மருதிருவரின் மாவீரம் : மறைக்கப்பட்ட வரலாறும் மறக்கக்கூடாத தியாகமும்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், ஆங்கிலேயரின் அடிமை விலங்கொடிக்க மக்களை ஒன்றாய் இணைத்ததில் பெரும் பங்கு அமிர்தசரஸில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். செங்குருதி ஆறாய்ப் பெருக மக்களை விலங்கினும் கீழாய்ச் சுட்டுக் கொன்றதைப் படிக்கும் ஒவ்வொரு இந்தியனின் இதயமும் சற்று நின்றே துடிக்கும். அன்று காற்றில் கலந்த குருதியின் வாடையில்தான் இன்று நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்நிகழ்வுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாக, கிபி 1801ல் நம் இரத்தத்தையும் சதையையும் உறைய வைக்கும் ஒரு நிகழ்வை ஆங்கில அரசு அரங்கேற்றியிருக்கிறது. அடிமைத்தனத்திற்கு எதிராக எழுந்த முழக்கம் யுத்தமாய் உருவெடுத்து, பரங்கியர் ஆட்சிக்குப் பயம் காட்டியது. அப்பெரும் யுத்தத்தின் முடிவில், ஒரு இனமே மொத்தமாய்ச் சித்ரவதை செய்யப்பட்டு, கூண்டோடுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது.
மாவீரர் பலர் செங்குருதி சிந்திய வரலாற்றின் கருப்பு தினம் நடந்தது வேறு எங்கும் அல்ல.
நமது தமிழ்நாட்டில்தான்...
அந்த மாபெரும் யுத்தம் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். வரலாறாய் மறைந்த அந்த மாவீரர்களின் பெயர்களையாவது தெரிந்து வைத்திருக்கிறோமா??..
இதுவரை மறந்தவர்கள், இனியேனும் தெரிந்து கொள்ள முயற்சிப்போம்.
அன்னை பூமியின் அடிமை விலங்கொடிக்க தங்கள் செங்குருதி சிந்த, இன்னுயிர் ஈந்த வரலாற்றில் மறைக்கப்பட்ட முக்கிய நிகழ்வினை இங்கு காண்போம்...
முதல் சுதந்திர முழக்கம்:
இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்டது நம் தாய்த் தமிழ் மண்ணில்தான். வீரன் அழகு முத்துக்கோன், மாவீரன் பூலித்தேவன் என 1750களிலேயே, வெள்ளையரை எதிர்த்து குரல் கொடுத்து, மாபெரும் யுத்தம் செய்து, வஞ்சத்தாலும் சூழ்ச்சியாலும் தாய் மண்ணின் மானம் காக்க, பலரும் தங்கள் செங்குருதி சிந்தி வீர சொர்க்கம் அடைந்தனர். ஆனால் இந்திய வரலாற்று ஏடுகளில் இதைப் பற்றிப் பெரிதாய் எவரும் பேசுவதில்லை. அப்படி திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒரு சரித்திர நிகழ்வே இதுவும்.
சிவகங்கை சீமை:
சிவகங்கை சீமை என்றதுமே நம் மனங்களில் முதலில் வருவது வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களே. அந்த வீரமங்கையின் அன்புக்குப் பாத்திரமாய் இருந்து, சிவகங்கை சீமையின் காவல் நாயகர்களாய் விளங்கியவர்கள் மருதிருவர் என்றழைக்கப்படும் மருது பாண்டிய சகோதரர்கள். இம்மாவீரர்கள், ஆங்கில அரசால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட சிவகங்கைச் சீமையின் அரசர் முத்துவடுகநாதரின் மரணத்துக்குப் பழி தீர்க்கும் விதமாக, மறைமுகமாகப் படைதிரட்டி கோட்டையிலிருந்த வெள்ளையரை விரட்டியடித்து சிவகங்கையை மீட்டு வேலுநாச்சியாரை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தனர். அம்மாவீரர்களின் வரலாற்றில் சற்றே பின்னோக்கிச் செல்வோம்.
மருதிருவரின் வீரம்:
சேதுச்சீமை என்றழைக்கப்படும் இராமநாதபுரத்தின் அரசர் சேதுபதி, தன் மகளான வேலுநாச்சியாரைச் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்குத் மணம் செய்து கொடுத்தார். மகளின் மீது பேரன்பு கொண்ட அரசர், மருதிருவரை அவரின் பாதுகாப்புக்காகச் சிவகங்கைக்கு அனுப்பி வைத்தார்.
மருதிருவர் என்ன அவ்வளவு பெரிய வீரர்களா??.
சிவகங்கையில் பாதுகாப்புக்கு வீரர்களே இல்லையா?
இது போன்ற கேள்விகள் சிலர் உள்ளத்தில் உதிக்கலாம்.
அதற்கான பதில் என்னவென்றால்.....
ஆம்.. என்பதுதான்...
கத்தியையும், துப்பாக்கியையும் கையிலெடுத்து வேட்டைக்குச் செல்வோர் மத்தியில், வெறுங்கையால் வேங்கையுடன் நேருக்கு நேர் சமர் செய்து வீழ்த்தும் ஆற்றல் கொண்டவர் பெரியமருது. பலமான நாணயத்தை வெறும் விரல்களால் வளைக்கும் அளவுக்கு கரவலிமை கொண்டதோடு, தொடுவர்மக்கலையிலும் தனித்திறன் பெற்று விளங்கியவர். வளரி என்னும் பேராயுதத்தை துல்லியமாக வீசுவதில் வல்லவர்கள் மருது சகோதரர்கள்.
தெற்குச்சீமைகளைக் கைப்பற்றிய கம்பெனி:
ஆங்கில அரசிற்கு சாமரம் வீசிய ஆற்காடு நவாப், தென்னிந்தியாவில் வரி வசூலிக்கும் உரிமையைப் பங்கிட்டு மகிழ்ந்தார். ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிய கம்பெனிப்படை, வீரியமிக்க மறுத்தவர்களை யுத்தத்தில் வீழ்த்தி, அம்மண்ணை அடிமையாக்கிக் கொண்டது.
சேதுச்சீமையான இராமநாதபுரத்தை 1772ல் கைப்பற்றிய ஆங்கிலத்தளபதி ஜோசப் ஸ்மித்தின் பார்வை சிவகங்கையின் மீது திரும்பியது.
இச்சமயத்தில் காளையார்கோவிலுக்கு இறைவனை வழிபடச் சென்றவரை, மறைந்திருந்து தாக்கியது பரங்கியர் படை. எதிர்பாராத இந்த தாக்குதலின் துப்பாக்கிச் சூட்டில், தன் இளையாராணியோடு இறைவனடி சேர்ந்தார் அரசர் முத்து வடுகநாதர். அரண்மனையில் இருந்த அரசி வேலுநாச்சியாரை தக்க சமயத்தில் காப்பாற்றினர் மருதிருவர்.
வேலுநாச்சியாரை அரியணையில் ஏற்றிய மருதிருவர்:
அச்சமயத்தில் அரிசியைக் காப்பாற்றும் நோக்கத்தில், அரசியோடு அவரது மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோரும் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.அனைவரும் காட்டில் மறைந்திருந்து, வெள்ளையருக்கெதிராகப் படைதிரட்டி தக்க சமயத்திற்காகக் காத்திருந்தனர்.
ஹைதர் அலியின் உதவியோடு ஆற்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் ஆங்கிலப்படைகளை வெற்றி கொண்டு, 1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர் மருது சகோதரர்கள். இந்த முக்கியமான யுத்தத்தில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். தானளித்த வாக்கின்படி தக்கசமயத்தில் ஹைதர் அலியின் படையும் மேற்கிலிருந்துத் தாக்கி வெற்றிக்கு உறுதுணையாய் நின்றது. வேலுநாச்சியார் மற்றும் மருதிருவரின் அன்பிலும், ஆற்றலிலும் உள்ளம் மகிழ்ந்த ஹைதர் அலி, வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு நேரில் வந்து வாழ்த்தினார்.
அரியணையில் அமர்ந்த மாமன்னர்கள்: மாபெரும் அந்த வெற்றிக்குக் காரணமான மருது பாண்டியர்களின் மீது பரங்கியரின் கோபம் அதிகமாகியது. ஆனாலும் வெள்ளையருக்கு எதிரான தமது முடிவில் திடமாக இருந்த இவர்கள் வெள்ளையருக்கு தொடர்ந்து சிம்மசொப்பனமாக இருந்து வந்தனர். மருதுபாண்டியரின் பங்களிப்பை உணர்ந்த அரசி வேலுநாச்சியார், தனது காலத்திற்குப் பிறகு பெரிய மருதை சிவகங்கையின் ஆட்சிக்காட்டிலை அலங்கரிக்க வேண்டுமென விரும்பி, அதனை வெளிப்படையாக அறிவித்தார். அவரது காலத்திற்குப் பிறகு அரியணையில் அமர்ந்த மருதிருவரை மாமன்னர் மருதுபாண்டியர்கள் என்று மக்கள் அன்போடு அழைத்தனர்.
பொற்கால ஆட்சி :
மருதிருவரின் ஆட்சியில் குறைவின்றி வாழ்ந்த மக்கள், அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர். ஆங்கிலேயரின் தூண்டுதலில் மக்களை அச்சுறுத்திய கள்வர்களை அடக்கி அமைதியை உண்டாக்கினர். சிவகங்கையின் பெருமைகளில் ஒன்றான காளையார்கோவிலை சீரமைத்துப் புதுப்பொலிவு அளித்தனர். குன்றக்குடி செந்திலாண்டவனின் கோவிலை புணரமைப்பு செய்து மகிழ்ந்தனர் மருதிருவர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பவனி வர அழகுத்தேரை அளித்தனர்.
இறைப்பணியை செவ்வனே செய்த மருது பாண்டியர்கள், தமிழுக்கும் தங்களின் பங்களிப்பை மறவாமல் நிறைவேற்றினர். அருந்தமிழை வளர்க்க பெரும்சங்கமும், நாடகக் கலையினை வளர்க்க பொருளுதவியும் செய்து பெருமை சேர்த்தனர். இவ்வாறு அருள் வழங்கும் இறைவனுக்கு பெரும் பொருள் கொண்டு பணி செய்ததோடு, மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினர். சாதி மத வேறுபாடுகளின்றி பிற மத ஆலயங்களுக்கும் பொருளுதவி செய்தனர். விவசாயிகளுக்கு பல உதவிகளைச் சலுகையாகவோ, மானியமாகவோ வழங்கிடும் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்தனர்.
மாமன்னர் மருதுபாண்டியர்களின் நல்லாட்சி, படையுடன் இருந்த பரங்கியர் மனதில் கிலியை உண்டாக்கியது. இவர்களை வீழ்த்த சரியான தருணத்திற்காகக் காத்திருந்தது.
ஆங்கிலேயரின் பெரும்பகை:
வரி கட்ட மறுத்த வீரபாண்டிய கட்ட பொம்மனை வஞ்சக வலை விரித்து வீழ்த்தி, 1799ல் தூக்கிலிட்டுக் கொன்றது ஆங்கிலேய அரசு. வீரத்துடன் போரிட்டு சிறைப்பட்ட ஊமைத்துரை, அங்கிருந்து தப்பி தனது நண்பரான சின்ன மருதுவுடன் சேர்ந்தார். அறிவாற்றலும் பலமும் நிறைந்த பெரியமருது மற்றும் விடுதலை வேட்கை கொண்ட சின்னமருதுவுடன் இணைந்த ஊமைத்துரை வெள்ளையருக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தினர்.
முதல் சுதந்திர அறிக்கை :
சின்னமருது தனக்கிருந்த அரசியல் அறிவைப் பயன்படுத்தி, ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு வலுவான அணியை உருவாக்கினார். தாய் மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் சாதி மத இன வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகப் போராட அழைத்தார். 1801ஆம் ஆண்டு, ஜுன் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சி மற்றும் திருவரங்கத்தில் வெளியிட்ட இவ்வறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. இதுவே இந்திய தேசத்தின் முதல் சுதந்திர அறிக்கை ஆகும்.
ஜம்புத்தீவு பிரகடனத்தின் விவரம் :
இத்தேசத்தில் வசிக்கும் அனைத்து சாதியினருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். ஆற்காடு நாவாப் ஆங்கிலேயருக்கு இடமளித்து சுதேச ஆட்சியை விதவையாக்கிவிட்டார். ஐரோப்பியரும் நாவாப்புக்குக் கொடுத்த வாக்கை மீறி ஆட்சியைக் கைப்பற்றி, மக்களை நாய்களாய் நினைத்து அதிகாரம் செய்து வருகிறார்கள். ஒற்றுமையும் நட்பும் உங்களிடம் இல்லாத காரணத்தினால், அவர்களின் சூழ்ச்சி வலையில் வீழ்ந்து, தாய்நாட்டை அந்நியரிடம் ஒப்படைத்து விட்டனர். அந்த அன்பர்கள் ஆளும் பகுதிகளில் மக்கள் சோற்றுக்கு வழியின்றி அல்லாட, நீராகாரமே உணவாகிவிட்டது. இதனைப் பகுத்தாராய்ந்து புரிந்து கொள்ள இயலாது நிலையில் உள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும், கடைசியில் மனிதன் செத்தே ஆகவேண்டும். அதனால் பாளையங்களில் உள்ள அனைவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றிணைந்து, அந்த ஈனர்களின் பெயர்கூட மிஞ்சி இருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் இந்த தேசத்தில் ஏழை மக்கள் வாழமுடியும். அந்த ஈனர்களுக்கு நாயாய் தொண்டூழியம் செய்து பிழைப்போரை ஒழித்திட வேண்டும். மீசையுள்ள, போர்க்கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் அந்த ஈனர்களைக் கண்ட இடத்தில் அழித்து விட வேண்டும். ஐரோப்பியருக்கு தொண்டூழியம் செய்பவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடைக்காது என்பதை உறுதியாகச் சொல்வேன். இதை ஏற்றுக்கொள்ளாத வன் வைத்திருக்கும் மீசை என்னுடைய மறைவிட மயிருக்குச் சமம். இதை ஏற்காதவனின் பிள்ளைகள், மனைவியை ஐரோப்பியனுக்குக் கூட்டிக்கொடுத்துப் பிறந்தவர்கள். ஐரோப்பிய இரத்தம் உடம்பில் ஓடாதவர்கள் ஒன்று சேருங்கள். அதை அறிந்தவர்கள் மற்றவர்களுக்கு பரப்புங்கள். இந்த அறிவிப்பை சுவற்றிலிருந்து எடுப்பவன் பஞ்சமா பாதகங்கள் செய்தவனாவான்.
இப்படிக்கு,
மருது பாண்டியன்
பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி
இதன் மூலம் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட அனைத்து மக்களையும் தூண்டினார். மக்களும் பெரும் ஆதரவுடன் திரண்டு விடுதலைப் போரைத் தீவிரப்படுத்தினர். 1857ல் நடந்த சிப்பாய்க் கலகத்திற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே சின்னமருதுவின் ஜம்புத்தீவுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
விடுதலை யுத்தம்:
சின்னமருதுவின் இச்செயல் கண்டு அஞ்சிய ஆங்கிலேயர், விடுதலை முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததைக் காரணம் காட்டி 1801 மே 28 இல் சிவகங்கை மீது போர் தொடுத்தனர். ஏறத்தாழ 150 நாட்கள் இடைவிடாமல் நடந்த இந்தப் போரில் இருதரப்பும் நிறைய இழப்புகளைச் சந்தித்தது. ஆனால் நெஞ்சுரத்துடன் சண்டையிட்ட மருதிருவரின் திறம் கண்டு ஆங்கிலேயப் படை அஞ்சி சிதறி ஓடியது. மருதிருவரின் போர்த்திறம் கண்டு, இங்கிலாந்தில் இருந்து வீரர்களை களமிறங்கியது கம்பெனிப்படை. ஆனாலும் மருதுப்படையின் கொரில்லா தாக்குதலால் நிலைகுலைந்த ஆங்கில அரசு, வழக்கம் போல் தந்திரத்தைக் கையாண்டது.
சூழ்ச்சி வலை:
கட்டப்பொம்மனையும், ஊமைத்துரையையும் காட்டிக்கொடுத்த புதுக்கோட்டைத் தொண்டைமான், ஆங்கிலப் படைக்கு உதவியாக தனது படைகளை அனுப்பி வைத்தான். மருது படையைச் சேர்ந்தவர்களை பிடித்துக் கொடுப்போருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டது. அவர்கள் மறைந்திருந்த காளையார்கோவில் வனத்தை அழிப்பவர்களுக்குச் சன்மானமாக, அழிக்கப்படும் நிலம் 20 வருடத்திற்கு இலவச குத்தகையாக வழங்கப்படுமெனவும் அறிவித்தனர். போரின் போது ஒக்கூர் காட்டில் பதுங்கியிருந்த சின்னமருதை தொடையில் சுட்ட அவரது உதவியாளன் கருத்தானுக்கு வெகுமதி வழங்கியது ஆங்கில அரசு.
கோவிலைத் தகர்ப்பதாக மிரட்டிய கம்பெனி:
ஆங்கிலேயரின் சதியில் இருந்த தப்பிய மருதுசகோதரர்களைப் பிடிக்க முடியாமல் தவித்தது. அதனால் மருதிருவர் சரணடையாவிட்டால், அவர்கள் ஆசையாயக் கட்டிய காளையார்கோவில் கோபுரத்தை இடிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தது. அக்கோயிலின் மீது தமது உயிரையே வைத்திருந்த மாவீரர் இருவரும் வெள்ளையனிடம் சரணடைந்தனர். காளையார்கோவிலில் களோனல் அக்னியூ மருது சகோதரர்களை கைதுசெய்து சிறையிலடைத்தார். பாகனேரி அரசர் வாளுக்கு வேலி அம்பலம் மருது சகோதரர்களை மீட்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனாலும் அவரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து, மருதிருவரின் விடுதலைப் போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சித்ரவதையும் இனப்படுகொலையும்:
1801-ம் வருடம் விதியால் வெல்லப்பட்ட மருதிருவரின் குடும்பத்தினர் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர், பின்பு எந்த விசாரனையும் இன்றி உடனடியாக தூக்கிலிடப்பட்டனர்.
சின்ன மருதுவைப் பிரத்தியேகமாக இரும்புக்கூண்டு ஒன்றைத் தயாரித்து அதில் திருப்பத்தூர் அழைத்து வந்து அந்தக் கூண்டோடு தூக்கிலிட்டுள்ளான் “மேஜர் அக்னியூ”. 1801 ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தூக்கிலிடப்பட்ட மருதிருவரின் உடலை, இரண்டு நாட்கள் துக்கிலேயே தொங்கவிட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பில் இரண்டு நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். மொத்தமாக மருது வீரர்களையும் சேர்த்து 500 பேர் தூக்கிலிடப்பட்டார்கள். இறந்தவர்களின் உடலைத் தலைவேறு உடல்வேறாகப் பிரித்து உடலைத் திருப்பத்தூர் வீதிகளில் எறிந்தனர். தலைகளை நகர வீதிகளில் வேல் கம்புகளில் செருகிப் பார்வைக்கு வைத்து தமது வக்கிரத்தை வெளிப்படுத்தியது ஆங்கில அரசு. ஊரெங்கும் வெட்டிய உடல்களும், இரத்தமும் சிதறிப் பிணக்காடாகக் காட்சி அளித்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு மருது சகோதரர்களின் உடலினைத் தூக்கிலிருந்து இறக்கி, அவர்களது தலையைத் தனியாக வெட்டி எடுத்தனர். மருதிருவரின் விருப்பப்படி அம்மாவீரர்களின் தலைகள், காளையார்கோவில் கோவிலின் முன்பாக அடக்கம் செய்யப்பட்டது.
சின்னமருதுவின் மூத்த மகன், உற்றார், உறவினர், போர் வீரர்கள் என மருது பாண்டியர் வம்சத்தையே, கூண்டோடு மொத்தமாய்த் தூக்கிலிட்டனர். அதைக் கண்டு அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை..
போர் முடிந்த நேரம் மருதுவின் குடும்ப வழியில் இருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டார்கள் . சுருக்கமாக சொன்னால் ஒரு வம்சத்தையே “மேஜர் அக்னியு” தூக்கிலிட்டு கொன்றழித்துள்ளான்..
கடைசியாக சின்னமருதுவின் பதினைந்து வயது மகன் துரைச்சாமியை, வயதைக் காரணம் காட்டித் தூக்கிலிடவில்லை. ஆனால் அவன் உடல் முழுவதும் சங்கிலியால் பிணைத்துக் கால்களில் இரும்புக்குண்டை கட்டி விட்டு, அவனது தந்தை, பெரியப்பா, சகோதரன், பங்காளிகள் என அனைவரும் தூக்கில் தொங்கும் காட்சியைக் காண வைத்தது கொடுமை. அவனோடு சேர்த்து இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேனையும் உடல் முழுவதும் சங்கிலிகளால் பிணைத்து, நடக்க முடியாத அளவிற்கு இரும்புக்குண்டுகளை அந்த வீரனின் கால்களிலும் கட்டி விட்டிருந்தார்கள். இந்த வீரனை விட்டு வைத்தால், துரைச் சாமியை வெள்ளையருக்கு எதிராக உருவாக்கி விடுவான் என்ற பயம் வெள்ளையருக்கு. அதனால் அவனையும் சங்கிலியால் கட்டி, நாடு கடத்த உத்தரவிட்டான் கர்னல் வெல்ஷ் என்ற வெள்ளை அதிகாரி. 72 பேரில் இவர்கள் இருவரை மட்டும் இரும்பு குண்டுகளால் பிணைத்திருந்தார்கள். இரும்புக்குண்டுகள் பிண்ணைக்கப்பட்ட நிலையில் சேக் உசேனும் துரைச் சாமியும்,
தளபதிகளும் கப்பலில் ஏற்றி, பிரின்சு ஆப் வேல்சு (இன்றைய மலேசியாவில் உள்ள பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தியது
இப்படித்தான் 1801 அக்டோபர் 24ல் ஒரு இனமே அழிக்கப்பட்டது. வீரத்துடன் போரிட்ட ஒரு இனமே, கூண்டோடு கருவறுக்கப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்திற்கான ஒரு மிக முக்கிய நிகழ்வு நடந்தேறிய இந்நாளை மறவாமல், அவர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவது சுதந்திரக் கனவை சுவாசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்..
மாவீரர்களைப் போற்றும்,
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்