பொன்னியின் செல்வனைப்
புரட்டிப் பார்....
உனக்குள் மாற்றங்கள் பிறக்கும்..
உந்தன் அறைக்குள் புத்தகங்கள் முளைக்கும்...
பொன்னியின் செல்வனைப் புரட்டிப் பார்...
வாசிப்பது பழக்கமாகும்,
வரலாறு இஷ்டமாகும்,
புத்தகங்கள் பிடித்துப் போகும்,
மற்றவை எல்லாம் சலித்துப் போகும்...
எத்தனை முறை படித்தோமென்ற
எண்ணிக்கை மறந்தே போகும்...
பொன்னியின் செல்வனைப்
புரட்டிப் பார்....
வந்தியத்தேவனாய் வாள் வீசுவாய்,
வார்த்தைகளில் அவன் புகழ் பேசுவாய்...
அவன் வழித்தடங்களைத் தேடிச் செல்வாய்...
அவன் வாழ்ந்த இடங்களை கோயில் என்பாய்...
உண்மையில் ஏதும் தெரியாவிட்டாலும்
உனக்குள் வரலாற்று ஆய்வாளராய்
உன்னையே நினைத்திடுவாய்...
குடந்தைக்கும் தஞ்சைக்கும்
குடிபெயரும் ஆசையொன்றை
உள்ளத்தில் உணர்ந்திடுவாய்...
கல்வெட்டுகள், கற்றளிகள், செப்பேடுகள்
இவையெல்லாம் பொக்கிஷம் என்பாய்...
அருண்மொழி உனக்குள் அமரனாவான்...
அவன் எழுப்பிய கோயில் அதிசயமாகும்...
பொன்னியின் செல்வனைப்
புரட்டிப் பார்....
கனவுக்குள் பூங்குழலி கீதங்கள் கேட்கும்,
வான்மதியும் வானதியாய்த் தெரியும்,
குந்தவையா நந்தினியா பட்டிமன்றம் நடத்தும்,
மணிமேகலையின் தியாகமதனில்
மனம் கண்ணீர் வடிக்கும்.
மனதுக்குள் அவள் நினைவு ஊற்றாய்ப் பெருக்கெடுக்கும்...
உன் வீட்டம்மாவும் சிலநேரங்களில் இராக்கம்மாவாய் மாறுவாள்.
எதிர்வீட்டுக்காரன் ஆபத்துதவியாய் ஆள்மாறுவான்..
ஆழ்வார்கடியவனாய் உன்னையே உன்மனது உளவு பார்க்கும்,
அடுத்தவர் முன் வாதம் செய்ய அதுதினமும் அடிக்கும்,
இலங்கைக்குப் பயணம் போக இளமனது துடிக்கும்.
சேந்தன் அமுதனாகிப் பக்திப் பண் படிக்கும்,
மதுராந்தகனாய் மனம் கிடந்து அடிக்கும்..
அடுத்த நொடி விழித்து விட்டால் ஆழ்மனதில் வலிக்கும்,
ஆதித்த கரிகாலனாயது ஆர்ப்பரிக்கும்....
பொன்னியின் செல்வனைப்
புரட்டிப் பார்....
புத்தகத்தின் பக்கங்களுக்குள் தொலைந்து
போக முடியுமா ?
புரட்டும் போதெல்லாம் புதிதாய் உணர முடியுமா?
புதினத்தின் மாந்தர் மேல் காதல் உருவாகுமா?
வார்த்தையில் உருவத்தை நினைந்திட முடியுமா?
வாசிப்பில் அந்த வாழ்க்கையை வாழ்ந்திட இயலுமா?
கற்பனைக்குள் உண்மையையும்
உண்மைக்குள் கற்பனையையும்
ஒன்றாக அறியமுடியுமா?
மொத்த நாகரிகத்தை ஒற்றை கோயிலுக்குள்
தெரிந்திட வேண்டுமா?...
பொன்னியின் செல்வனை
புரட்டிப் பார்....
சிற்பங்களின் அழகியல் பக்கங்களில் தோன்றும்,
சிந்தைக்குள் வர்ணனையில் தோற்றம் தோன்றும்...
விற்கொடி வேந்தனெவன்
புலிக்கொடி வேந்தனெவன்
மீன்கொடி வேந்தனெவனென
வரலாறு வகுப்பறைக்குள்
தகராறு செய்தவை எல்லாம்
அழகாகப் புரிந்திடும்..
ஆழ்மனதில் உறைந்திடும்.
நிகழ்கால விழியதனில்
கடந்த கால காட்சி எல்லாம்
காணும் சாட்சியாகிட வேண்டுமா??
பொன்னியின் செல்வனைப்
புரட்டிப் பார்....
நேரங்கள் களவு போனாலும்,
வேலைகளில் பழுது ஆனாலும்,
வெள்ளித்திரைக்குள் விழுந்து உறங்கினாலும்,
சின்னத்திரைக்குள் உறங்கி விழுந்தாலும்,
புத்தக வாசனைப் புதியதாய் இருந்தாலும்,
பொன்னியின் செல்வனைப்
புரட்டிப் பார்....
சொர்க்கம் மட்டுமே நிச்சயம்...
பொன்னியின் செல்வனைப்
புரட்டிப் பார்....
வாழ்த்துக்களுடன்
✍️கவிஞர் விஜயநேத்ரன்