சிந்தித்து செயலாற்றுங்கள் : மகள் சொன்ன பாடம்
"செல்லக்குட்டி, அந்த ரிமொட்ட குடுடா" என்று தன் 6 வயது மகள் மித்ராவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் வினோத்.
" இப்ப என்னப்பா பாக்க போற" என்று தான் பார்த்துக் கொண்டிருந்த கார்டூனை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் அவன் முகத்தை பார்த்தாள்.
அவளது குழந்தை முகத்தை பார்த்தவன் அப்படியே கட்டி அணைத்து அவள் கண்ணத்தில் முத்தமிட்டான்.
" கொஞ்ச நேரம் அப்பா நீயூஸ் பாத்துகிறேன்டா" என்று கேட்ட வினோத்திடம் ரிமோட்டை கொடுத்து விட்டு அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள் மித்ரா.
"சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை இன்று போலிசார் கைது செய்தனர். மேலும்..." என ஓடிக்கொண்டிருந்த செய்திகளுக்கு நடுவே தனது கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தாள் மித்ரா.
"யாருப்பா. இவங்க.."
" திருடங்கமா.. "
"ஏன்பா திருடுறாங்க "
"செலவு பண்றதுக்குமா"
" அப்போ செலவுக்கு எல்லோருமே திருடுவாங்களா பா.. "
"இல்லை மா.. இவங்க அப்பா அம்மா இவங்கள சரியா வளக்கலமா.. அதுதான் திருடுறாங்க"
" பாட்டி உன்ன நல்லா வளத்தாங்கலாப்பா."
" ஆமாடா. தங்கம். அதுனால அப்பா இன்னைக்கு நல்ல வேலைல நல்லா இருக்கேன்.."
"அப்போ பாட்டியும் உன்ன கவனிக்காம விட்டிருந்தா நீயும் திருடனா ஆகிருப்பியா பா" என்ற கூரிய வார்த்தைகளை கேட்ட வினோத்தின் இதயம் நின்று துடிக்க தொடங்குவதற்குள் அடுத்த கேள்வியைக் கேட்டாள் மித்ரா..
" அவ்ளோ நல்லா கவனிச்ச பாட்டிய ஏன்பா நீ கவனிக்காம முதியோர் இல்லத்துல விட்ட. பாட்டி பாவம்ல " என்று தன் மழலைக் குரலில் அடுத்த அம்பை எய்தாள் மித்ரா.
அடுத்தடுத்த இரண்டு சரங்களின் தாக்குதலில் நிலை குலைந்த வினோத்தின் இதயம், கண்களின் வழியாக தன் ஈரத்தை வெளியிட்டது கண்ணீராய்...
மற்ற யார் கேட்டிருந்தாலும் இது சாதாரண கேள்வியாகத்தான் இருந்திருக்கும். ஆனால் மகளை நேசிக்கும் ஒவ்வொரு தந்தைக்கும் தெரியும் மகளின் சிறு சிறு வினாவும் எந்த அளவு முக்கியமானது என்று..
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுப்பதை விட முக்கியமானது அவர்களுக்கு நீங்கள் நல்ல மனிதராக வாழ்ந்து காட்டுவது. ஏனெனில் பெற்றோர்களே பிள்ளைகளின் கதாநாயகர்கள்..
நீங்கள் உங்கள் பெற்றோருக்கு மதிப்பு கொடுத்தால், அவர்களும் உங்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள். உங்கள் அண்ணன்,தங்கை, மாமானார், மாமியார் மற்றும் உறவினர், நண்பர்களிடம் எவ்வாறு நீங்கள் இன்று நடந்து கொள்கிறீர்களோ அப்படியே தான் அவர்களும் நாளை நடந்து கொள்வார்கள்..
ஏனெனில் உங்கள் குழந்தைகள் உங்களின் பிரதிகளே...
தோழமையுடன்
உங்கள்..
கவிஞர் விஜயநேத்ரன்