Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

பொன்னியின் செல்வன் : வந்தியத்தேவன் வழிப்பயணம் ✍️ கவிஞர் விஜயநேத்ரன்

Copied!
Kavignar Vijayanethran

பொன்னியின் செல்வன் : வந்தியத்தேவன் வழிப்பயணம் 

கரிகாலன் தோழனாய்க் காவிரியைத் தேடி வந்து 
கடம்பூர் மாளிகைக்குள் காட்சியினை மறைந்தறிந்து 
குடந்தை சோதிடரிடம் ஆருடம் அறியச் சென்று 
குந்தவைக் கண்ணசைவில் மெய் மறந்து நின்று 
காதலில் வீழ்ந்த கரிகாலன் தோழனவன்...
வான்புகழ் கொண்ட வாணர் குலத்தவன் 
தேன்துளி சிந்திடத் திகட்டாது மொழிபவன் 
இன்முகம் காட்டிடும் செம்மெழில் மேனியன் 
இருவிழியினில் கவர்ந்திடும் மந்திர மன்மதன்  
கார்குழல் அழகாய்க் காதருகினில் ஆடிட 
வாளினைச் சுழற்றிடும் வல்லவர் அரையன் 
தோழமை ஏற்றுத் துவங்கினான் பயணம்....
தோற்றத்தில் கவர்ந்திடும் வந்தியத்தேவன்....
தோன்றிடும் புதிரதனை அவனறி வானோ????...
சென்றிடும் பயணத்தை வென்றிடுவானோ??
கண்டிடுவோம் அவன் பயணத்தைக் கவியில்..

ஆற்றங்கரை வந்தான் ஆதித்தன் ஓலையுடன்
அழகாய் வரவேற்றாள் பொன்னி தன் அலைகளுடன்...
அர்த்த விவாதம் செய்தங்கொரு சாலையில்
ஆழ்வார்க்கடியான் நின்ற ஆடிப் பொன் வேளையிலே...
அடியானவன் ஏவலை அகத்தினால் மறுத்து
அத்துமீறிக் கடம்பூர் மாளிகையதனில் உட்புகுந்து 
அகங்கண்ட கந்தமாறன் நட்பின் நிலையறிந்து 
அங்கு நடந்தவற்றை இரவில் விழித்தறிந்து 
பொங்கிய சினந்தன்னை மெதுவாய்ப் புறந்தள்ளி 
வந்தியன் கண்டனன் குடந்தைப் புரமதில்
குந்தவை என்னும் சோழ குலமகளின்
சந்திர எழில் பொங்கும் வதனமதில் 
மந்திரம் போல மெய்மறந்து மதிமயங்கி  
தந்திர முதலையைக் கொன்று ஆற்றங்கரையிலே....

இளைய ராணியவள் எழில் முகங் கண்டு 
இலச்சினைப் பெற்றதனால் சோழர் மனை புகுந்து 
இளைய பழுவேட்டரையரவர் காவலைத் தாண்டி
அழகிய மன்னரவர்தம் உள்ளக் குறிப்பறிந்து 
பழகிய வேளையில்  மெல்லியதோர் குரலில்
அபாயம் என்றுரைத்ததனால் அல்லல் வர 
அபயம் என்றழைக்க வந்தாள் இளையராணியவள்...

ஓலையொன்றெடுத்து ஒற்றனாய் மாறி 
சோலை வனத்திற்குள் மறைவிடம் தேடி   
வேலையதைச் செய்ய வேறிடம் நாடி 
மாலை வேளையதில் மாயங்கள் புரிந்து
சோழ வேல்விழி யவளிடம் ஓலையைச் சேர்த்திட 
சுந்தரன் மகளவள் தந்தாள் ஓலையொன்று....

சந்திர எழிலனை இந்திர அழகனைத் தேடி  
மந்திர மொழியாள் குந்தவை  அன்பால்
மாயக்கடல் கடக்கும் நெஞ்சுரத் துணிவால்
மரக்கலம் செலுத்தும் மங்கையின் துணையால்
சிங்களம் சென்றும் சங்கடம் சூழ்ந்திட
திங்களாய் உதித்த திருமலை வரவால்
மங்கலம் பிறந்திட சிறைதனில் தப்பியே
செங்கதிர்  நுழையா சீர்மிகு வனத்தினுள் 
சிங்கங்கள் போலொரு யுத்தம் புரிந்து 
சங்கமம் ஆயினான் சந்திர எழிலனை... 

பௌத்த பீடங்கள் பொன்னொளி பரப்பியும் 
யுத்த நாளங்கள் இசைத்திடும் இலங்கையில்
மௌன ராணியுதவியால் மீண்ட இளவல்
கவனக் குறைவாய்ச் சிக்கலில் மாட்டிய
வாணர் குலத்தவனை மீட்டிடும் கணத்தில்
கப்பலிரண்டையும் கடும்புயல் அழிக்க
தப்பிய இருவரை ஆழ்கடல் நீராட்ட 
தெப்பத்தில் ஏற்றிய சமுத்திரக் குமாரி - இளவல் 
தேகங் காய்ந்திடச் சேர்த்தாள் பௌத்த பீடத்தில்....   

பயணம் தொடரும் 
✍️ கவிஞர் விஜயநேத்ரன் 













Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

பொன்னியின் செல்வன் வாசிப்பின் மகத்துவம் - கவிதை

மருதநாயகம் : நாயகனா?? வில்லனா?? சுதந்திர வரலாற்று யுத்தத்தில் ஒரு பார்வை

Copied!