வீரபாண்டிய கட்டபொம்மன்
அன்னை பூமியின் அடிமை விலங்குடைக்க,
இன்னுயிர் பலர் தந்து இறவா புகழ் பெற்றனர்.
இந்தியத் திருநாட்டில்....
அவர்களுள்
கட்டபொம்மு வம்சத்தில் பிறந்து, பாஞ்சை மண்ணில் ஆட்சி புரிந்து, அதன் மானம் காக்க தன்னுயிர் துறந்து
பாரத சரித்திரத்தில் இடம் பிடித்த
வீர பாண்டியனின் முகமின்றி
இந்திய விடுதலைப் போராட்ட சித்திரத்தை நாம் முழுமையாய் தீட்டிட இயலாது.
கட்டபொம்மனென்றதும் நம் தலைமுறைக்கும் நினைவுக்கு வருவது திறை கேட்ட வெள்ளைத் துரையிடம் , அது முறையில்லை என்றுரைத்த
அவர் வீரம் தான்..
வானமது மழை பொழிய
பூமியிதில் நெல் விளைய
வரியுனக்கு ஏன் வேண்டும்??
சேற்று வயலிறங்கி வரப்பிட்டு
நாற்றதை நட்டு நாளும் நீர்பாய்ச்சி
நெடுவயலில் பணி புரிந்தனையோ??
கஞ்சிக் கலையமது சுமந்து கழனி வாழ் உழவனுக்கு
கனியமுது கொடுத்தாயோ??
கொஞ்சி விளையாடும் வஞ்சியவள் மேனிக்கு
மஞ்சளதை அறைத்தாயோ??
மாமனா? மச்சானா? மதிகெட்ட நீ யாரோ??
தானம் தருவேன் தர்மம் தருவேன்
வானம் இடிந்து வீழ்ந்தாலும்
வரியென்ற ஒன்றை உனக்கென்
வாழ்விலும் தரேன்.
என்றுரைத்த இந்த வரிகளைக் கேட்டால் குதிரைக்கும் கொம்பு முளைக்கும்.. கோழைக்கும் வீரம் பிறக்கும்.
எதிர் நின்று வெல்ல முடியாத இந்த வேங்கையை,
நரிக் கூட்டங்கள் இணைந்து,
நட்பெனும் முகமூடியில் நயமாய் பேச வைத்து ,
நம்பிக்கை துரோகத்தால் பதியவனை வீழ வைத்து
மன்னிப்பு கேட்டால் மறுவாழ்வு தருவதாக சொன்னது வெள்ளையர்க்கூட்டம் ..
மானமே பெரிதென நினைத்த மாவீரன் ஒத்துக் கொள்வானா அதற்கு....
மனப்பால் குடிக்க வேண்டாம் ..
விழுப்புண் பட்டு வீழ்ந்தாலும் வீழ்வேன், மானமிழந்து மடிப்பிச்சை எடுக்க மாட்டேன்.
வீரமிழந்து உன்னிடம் உயிர்ப்பிச்சை கேட்கவும் மாட்டேன்...
என்று இறுதி வரை உறுதியாய் நின்ற உன்னத வீரன்...
பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அடிபணியாது நின்ற கட்டபொம்மனை,
அழித்தாலும் வஞ்சனையில் அவதூறு வலை வீசி ,
கயத்தாறு மரக்கிளையில் காலனுக்கு இரை ஆக்கியது ...
குறுக்கு வழியில் கோட்டையைப் பிடித்த கம்பெனி அரசு...
தாய் மண்ணே உன்னைக் காக்க முடியாமல் உயிர்விடும் என்னை உன் மடியில் ஏற்றுக்கொள்
என மார்தட்டி தூக்கு கயிறை முத்தமிட்டான் மாவீரன்...
ஆம்... அக்டோபர் 16ல் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறு புளியமரத்தில் தூக்கு கயிறை முத்தமிட்டு வீர சுவர்க்கம் அடைந்தார். .
செந்தூர் முருகனின் சேவடி தொழுது
சிந்தையில் தேசத்தை உயிரென நினைந்து
கரத்தில் வாளெடுத்து கயவரின் சிரமறுத்த
கட்ட பொம்மரே உம்மைவாழ்த்தி வணங்குகிறோம்....
போற்றிப் புகழ்கிறோம்...
உம் நினைவு நாளிலே....
✍️கவிஞர் விஜயநேத்ரன்
காணொளிப் பதிவுக்கு