அனைவருக்கும் வணக்கம்.
நான் உங்கள் விஜயநேத்ரன். சிந்தித்து_செயலாற்றுங்கள் பகுதிக்கு உங்களை வரவேற்று, உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.
இது சற்று நீண்ட பதிவுதான். ஆனாலும் இந்த பதிவை முழுமையாக படிக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் இது நமக்கு தேவையான ஒன்று. நான் இந்தப்பகுதியில், மகாபாரதக் கதைகளை பதிவிட்டு வந்தேன். அத்துடன் பொன்மொழிகளையும், வாழ்வியல் மொழிகளையும் பதிவிட்டு வருகிறேன். எனது கவிதைகளையும், மகாபாரதத்தையும் தாண்டி, இதனுடன் அவ்வப்பொழுது சில நடைமுறை சிக்கல்களையும் விவாதித்து வருகிறேன். அந்த வரிசையில் இன்றும் ஒரு முக்கிய விசயத்தை உங்களுடன் விவாதிக்க இருக்கிறேன்.
சமீபகாலமாக பாலியல்_வன்புணர்வு படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இது இந்த சமுதாயத்திற்கு ஏற்றதல்ல. அதிலும் பதின்பருவம் என்று சொல்லும் டீனேஜ் மாணவர்கள் அதில் குற்றவாளிகளாக நிற்பது இன்னும் வேதனைக்குரிய ஒன்று.
பதின்பருவம் தாண்டாத ஒரு சிறுவனுக்கு ஒரு பெண்ணை/சிறுமியை/குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யும் வக்கிரம் எங்கிருந்து வந்தது. அவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று நாம் சற்றே சிந்திக்க வேண்டும்.
இப்பொழுது சிந்திக்க மறந்துவிட்டால், நமது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அவர்கள் வாழப்போகும் சமுதாய சூழ்நிலை மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும்.
பாலியல் குற்றங்களுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படும் விசயங்கள்.
* பெண்ணின் உடை
* சினிமா
* தொலைக்காட்சி
* இணையம்
இவை மட்டும்தான் காரணமா??. பெண்ணின் உடை மட்டுமே காரணமென்றால், 5 வயது கூட நிரம்பாத குழந்தையின் உடையில் எதைக் கண்டு அவளை வன்புணர்வு செய்கிறார்கள்.
சினிமா, தொலைக்காட்சி மற்றும் இணையம் முக்கிய காரணமாக இருக்கிறது. அதை மறுக்க இயலாது.
காரணம் யார்??
நாம் தான்...
அர்ஜுன் ரெட்டி, ஆதித்ய வர்மா போன்ற சினிமாக்களை கொண்டாடுவது யார்... ஒரு தந்தையே தன் மகனை அர்ஜுன் ரெட்டி கதையில் நடிக்க வைத்து ரசிக்கிறார் என்றால், அது எப்படிப்பட்ட மனநிலை....
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சென்சார் கட்டுப்பாடு இன்றி முத்தக்காட்சி முதல் படுக்கையறை காட்சி வரை காட்டுகிறார்கள். சமூக வலைதளங்களிலும் ஆபாசமாக பதிவேற்றம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது.
அவர்களை எல்லாம் கேட்டால், வரும் பதில். யாரும் செய்யாத ஒன்றையா நாங்கள் செய்கிறோம் என்று கேட்கிறார்கள்.
இதற்கான முடிவுதான் என்ன?. ஏனெனில் குழந்தைகளின் கைகளில் கூட செல்போன் எளிதாகக் கிடைக்கிறது. இணையத்தில் பாலியல் பதிவுகள் அதிகமாக இருக்கிறது. அதிலிருந்து நம் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது...
மாற்றத்தை வெளியில் தேடாது நம்மிலிருந்து தொடங்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் வாழ்க்கை முறைகளை நோக்கினால், ஒரு ஒற்றுமை வெளிப்படும்.
அவர்கள் அனைவரும் பெற்றோரின் அரவணைப்பில் இருந்து விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். பெற்றோரின் பார்வையில் இருந்து விலகுவதால், அவர்கள் தவறான திசையில் செல்கிறார்கள்.
இன்னும் சிலர் பணக்கார பெற்றோர்களின் பிள்ளைகள். அதிகமான பணத்தை கொடுக்கும் பெற்றோர், அவர்களின் செயல்களை கண்காணிக்காது விட்டு விடுகின்றனர். அவர்களை எந்த கேள்வியும் கேட்பதில்லை. இதுவே அவர்களுக்கான தவறான தூண்டுதலை உண்டாக்கிவிடுகிறது .
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக விளையாடி ஒன்றாக உறங்கினோம். வீட்டில் தாத்தா பாட்டி சித்தி சித்தப்பா மாமா அத்தை என்று நிறைய பேர் இருந்தனர். எப்பொழுதும் குழந்தை யாருடைய பார்வையிலாவது இருந்து கொண்டே இருக்கும். குழந்தை தவறு செய்யும் பட்சத்தில் அதனை கண்காணித்து திருத்துவது எளிதாக இருந்தது. குழந்தைக்கும் யாராவது பார்த்து விடுவார்கள் என்ற பயமும் இருந்தது. அது அவர்களை தவறான வழியில் செல்லாமல் நல்வழிபடுத்தியது.
இப்பொழுது தனிக்குடித்தனம். வீட்டில் இருப்பதே மூன்று அல்லது நான்கு பேர். அதில் பெற்றோருக்கு தனி அறை. ஒவ்வொரு குழந்தைக்கும் தனி அறை. அதிலும் 5 வயது குழந்தைக்கு எல்லாம் தனி அறை கொடுத்து வெளியேற்றி விட்டோம். கேட்டால் பிரைவஸி என்கிறோம். இந்த பிரைவஸி தான் நடக்கும் பல தவறுகளுக்கும் காரணமாக அமைகிறது. அவர்கள் தனிமையில் செல்ல செல்ல, நம்மை விட்டு விலகி சென்று விடுகின்றனர்.
இதிலிருந்து நாம் செய்ய வேண்டியது..
* உங்களால் முடிந்த அளவிற்கு, குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். உங்கள் அன்பும் நேரமும் அரவணைப்பும் கிடைக்காதபட்சத்தில் தான் அவர்கள் செல்போன் டிவி இணையம் என்று திசைமாறுகிறார்கள்.
* அவர்களின் அன்றாட செயல்பாடுகளை கவனித்து அதில் ஏற்படும் மாற்றங்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதனை சரி செய்யுங்கள்.
* குழந்தைகள் தவறு செய்தால், அவர்களை மிரண்டால் அந்த தவறினை புரிய வையுங்கள். இது அடுத்த முறை அவர்கள் அதை செய்யாமல் தடுக்கும்.
*குழந்தைகளை அன்பினை வெளியில் தேடும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள். அது அவர்களின் மனநிலையை பாதிப்பதுடன், தவறான நபர்களின் வலையில் வீழ்த்தி விடும்.
* ஒரு குறிப்பிட்ட வயதில் நண்பர்கள் மூலமாகவோ, இணையம் மற்றும் தொலைக்காட்சி மூலமாகவோ பாலியல் சந்தேகங்கள் தோன்றலாம். அதைப் பற்றி அவர்கள் வினவும் பட்சத்தில் அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.
* பெண் குழந்தைகளுக்கு போதிக்கும் கற்பை ஆண்குழந்தைகளுக்கும் போதிக்க வேண்டும்.
*பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
* குழந்தைகளின் முன்னிலையில் கணவன் மனைவியைத் தகாத வார்த்தைகளால் அநாகரீகமாக திட்டுவதோ நடத்துவோம் கூடாது. ஏனெனில் எல்லாக் குழந்தைகளின் முதல் நாயகன் தந்தை தான். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு என்ன மரியாதை கொடுக்கிறீர்களோ, அதையே தான் தன்னையே அறியாமல், உங்களை நாயகனாக முன்மாதிரியாக ஏற்று நடக்கும் உங்கள் மகன் மற்ற பெண்களுக்கும் கொடுப்பான்.
* நீங்கள் உங்கள் குடும்பம் சாராத, உங்களுக்கு தொடர்பில்லாத மற்ற பெண்களை எவ்வளவு மரியாதையாக நடத்துகிறீர்களோ, அதையே தான் உங்கள் மகனும் செய்வான். குழந்தைகளுக்கு முன்னால், உங்கள் செயல்களில் கவனமாக இருங்கள்.
* ஆண்குழந்தை குறுக்கு சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவற்றையும் கற்றுத் தந்து அதை அவர்கள் வாழ்வியலோடு இரண்டறக் கலக்குமாறு செய்ய வேண்டும்.
நம் குழந்தைகளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தைக் கொடுக்க விரும்பினால் அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற வேண்டும். நல்ல மனிதர்களாக மாற்ற நல்ல பழக்கவழக்கங்களை கற்றுத்தர வேண்டும். அதற்கு நாம் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். நாம் செலவிடும் அந்த நேரம்தான், அவர்களின் வாழ்க்கையை வளமாக்கும்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.....
சிந்தனை தொடரும்....
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்