Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

இராஜேந்திர சோழன்: பார் போற்றும் தமிழ்வேந்தன்

Copied!
Kavignar Vijayanethran

இராஜேந்திர சோழன்: பார் போற்றும் தமிழ்வேந்தன்

ஆலிலையில் துயிலுறைந்த அனந்தனின் அம்சன்
ஆழிக்கலமேறிப் போரிட்டு வென்ற அதிசயன் 
வேளிர்த் தோன்றல் பலரையாண்ட வேங்கையன்
அகிலம் வியந்திடும் முத்தமிழ்ப் பேரரசன்
அருண்மொழிப் பெற்றெடுத்த அருந்தவப்புதல்வன் 
அழகிய கங்கை கொண்ட சோழபுரம் அமைத்த அற்புதன்
ஆடித் திருவாதிரையில் அவதரித்த பெருந்தலைவன் 
மூவேந்தரவருள் முன்னின்ற பெரும் மும்முடிச்சோழன்
மாவேந்தனந்த மதுராந்தகனுக்கோர் புகழ்மாலையிதை 
பொற்பாதமதில் சமர்ப்பணமாய்ப் படைக்கின்றேன்...

இமயம் சென்று புலி இலச்சினைப் பொறித்து
இனிய காவிரி நடுவினில் கல்லணை தந்த 
இளஞ் சென்னியின் வளவன் திருவடி போற்றி
வளங்கொண்ட  தஞ்சையைத் திருபுறம்பயத்தில் வென்று 
வியத்தகு சோழராட்சிக்கு வித்திட்ட விஜயாலயனின் 
வீரச் சுவடுகளைப் போர்க்களங்களில் புரிந்து
எந்தையும் தாயும்  வாழ்ந்த மண்ணில்
விந்தைத் தமிழும் வியந்து கொண்டாடுமவன்
தந்தையை மிஞ்சிய தனையனெனப் பெயரெடுத்து 
தஞ்சையிலிருந்துத் தலைநகரதை மாற்றியமைத்து 
தரணியாண்டத் தமிழ்ப் பெருந்தலைவனாம்;

வேங்கியில் வெற்றிக் கால்தடமதைப் பதித்து 
கங்கமும் நுளம்பியும் தாண்டிக் கடிகைக் குடகோடு 
சங்கடந் தந்த கலிங்கரவரை யடக்கி வாகை சூடி 
சிங்களச் செருபகையழித் தவரைச் சிறையிட்டு 
செழியனின் முடியாரமதை மீட்டெடுத்து வந்து 
ஆழியதிலிறங்கி முந்நீர்ப்பழந்தீவை முறைப்படுத்தி 
வடதிசை எல்லையாய்க் கங்கையை அரணமைத்து
குடதிசை யதனில் மகோதயபுரந் தொடங்கி 
தென்திசை ஈழம் முழுமையும் வென்றெடுத்து
குணதிசைக் கலமேறிக் கடாரங் கொண்டவனாய் 
மனங்களில் நிறைகின்ற மாதாண்ட நாயகனாம்;



வடிநிலக் காவிரியின் வளமான தஞ்சை விடுத்து 
வறண்ட நிலமதனில் தலைநகரை வடிவமைத்து 
அகன்ற ஏரியொன்றை ஆழ்பட வடித்தெடுத்து 
அக்கரையில் மனையொன்றை அழகுறக் கட்டி
அரணாயதைச் சுற்றி யகழியதை உருவாக்கி 
மரக்கலங்கள் மனைவரை வந்திடநல் வழியமைத்து 
மந்தாகினி நீரெடுத்து முக்கண்ணனுக்கு மனையெழுப்பி 
மங்கலஞ்சூழ் குடமுழுக்கு நீராட்டி மகிழ்ந்த
கங்கைகொண்ட கோப்பரகேசரி வர்மனவாம்;

திங்களைச் சிகையில் சூடிய திருநீலகண்டனுக்குக்
கங்கை கொண்ட சோழீஸ்வரராய் திருநாமமிட்டு - சோழ 
கங்கமதோடு சிவாலயங்கள் பலயெழுப்பி 
திருக்காளத்தியப்பனுக்கு மிகைமனையமைத்துத் 
திருமலைராயராற்றுக் கரையிலொரு பள்ளிப்படைதனைத்
தன்னை வளர்த்தெடுத்த சிற்றன்னையவளுக்கு
தனையனாய்  பஞ்சவன்மாதேவீச்சரம் எழுப்பித்தத்
தானவினோதரனெனும் தமிழ்ப் பேரரசனாம்;

பஞ்சவன் மாராயன் அறிவில் பண்டிதச்சோழன்
கங்கையும் கடாரமும் கொண்ட அய்யனவன் 
மனுகுலச் சோழன் மகிபாலகுலக் காலனவன்
மங்கல நாயகனாம் மதுராந்தகனென்னும் 
வேங்கை வேந்தன் இராசேந்திர சோழனவன் 
அவனியில் அவதரித்த ஆடித் திருவாதிரை நன்னாளில் 
அவனடிப் பணிந்துத் திருவடி போற்றுவோம்......

✍️ கவிஞர் விஜயநேத்ரன்
Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

மாவீரர் மருதிருவர் : மறைக்கப்பட்ட வரலாறும் மறக்கக்கூடாத தியாகமும்

மாமன்னர் இராஜராஜ சோழன் : ஐப்பசி சதய அவதாரத் திருநாள் - சிறப்பு கவிதை

Copied!