சிந்தித்து செயலாற்றுங்கள் : "போலி"களால் காயப்படும் "பொன்"கள்
"விதியென்னும் வலைஞன் வாழ்வென்னும் வலையில், எங்கோ தொடங்கி, எங்கோ முடித்து, யார்யாரையோ அதில் சிக்கவைத்து விடுகிறான் "
ஆம்... இந்த உலகம் அழகிய உறவுகளால் பிணைக்கப்பட்ட நூலிழை போன்றது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மற்றொருவருடன் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இணைக்கப்பட்டு இருக்கிறோம். அந்த இணைப்பினால் தான் இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கிறது.
நாம் அன்றாட வாழ்வில் புதிதாய் நட்பு, காதல், சகோதரத்துவம் போன்று எண்ணற்ற உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். அதற்கான சுதந்திரத்தை நம் பெற்றோர்கள் நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.
முதல்நிலை தேர்ந்தெடுப்பது:
ஒருவரை நம் வாழ்க்கை வட்டத்திற்குள் தேர்ந்தெடுப்பதில் மிக கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். ஏனெனில் அந்த ஒருவர் நமது வட்டத்திற்குள் வருவதால் நமது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். ஏன் நமது வாழ்க்கையே கூட மாறிவிடும் நிலை ஏற்படலாம். வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டானால் மகிழ்ச்சிதான். ஆனால் ஏமாற்றங்கள் தோன்றினால் என்ன செய்வது. ஆதலால் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நலம்.
இரண்டாவது நிலை உண்மையறிதல்:
இரண்டாவது நிலை தான் மிகக் கடினமான ஒன்று. ஏனெனில் ஒருவர் நமக்கு அறிமுகமாகும் போது அவருடைய நல்ல குணங்கள் மட்டுமே நமக்கு புலனாகும். அவரும் அவருடைய நல்ல குணங்களை மட்டுமே முன் நிறுத்தி அறிமுகவாவார். நெருங்கிப் பழகும் போதுதான் ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும். அப்படி பழகும் போது, பழகப் பழகப் பாலும் புளிக்குமென்பது போல சில நேரங்களில் அமையலாம். இது பெரும்பாலும் ஆரம்பத்தில் உண்மையான குணாதியங்களை மறைத்து பழகுவதால் அதிகம் உண்டாகிறது.
ஒருவருடைய உண்மை நிலை அறியும் வரை அவருடன் நமது இரகசியங்களை பகிரக் கூடாது. நீங்கள் உங்கள் இரகசியங்கள் பகிர்வதை தள்ளிப்போடும் பட்சத்தில், பல பசுத்தோல் போர்த்திய குள்ளநரிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுவிடும். அப்படி உண்மை முகம் தெரியும் பட்சத்தில், அந்த உறவு வட்டத்தை விட்டு வெளியேறுவதுதான், நமது வாழ்க்கைக்கு நலம் தரும். அதைத் தொடர்ந்தால், தேவையற்ற பல வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
மூன்றாம் நிலை :
தேர்ந்தெடுத்த உறவுக்கு உண்மையாய் இருத்தலே ஆகும். ஆம்... நம் வாழ்க்கை வட்டத்திற்குள் வந்த உறவுக்கு முடிந்த வரை நாம் உண்மையாய் இருக்க வேண்டும். நம்பிக்கைதான் ஒவ்வொரு உறவின் ஆணிவேராகும். அதன் பலத்தில் தான் உறவென்னும் விருட்சம் தழைத்தோங்கி வளரும். அந்த நம்பிக்கையானது நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று, இருபுறமும் சம நிலையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த உறவானது சமநிலையில் பயணப்படும். அதன் ஒரு பக்கம் சிதைந்தாலும் மற்றொரு பக்கமும் தன் மதிப்பை இழந்து நிற்கும். ஆகையால் நம் மேல் நம்பிக்கை வைத்த உறவை, அது நட்பு, காதல் எதுவாக இருந்தாலும், அந்த நம்பிக்கை சிதையாது உண்மையுடன் இருக்க வேண்டும்.
நான்காவது நிலை:
நான் முன்னரே சொன்னது போல், நாம் ஒவ்வொருவரும் நேரடியாகவோ ,மறைமுகவோ, ஏதோ ஒரு பிணைப்பால் இணைக்கப்பட்டு இருக்கிறோம். ஆதலால் ஒரு பிணைப்பில் ஏற்படும் தவறினால், அதனுடன் தொடர்பில்லாத மற்றொரு பிணைப்பிலும் பாதிப்பு உண்டாகலாம். எந்தவொரு உறவிலும் நாம் செய்யக் கூடிய தவறுகள் நம்மோடு முடிந்து விடுவதில்லை. அது எங்காவது எப்போதாவது சில நூறு நல்ல உறவுகளின் நிலையைக் கேள்விக் குறியாக்குகிறது. அது காதல், நட்பு , சகோதரத்துவம் எதுவாக இருந்தாலும் அந்த வலியை ஏதோ ஒரு வடிவத்தில் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆதலால் எந்த ஒரு உறவாக இருந்தாலும் அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும்.
சிந்தனைப்பகுதி:
இன்றைய வலைதள வாழ்க்கையில் நல்லவைகளை விட தீய விஷயங்கள் தான் எளிதில் வேகமாக காட்டுத்தீயாகப் பரவுகிறது. ஆதலால் எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மை நிலை அறிந்து பகிர வேண்டும்.
எங்கோ ஒரு முகநூல் தோழியை ஏமாற்றிய முகநூல் நண்பனின் செய்தியால் ஒட்டுமொத்த முகநூல் உறவுகளின் நிலையும் கேள்விக்குறியாய் விவாதிக்கப்படுகிறது..
எனக்கு தெரிந்து மகாபாரதம், பொன்னியின்செல்வன் மற்றும் பல கவிஞர் குழுமங்கள் (தமிழ்ப்பட்டறை, படைப்பு) நல்ல புரிதலோடு நன்முறையில் நண்பர்களாக, குடும்ப உறவுகளைப் போல் பயணித்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சரியான இடத்தை ( இதயத்தை) தேர்வு செய்தால் , நீங்களும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்வித்து வாழ்வில் உயரலாம். ஆனால் தவறான இடத்தைச் சென்றடைந்தால் உங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம்..
இதைத்தான் நமது பெரியவர்கள் சேரிடம் அறிந்து சேர் என்று அழகாக நமக்கு அறிவுரை புகட்டியிருக்கிறார்கள்.
எங்கோ ஒரு இடத்தில் ஒரு போலியான காதலால், தோன்றும் காதல் அத்தனையும் போலியல்ல...
ஏதோ ஓர் நட்பு நம்பிக்கை துரோகம் இழைப்பதால், எல்லா நட்பும் கேள்விக்குறியானதல்ல...
சகோதரன்/சகோதரி என போலியாய் வலைவீசும் ஏதோ ஒரு சில புல்லுருவிகளால், பல நல்ல நெற்பயிர்களையும் களையென சொல்வது எவ்விதத்தில் சரியாகும். நான் தவறே நடக்கவில்லை என்று சொல்லவில்லை.
எங்கோ ஒரு சில போலியான உறவுகளால் தவறுகள் நடக்கின்றன. அதற்காக உண்மையான பந்தங்களை தயவு செய்து காயப்படுத்தாதீர்கள்.
போலியான பந்தங்களை மேற்கோள் காட்டி உண்மையான பந்தங்களை சிதைக்கும் போது அவர்களுக்குள் உண்டாகும் வலியை உங்களால் உணர முடியாது.
நட்பு, சகோதரத்துவம், காதல், குடும்பம் இதில் எந்த உறவானாலும் அதில் உண்மையை உணருங்கள். உண்மையாய் இருங்கள். நம்பிக்கையுடன் பயணப்படுங்கள்..
ஏனெனில்,
இங்கே போலிகளின் தாக்கத்தினால் பொன்களே அதிகம் உரசப்பட்டு காயப்படுத்தப்படுகிறது...
சிந்தித்து செயலாற்றுங்கள்...
சிந்தனை தொடரும்..
நட்புடன்
உங்கள்.
✍️ கவிஞர் விஜயநேத்ரன்