யாரோ ஒருவர் செய்பவைகளுக்கு,
தீர்ப்புகள் வழங்குகிறோம்...
மாசற்ற நீதிபதியாய்...
மனுநீதி மன்னர்களாய்...
நீதி வழுவாமல்...
நாம் செய்யும் தவறுகளுக்கு மட்டும்,
தருமிகளைத் துணை பிடித்து,
தாண்டவம் ஆடி விடுகிறோம்..
அவதார புருஷர்களாய்...
நன்னிலை தவறாத நக்கீரன்களையும்,
தன்னிலை தவறிட பேரம் நடக்கிறது...
குடும்பத்தையும், உயிரையும்,
முன்னிலையாக்கி...
மறுத்து நிற்பவர்களுக்கு,
மரணமே பரிசளிக்கப்படுகிறது..
அதிகார வர்க்கங்களால்...
தலைவனின் தவறுகளுக்கு,
உக்கிரமாய் வாதிடவும்,
இல்லை... இல்லை...
வக்கிரமாய் வாதிடவும்...
போர்க்கால அடிப்படையில்,
தயார் நிலையில் இருக்கின்றன..
ஆட்டு மந்தைகள் ...
சரி தவறுகள் தேவையில்லை..
தர்ம அதர்மங்கள் புரிவதில்லை..
நீதியோ, நேர்மையோ அறிவதில்லை..
தலைவனின் விரலசைவிற்காடும்,
அந்த விசித்திர கைப்பாவைகளுக்கு...
நேற்றுப் பேசியது நினைவிலும் இருப்பதில்லை...
நாளை, பேச வேண்டியதைச் சிந்திப்பதும் இல்லை..
இன்றைய கதைக்கு முட்டுக் கொடுப்பதே
வாழ்நாள் லட்சியம் அந்த புற்றீசல்களுக்கு...
அன்றைய பணிசெய்த,
ஆத்ம திருப்தியோடு,
புதுப் பிறவி எடுக்கிறார்கள்,
புதியதொரு உயிராய்..
அடுத்த நாளில்..
இனியேனும் விழத்தெழுமா..
ஆறாவது அறிவென்ற ஒன்று,
அந்த அற்ப உயிர்களுக்கு...
அப்படியொரு நாளில்
அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது...
பெரிதாய் வேறுபாடில்லையென்று,
தவறென்று தெரிந்தும் நியாயப்படுத்துவதும்..
தற்கொலைக்கு முயற்சிப்பதும்...
சிந்தித்து செயலாற்றுங்கள்...
உங்கள்,
✍️ கவிஞர் விஜயநேத்ரன்.