மருதநாயகம் : நாயகனா?? வில்லனா???
மருதநாயகம்..
இந்தப் பெயர் 1997ஆம் ஆண்டிற்கு முன்பு வரை, ஒரு சில வரலாற்று ஆர்வலர்களைத் தவிர, அதிகம் அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. அதற்குப் பிறகு யார் இந்த மருதநாயகம் என்று பலராலும் அதிகம் தேடப்பட்ட பெயர் இதுவாகத்தான் இருக்கும். அதற்கான காரணம் கமல்ஹாசன் என்னும் திரை ஆளுமையும், அவர் முன்னெடுத்த அந்த முயற்சியும்தான் என்றால் அது மிகையாகாது.
மருதநாயகம் என்னும் வரலாற்றுப் படம் 1997 ஆம் ஆண்டு கமலஹாசன் இயக்கி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களை அழைத்து பிரமாண்டமாகத் தொடக்க விழா நடத்தப்பட்டது. அதன் பிறகு வெளியிடப்பட்ட முன்னோட்டக் காட்சிகளும் பிரமிப்பை ஏற்படுத்த யார் இந்த மருதாநாயகம் என்ற கேள்வியை அனைவரின் மனதிலும் எழச்செய்தது. அதன் நீட்சியாக பலரும் அதைப் பற்றிய தேடலைத் தொடங்கினர். அப்படிப்பட்ட தேடலின் விளைவே இந்த பதிவாகும். பலரையும் வியப்பில் ஆழ்த்திய வரலாற்றிற்குச் சொந்தக்காரரான மருதநாயகத்தின் வரலாற்றை அறிய இந்த பதிவை கடைசி வரைத் தொடருங்கள்.
அது சரி..
யார் இந்த மருதநாயகம்?...
அவர் நல்லவரா? கெட்டவரா..
நாயகனா? வில்லனா?...
சுதந்திரப் போராட்டத்தில் அவரின் பங்கு என்ன என்று உள்ளத்தில் எழும் வினாக்களுக்கானப் பதிலை இனித் தேடுவோம்.....
பிறப்பும் இளமையும் :
அன்றைய இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சிவகங்கைக்கு அருகே பனையூர் என்ற கிராமத்தில் 1725ல் மருதநாயகம் பிறந்தார். அன்றைய காலத்தில் பனையூரின் இருந்த பல குடும்பங்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவியதாக சொல்லப்படுகிறது. சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்த மருதநாயகம் பிள்ளை, இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்த மருநதாயகம் முஸ்லீம் குடும்பத்தால் முகமது யூசுப்கான் என்ற பெயரில் வளர்க்கப்பட்டார். இளமையில் படிப்பறிவில்லாத யூசுப்கானுக்குத் துணிச்சலும் நெஞ்சுரமும் அதிகமாய் இருந்தது. அதன் காரணமாக யாருக்கும் அடங்காமல் இருந்த யூசுப்கான், சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி பாண்டிச்சேரிக்குச் சென்றார். பிரெஞ்ச் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரியில் கால்பதித்த யூசுப்கான், பாண்டிச்சேரியின் கவர்னரான மான்சர் காக்லாவின் வீட்டில் வீட்டுவேலைகளைச் செய்யும் வேலைக்காரனாகச் சேரந்தார். ஆனால் அது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. சில காலத்திற்குப் பிறகு, கவர்னரின் வீட்டிலிருந்து வெளியேறினார். ( பணியிலிருந்து நீக்கி வெளியேற்றியதாகவும் சொல்லப்படுகிறது ).
கல்வியும் போர்க்கலையும் :
பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்டு, கால்போனப் போக்கில் சென்ற யூசுப்கானுக்கு நிழல் கொடுத்தது தஞ்சை. அங்குதான் ஒரு மிகப்பெரிய பயணத்திற்கான விதை அடிக்கல்லாய் போடப்பட்டது. அங்கு படைவீரனாய்ப் பணியைத் தொடங்கிய யூசுப்கானுக்கு தளபதி பிரட்டன், அடிப்படைக் கல்வியைக் கற்பித்தார். அது உள்ளத்தில் ஏற்படுத்திய உந்துதல் யூசுப்கானை, தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது என பல மொழிகளைக் கற்றுக் கொள்ளச் செய்தது. அதனை முறைப்படி கற்றுத் தேர்ந்த யூசுப்கானுக்கு கைமேல் பலனாகப் பதவி உயர்வுடன் நெல்லூருக்கு மாற்றப்பட்டார். கல்வி அறிவு இல்லாத சாதாரணப் படைவீரனாய்த் தஞ்சையில் அடியெடுத்து வைத்த யூசுப்கான், நெல்லூரில் வரி வசூலிக்கும் தண்டல்காரனாக, ஹவில்தாராக மாறி பெரும் சுபேதாராக உயர்ந்து நின்றார்.
அன்றைய இந்தியா:
1700களின் மையத்தில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்ச்காரர்களுக்கும் இடையில், இந்திய தேசத்தைக் கைப்பற்றும் பெரும்போர் முனைப்பாக நடந்து வந்தது. இந்திய மன்னர்களைத் தங்களுக்கு ஆதரவாகவும் அடிமையாகவும் மாற்றி, அவரவர் பகுதிகளை அதிகப்படுத்தும் செயல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டது. அதனால் உள்நாட்டு விவகாரங்களில் அதிகமாகத் தலையிட்டுக் குழப்பங்களை ஏற்படுத்திய இவர்கள், அதனைத் தங்களின் நாடுபிடிக்கும் எண்ணத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். ஒருசாரருக்கு ஆதரவாய் ஆங்கிலேயரும், மற்றொரு சாரருக்கு ஆதரவாகப் பிரெஞ்சுப் படையினரும் களமிறங்கி, வென்றவர்கள் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்தனர்.
ஆற்காட்டு நாவாப் யுத்தம் :
பிரிட்டிஷ் கம்பெனியின் கூட்டாளியான அன்வருத்தீன் கானின் மகனான முகமது அலிகான் வாலாஜாவிற்கும், ஆற்காட்டு நவாப்பான தோஸ்த் அலிகானின் மருமகனான பிரெஞ்சு ஆதரவு பெற்ற சாந்தா சாஹிபுவுக்கும் இடையில் அடுத்த ஆற்காட்டு நாவாப் யாரென்ற போட்டி எழுந்து, போருக்கு வழிவகுத்தது. 1971ல் இருவருக்குமான யுத்தத்தில் தப்பிய முகமது அலி வாலாஜா ஆங்கிலேயரிடம் தஞ்சமடைந்தார். இராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலப்படையின் தாக்குதலில் பிரெஞ்சுப் படைத் தளபதி டியூப்ளேயின் ஆதரவுடன் சண்டையிட்ட சாந்தாசாஹிப்பின் படை சிதைந்து ஓடி தோல்வியைத் தழுவியது.
சந்தாசாஹிப்பின் மகன் இராசாசாஹிப் தலைமையில் 10,000 படைகளுடன் இழந்த ஆற்காட்டை மீட்க சென்ற படை மீண்டும் தோல்வியைத் தழுவ, ஆற்காட்டு சிம்மாசனத்தில் அமர்ந்தார் முகமது அலி வாலாஜா. பதவியில் அமர்ந்த புதிய நவாபு, அரியணையைப் பெற்றுத் தந்த ஆங்கிலேயருக்கு நெல்லையிலும் மதுரையிலும் வரி வசூலிக்கும் உரிமையை வழங்கினார்.
ஹவில்தாரிலிருந்து கான்சாகிப்:
அமாவாசைக்கும், அப்துல்காதருக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்று உங்களின் மனதில் எழும் சந்தேகம் புரிகிறது. பிரெஞ்சு ஆதரவு பெற்ற சாந்தா சாகிபுக்காகத் தஞ்சைப் படையும் போரிட்டது. தஞ்சைப்படையில் இருந்த யூசுப்கானும் அதில் பங்குபெற்றார். எதிராளியாக இருந்தாலும், களத்தில் கர்ஜித்த முகமது யூசுப் கானின் ஆற்றலைக் கண்டு வியந்த இராபர்ட் கிளைவ், அவரை ஆங்கிலப்படையில் சேர்த்துக்கொண்டார். தானாய் மிளிர்ந்த அந்த வைரக்கல்லுக்கு, மேஜர் ஸ்டிங்கர்லா ஐரோப்பிய இராணுவப்பயிற்சியில் பட்டை தீட்டி வலுசேர்த்தார். அதன் விளைவாக ஆங்கிலப்படையில் தவிர்க்க முடியாத வீரனாய் வளர்ந்த யூசுப்கான், அதன் பிறகு பிரெஞ்சுக்காரர்களுடன் நடந்த பல போர்களில் ஆங்கிலப் படை வெற்றி பெற முக்கியப் பங்காற்றினார். யூசுப்கானின் திறமையை மெச்சிய மேஜர் லாரன்ஸ் தங்கப்பதக்கம் வழங்கி கமாண்டோ கான் சாஹிப்பாக போற்றி தளபதி ஆக்கினார். அதன்பிறகு, இந்திய சுதந்திர வரலாற்றில் இரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள் பலவற்றை அரங்கேற்றினார் இந்த கான்சாஹிப்.
இந்திய சுதந்திரப் போர்:
இந்திய விடுதலைக்கான முதல் போர் எப்போது நடந்தது என்று யாராவது கேட்டால், 1857 என்று தாமதிக்காமல் பலரும் பதிலளிப்போம். ஆனால் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே 1750களில் இரு மாவீரர்களின் குரல் ஒலித்தது என்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நமக்கான வரலாற்றிலும் யாருமதை கற்றுத்தராமல் மறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த இளம் மாவீரர்கள் யார் என்பதையும், அந்த எழுச்சிக்கும், கான் சாஹிப்பான யூசுப் கானுக்கும் என்ன தொடர்பு என்பதை இங்கு பார்ப்போம்.
வீரன் அழகுமுத்துக்கோன் :
கட்டாலங்குளம் சீமையின் மன்னரான அழகுமுத்துக்கோன், ஆங்கிலேயருக்கு அடிமையாக இருக்க மறுத்ததோடு மட்டும் அல்லாமல், மற்ற பாளையக்காரர்களையும் கப்பம் கட்ட விடாமல் தடுத்தார். இதனால் கடுஞ்சினம் கொண்ட பிரிட்டிஷ் அரசு அழுகுமுத்துக்கோனை அடக்கத் தனது பெரும்படையைக் களமிறக்கியது. பெத்தநாயக்கனூர் கோட்டையில் யுத்தம் துவங்கியது. துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்களுடன் களமிறங்கிய ஆங்கிலப் பெரும்படை, கட்டாலங்குளத்துப் படையை வெகுவிரைவில் அழித்து முன்னேறியது. வீரன் அழுகுமுத்துக்கோனின் வலது காலில் சுடப்பட்டு இரத்தம் வடிந்தபோதும் நெஞ்சுரம் குறையாமல் மூன்று மணிநேரம் ஆங்கிலப் படையுடன் துணிவுடன் சண்டையிட்டனர். முடிவில் ஆங்கிலப் படை வெற்றியைச் சொந்தமாக்கியது. அதனால் வீர அழகுமுத்துக்கோனும், அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூருக்குக் கைதிகளாக இழுத்து வரப்பட்டனர்.
கீழ்ப்படிந்து வரிசெலுத்தினால், உயிர்ப்பிச்சை அளிப்பதாகக் கூறிய பிரிட்டிஷ் அரசின் கோரிக்கையை அந்த மாவீரர்கள் மறுத்துவிட்டனர். கைது செய்து கொண்டு வந்த 248 வீரர்களின் வலது கரங்களை வெட்டி சாய்த்து வெறியாட்டம் ஆடியது கம்பெனிப்படை. பின்னர் வீரன் அழகுமுத்துக்கோனுடன், மற்ற ஆறு தளபதிகளையும் பீரங்கியின் முன்னால் கட்டி, அதனை வெடிக்கச் செய்தனர். பீரங்கி வெடித்ததில் எழுவரும், உடலும் உதிரமுமாய்ச் சிதறி, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு விதையாய் மண்ணில் வீழ்ந்தனர்.
30 வயது மாவீரனையும், தளபதிகள் ஆறுபேரையும் உடல் சிதறக் கொன்ற பிரிட்டிஷ் தளபதி யார் தெரியுமா..
அவர்தான் முகமது யூசுப் கான் என்ற கமாண்டோ கான்சாகிப் .
மாவீரன் பூலித்தேவன் :
இதே காலகட்டத்தில் சுதந்திரத்திற்காக தன் குரலை ஓங்கி ஒலித்தவர் நெற்கட்டான் செவ்வலை ஆண்ட பூலித்தேவன். தன்னைப் பேட்டி காண அழைப்பு விடுத்த ஆங்கிலப் படையை 1750ல் பூலித்தேவன் வென்றதாகச் சிந்துப்பாடலொன்று சொல்கிறது.
தனது கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்பந்தித்த கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரானை வென்று விரட்டியடித்தார் பூலித்தேவன். அதன்பிறகு 1760ஆம் ஆண்டு யூசுப்கான் நெற்கட்டும் செவ்வல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவநல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் முறியடித்து வெற்றி கண்டார். ஏறத்தாழ பத்து ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு, சூழ்ச்சிகள் பல செய்து, அவரை வீழ்த்தியது ஆங்கிலப் படை.
இதையும் முன்னின்று நடத்திய பெருமை அதே கமாண்டோ கான்சாகிப் என்னும் முகமது யூசுப்கானான மருதநாயகத்தையே சாரும்.
கவர்னராய் மாறிய கான்சாகிப் :
இப்படி பல இடங்களில் ஆங்கிலேய அரசு வேரூன்ற முக்கியக் காரணமாக இருந்த யூசுப்கான் 1757இல் மதுரை கவர்னர் ஆக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் நியமிக்கப்பட்டார். பாளையக்காரர்களை அடக்கி, வரிவசூலைத் திறம்பட செய்த காரணத்தால் திருநெல்வேலி சீமைக்குக் கவர்னராகப் பதவி உயர்வு பெற்றார் இந்த கான்சாகிப்.
இந்த சூழ்நிலையில் தாமஸ் ஆர்தர்லாலி தலைமையிலான பிரெஞ்சுப் படை சென்னைப் பட்டணத்தை முற்றுகையிட்டுத் தாக்க, யூசுப்கானை அழைத்தது கம்பெனி அரசு. இவரும் சரியான திட்டமிடலுடன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பிரெஞ்சுப் படை மீது கொரில்லாத் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்க, புகழின் உச்சிக்குச் சென்றார் கமாண்டோ கான் என்னும் யூசுப் கான்.
இவரின் திறமையை நன்கு பயன்படுத்த எண்ணிய கம்பெனி, மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதியில் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சத்தைக் கம்பெனிக்குக் கட்டவேண்டுமென்று கட்டளை விதித்தது. கம்பெனியின் கட்டளையைச் சிரமேல் ஏற்று, பாளையக்காரர்களிடம் வரிவசூலைச் சிறப்பாகச் செய்து, கம்பெனியின் வருமானத்தைப் பன்மடங்கு உயர்த்தினார். புதிதாகப் பதவியேற்றவர்கள் அரியணைக்கு எதிராக இருப்பவர்களை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதைப் போல, இவரும் கம்பெனிக்கு எதிராகச் செயல்படுபவர்களைக் கொல்வதற்கும் தயங்கவில்லை. மதுரையில் கம்பெனிக்கு எதிராகப் போரிட்ட கள்ளர் தலைவனையும், அவனது 500 படை வீரர்களையும் ஒரேநாளில் தூக்கிலிட்டு கொன்றார்.
இது கம்பெனிக்கு எதிரான மனநிலை உடையவர்களின் இதயத்தில் பயத்தை உண்டாக்கியதோடு, தெற்குப் பகுதியில் யூசுப்கான் தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்க வைத்தது
முதல் விரிசல் :
இதனால் நவாபுக்கும், கம்பெனிக்கும் வருவாய் பெருகினாலும், தெற்குப் பகுதி முழுவதும் யூசுப்கானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இவ்வாறு யூசுப்கானின் ஆதிக்கம் உயர்வைக் கண்ட ஆற்காடு நாவாப்பின் உள்ளத்தில் பயத்துடன் பொறாமைத்தீயும் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் யூசுப்கானைத் தனக்கு கீழ் செயல்படுமாறு ஆங்கிலேயரிடம் வாதாடி அனுமதி வாங்கினான். யூசுப்கான் தான் வசூலிக்கும் தொகையை ஆற்காடு நவாப்பிடம் செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் கம்பெனிக்கு செலுத்துவார்கள் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கம்பெனியின் இந்த நரிச்செயலை ஏற்றுக்கொள்ளாத கான்சாகிப், ஆற்காடு நாவாப்பிற்கும் கம்பெனிக்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இதனால் அவர்களின் உறவில் முதல் விரிசல் விழுந்தது. இந்த விரிசல் பெரிதாய் மாறி, பகை முற்ற பஞ்சாயத்து டெல்லி வரை சென்றது. யூசுப்கானை டெல்லியின் ஷாவும், ஹைதரபாத் நிஜாமும் மதுரையின் கவர்னராக சட்டப்படி அறிவித்ததை, நவாப்பும் கம்பெனியும் ஏற்கவில்லை.
இதனால் யூசுப்கான் ஆண்டிற்கு 7 லட்சம் வரை வரி வசூல் செய்து தருவதாகக் கம்பெனியிடம் பேரம் பேச, அதையும் நிராகரித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. இதற்கான காரணம் என்னவென்றால், தெற்குப் பகுதியில் யூசுப்கானின் வளர்ச்சியும், அவரது போர்த்திறனும் ஆங்கிலேயரை அச்சமடையச் செய்ததுதான்.
சுதந்திரப் போராட்ட வீரராய் மாறிய கான்சாகிப்:
தனது கோரிக்கையை நிராகரித்த கம்பெனிக்கு எதிரான ஆட்டத்தைத் தொடங்கி, தன்னை வலுப்படுத்திக் கொள்ள முனைந்தார் யூசுப் கான். இதனை அறிந்த கம்பெனி வணிகர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான அவரது மனநிலையைக் கம்பெனிக்குத் தெரியப்படுத்தினர். இதனால் வரப்போகும் ஆபத்தை உணர்ந்த கம்பெனி, யூசுப்கானைக் கைது செய்ய உத்தரவிட்டு கேப்டன் மேன்சனை அப்பணிக்கு அனுப்பியது. இந்த நேரத்தில் கமாண்டோ கான் சாகிப் என்னும் யூசுப்கான், தன்னை யாருக்கும் கீழ்ப்படியாத சுதந்திர ஆட்சியாளன் என்று அறிவித்து, மதுரை சுல்தானாகத் தன்னைத்தானேப் பிரகடனப்படுத்தினார். 27,000 படைவீரர்களுடன் பலமாக இருந்த கான்சாஹிப் வெள்ளையருக்கு எதிராக வெளிப்படையாகச் செயல்படத் தொடங்கினார். இது இவரால் பலமுறை வேட்டையாடப்பட்ட ஃப்ரெஞ்ச் தரப்பிற்குத் தேனாய் இனித்தது. ஆங்கிலேயர் கொம்பு சீவி வளர்த்து விட்ட காளையைக் கொண்டே, அவர்களை அழிக்க நினைத்த பிரெஞ்ச் தூதர்கள் யூசுப் கானுடன் கைக்கோர்த்துக் கொண்டனர்.
ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரயுத்தம்: தங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களை அடக்க, யூசுப்கானை எப்படி கம்பெனி அனுப்பி வேட்டையாடியதோ, அதே போலத் தங்களுக்கு அடங்காத யூசுப்கானை அடக்கவும் தளபதி மேன்சன் தலைமையில் படையை அனுப்பியது கம்பெனி அரசு. கர்னல் மேன்சன் தலைமையிலான ஆங்கிலப் படை 1763ல் மதுரையைத் தாக்கியது. தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை பாளையங்கள் என, யூசுப்கானால் முன்பு வஞ்சிக்கப்பட்டவர்களும், கம்பெனிக்கு ஆதரவான மனநிலை கொண்டவர்களும் ஆங்கிலப் படைக்கு ஆதரவாகச் சேர்ந்து கொண்டனர். 22 நாட்கள் நடைபெற்ற இப்போரில் பலரும் மரணமடைய, பெருஞ்சேதமடைந்து நிலைகுலைந்த கம்பெனிப் படை பின்வாங்கியது.
சென்னை மற்றும் மும்பையிலிருந்து அதிநவீன ஆயுதங்களையும், படைகளையும் களமிறக்கி, மேஜர் பிரிஸ்டன் தலைமையில் மீண்டும் போரைத் தொடங்கியது கம்பெனி. இம்முறை சரியாகக் காய் நகர்த்திய கம்பெனி, நத்தம் கள்ளநாட்டில் பாதைக்காவல்களைக் கைப்பற்றி 1764 ஜூனில் கோட்டையை முற்றுகையிட்டது. கோட்டையைத் தகர்க்க முயன்ற கம்பெனி வீரர்கள் 160பேர் பலியாக, வலிமையான கோட்டையைத் தகர்ப்ப்து சாத்தியமில்லை என்பதை பிரிஸ்டன் உணர்ந்தான். எனவே தந்திரமாகச் செயல்படத் திட்டம் தீட்டி, கோட்டைக்குச் செல்லும் தண்ணீர் உணவு ஆகியவற்றை நிறுத்தி எதிரியை நிலைகுலையச் செய்தான்.
கோட்டையிலிருந்து தப்பி செல்லும் யூசுப்கானின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு, வெற்றி அல்லது வீரமரணம் என்ற மனநிலையில் இருந்த யூசுப் கானிடம், ஃப்ரெஞ்ச் தளபதி மர்ச்சண்ட் சரணடையும் எண்ணத்தைத் தெரிவித்தான். இதனால் கோபமடைந்த யூசுப்கான், தளபதியை அனைவரின் முன்னிலையிலும் கன்னத்தில் அறைந்தார். அவமானமடைந்த தளபதி வஞ்சம் கொண்டு, பழி தீர்க்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
காலங்கடந்து செல்வதை உணர்ந்த ஆற்காடு நவாபு, தனது அபிமானி சிவகங்கை தளபதி தாண்டவராயப் பிள்ளை மூலமாக, கோட்டைக்குள் இருந்தவர்களுக்கு இரகசிய சேதி அனுப்பி நடப்பதைத் தெரிந்து கொண்டான். பின்னர் திவான் சீனிவாசராவ், யூசுப்கான், பாக்டா பாபா சாஹிப், தளபதி மார்சன்ட் ஆகியோருடன் இணைந்து சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினான்.
வரலாறு திரும்பியது :
அதன்படி, 1764 அக்டோபர் 13ம் தேதியன்று தொழுகையில் இருந்த யூசுப்கானைப் பிடித்துக் கட்டிப்போட்டது அந்த சதிகாரக் குழு. விவரம் அறிந்து யூசுப்கானின் மனைவி சிறுபடையுடன் வந்தாலும் வஞ்சகர்களிடம் வெற்றிபெற முடியவில்லை. துரோகத்தால் கட்டிவைக்கப்பட்ட யூசுப் கான் கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட, அவரின் சுதந்திரப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
1764 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதியன்று மதுரையின் சம்மட்டிப்புரத்தில் உள்ள கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு இருந்த மரத்தில் ஆற்காட்டு நவாப்பால் தூக்கிலிடப்பட்டார். தூக்கில் தொங்கி உயிர்விட்டாலும், யூசுப்கான் மீதான பயம் மட்டும் அவர்களுக்குக் குறையவில்லை. அவரைக் கண்டு அஞ்சு நடுங்கிய கம்பெனியர்களும், நவாபும் அவரது தலையைச் திருச்சிக்கும், கைகளைப் பாளையங்கோட்டைக்கும், கால்களைத் தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர். மீதியிருந்த உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர்.
இதைப்பற்றிய ஒரு கதையும் உள்ளது. தூக்கிட்டுக் கொன்று புதைத்த யூசுப் கானின் ஆவி இரவில் சென்று ஆற்காட்டு நாவாப்பையும், கம்பெனியாரையும் கொல்வேன் என்று கனவில் மிரட்டியதாகவும், அதனாலேயே அவரது புதைத்த உடலைத் தோண்டியெடுத்து, சிதைத்து பல்வேறு இடங்களில் புதைத்தாகவும் அந்தக் கதையில் சொல்லப்படுகிறது. வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதைப் போல, விடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்ட வீரன் அழகுமுத்துக்கோனையும், அவரது தளபதிகளைகளையும் பீரங்கி முனையில் கட்டி உடல் சிதறக் கொன்றதைப் போல, கமாண்டோ கான்சாகிப்பின் உடலும் துண்டு துண்டாக சிதைக்கப்பட்டது.
இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 1808ல் அவரது உடல் புதைக்கப்பட்ட சம்மட்டிப்புரத்தில் தர்கா ஒன்று ஷேக் இமாம் என்பரால் எழுப்பப்பட்டு, அது இன்றும் கான் சாஹிப் பள்ளி வாசல் என அறியப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது...
மருதநாயகம் என்னும் கமாண்டோ சாகிப் முகமது யூசுப்கானின் வரலாற்றைத் தேடுபவர்களுக்கு, அவரது சுதந்திரப் போராட்டம் குறித்து சந்தேகமே அதிகம் உண்டாகிறது.
கமலஹாசனின் பாணியில் சொல்வதென்றால், அவர் நல்லவரா? கெட்டவரா? என்ற குழப்பம்தான் மிஞ்சுகிறது. பலருடைய அனுமானம் என்னவென்றால், வெள்ளையனின் கைக்கூலியாக இருந்த மருதநாயகம், இறுதிக் காலத்தில் ஏற்பட்ட மனக்கசப்பால், தனது அதிகாரத்தை இழக்க மனமின்றி, அவர்களை எதிர்த்து, அவரது வழியிலேயே கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாகவே அறியப்படுகிறார்.. நானும் இந்தப் பதிவிலிருந்து அவர் நாயகனா, வில்லனா என்ற கேள்விக்கானப் பதிலை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்...
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்