறுதுணையாய் நானிருக்கிறேனென,
என்று சொல்லாமல் உணர்த்திவிடுகிறது..
காதல் தன் ஆழத்தை...
ஆம்...
அதுதான் காதல்....
அது புரிதலுள்ள இதயங்களில்,
புதைந்து வாழ்கிறது...
அன்றும்.. இன்றும்.. என்றும்..
நரை முளைத்தாலும்,
திரை விழுந்தாலும்,
கரை கடந்தாலும்,
காலம் முடிந்தாலும்,
புரிதலுள்ள காதல்,
உயிர்த்துக் கொண்டே இருக்கும்...
உள்ளுக்குள்...
வார்த்தைகளால் விளக்கமுடியாத
வரலாற்று பொக்கிஷம்
"காதல்"
வரையறைக்குள் நிறுத்தமுடியாத
வார்த்தை மாயாஜாலம்
"காதல்"
பரிமாண வளர்ச்சியில்,
தகவமைத்துக் கொண்டு,
தனித்து நிற்கிறது
வார்த்தைகளாய் பல இடங்களிலும்,
வாழ்வியலாய் சில இடங்களிலும்,
"காதல்"
உங்கள்,
கவிஞர் விஜயநேத்ரன்