
வாழ்க்கை சந்தை : இங்கு அனைத்தும் விற்பனைக்கு
வாழ்க்கை சந்தையிது
கடைவிரித்து காத்திருக்கிறது...
நமக்கு விற்பனை செய்ய..
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்,
மறுத்தாலும், தடுத்தாலும்...
மனதாலே வெறுத்தாலும்...
தேவை என்றெண்ணி
வாங்க நினைத்தாலும்,
தேவையில்லை என்று
வாங்காமல் கடந்தாலும்,
சரியாக விற்றுவிடுகிறது..
நம்மிடம் விற்க வேண்டியதை....
சரியாக விட்டுவிடுகிறது...
நம்மிடம் சேரவேண்டியதை...
அன்றாட வாழ்க்கையில்
ஆயிரம் நிகழ்வுகள்...
என்றேனும் நடந்திடும்
எதிர்பாரக் கனவுகள்..
உள்ளத்தின் நடுவினில்
இடமதைப் பிடிக்கும்..
உதடுகளின் ஓரத்தில்
புன்னகையாய் பிறக்கும்...
வஞ்சத்தை மனதில்
வழியெங்கும் நிரப்பும்..
வாழ்த்தாய் இதயத்தில்
வாழ்வெங்கும் சிறக்கும்..
சிலவற்றை
மறந்து செல்கிறோம்...
பலவற்றைக்
கடந்து செல்கிறோம்...
சிலவற்றில்
உடைந்து போகிறோம்...
பலவற்றில்
உருமாறுகிறோம்....
சிலவற்றில்
மகிழ்ச்சி அடைக்கிறோம்...
பலவற்றில்
சிரித்து நடிக்கிறோம்...
சிலவற்றிற்காக
கண்ணீர் வடிக்கிறோம்...
பலவற்றிற்காக
கண்ணீரின்றி வாழ்கிறோம்....
பள்ளங்களும் மேடுகளும்,
இன்பங்களும் துன்பங்களும்,
கண்ணீரும் புன்னகையும்,
விருப்புகளும் வெறுப்புகளும்,
நட்பும் பகைமையும்,
உதவியும் துரோகமும்,
உள்ளன்பும் வயிற்றெரிச்சலும்,
காத்திருக்கின்றன...
கடை விரித்து வழியெங்கும்...
சில நேரங்களில்
நாம் வாங்குகிறோம்...
தேவை என்றெண்ணி...
பல நேரங்களில்,
விற்கப்படுகின்றன...
தேவை இல்லாவிட்டாலும்...
ஆனால்,
இந்த ஒரு வழிப்பாதை
ஒன்றுபோல் அமைவதில்லை..
ஒருவரைப் போல் மற்றவர்க்கு...
அவரவர்கள் பயணிக்கிறார்கள்..
அவரவருக்கு அமைக்கப்பட்ட,
விதியென்னும் கடைத்தெருவில்...
நாமும் பயணிப்போம்...
நமக்கான சிந்தனையுடன்...
உங்கள்..
✍️ கவிஞர் விஜயநேத்ரன்.