திக்குவாய்ப் பிரச்சனை - காரணம் யார் தெரியுமா???
மனிதர்களாகிய நாம் ஒருவரோடு ஒருவர் தகவல்களைச் சரியாகப் பரிமாறிக்கொள்ள முக்கியமானது மொழி. அந்த மொழியானது இரு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது.
1. வரிவடிவம் (அதாவது) எழுதப்படுவது
2. ஒலி வடிவம் (அதாவது ) பேசப்படுவது.
இதில் படித்தவர் படிக்காதவர் என்று அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்படுவது பேச்சு மொழியாகிய ஒலி வடிவம்தான். அது ஒரே மொழியாய் இருந்தாலும் ஒன்று போல அனைவரும் பேசுவதில்லை. வட்டார வழக்கில் தொடங்கி ஒவ்வொரு மண்சார்ந்த பிரிவினரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவார்கள்.
நாகர்கோவில் தமிழுக்கும், கொங்குத் தமிழுக்கும் உள்ள வேறுபாடு , காஷ்மீருக்கும் கன்னியாகுமரிக்கும் உள்ள தூரத்தை விட அதிகமாக இருக்கும். மதுரை தமிழுக்கும், விழுப்புரம் தமிழுக்கும், மதுரை மற்றும் சென்னைத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளும் அப்படித்தான்.
ஆங்கிலம் உலகம் முழுவதும் பேசப்பட்டாலும், ஒன்று போல இருப்பதில்லை. அமெரிக்க ஆங்கிலமும், இங்கிலாந்து ஆங்கிலமும் வேறு வேறு விதமாக இருக்கும். அதில் பாதி இதில் பாதி என்று எடுத்து இந்தியாவில் உயர் அளவில் ஆங்கிலம் பேசி வருகிறோம். அதைப்போலவே மற்ற நாடுகளில் பேசும் ஆங்கிலமும் அவர்களின் நிலத்தோற்றத்தினால் ஏற்படும் உடல்மாற்றங்களுக்கு ஏற்ப இருக்கும்
இப்படி நாம் அறியாத ஒன்றைக் கேட்கும்போது, அதை உணர்ந்து கொள்ள மூளை சற்று தடுமாறும். அதிக நேரம் எடுக்கும். அதைப்போலவே சிலர் தாங்கள் நினைத்ததைப் பேச நினைக்கும் போது தடுமாறுவார்கள். அப்படி நினைத்ததைப் பேசுவதில் ஒரு சில குறைபாடுகள் இருக்கும். அதிலொன்றுதான் திக்குவாய் குறைபாடு. நம்முடைய ஊரில், தெருவில், நட்பு வட்டாரத்தில், தெரிந்தவர்களில் ஒரு சிலருக்கு அந்த குறைபாடு இருக்கும்.
இதில் வருத்தப்பட வேண்டிய ஒன்று. அப்படிப்பட்ட பலரும் , அவர்களைச் சுற்றி இருப்பவர்களால் எள்ளி நகையாடப்பட்டு கேலிக்கு உள்ளாவதுதான். அவர்களை இயல்பாக இருக்க இந்த சமூகம் அனுமதிப்பதில்லை. அவர்களின் கருத்துக்களை முழுவதுமாய் பேச விடுவதும் இல்லை. கேட்பதற்கும் யாரும் தயாராய் இல்லை.
அதுசரி...
உண்மையில் திக்குவாய் குறைபாடு என்றால் என்ன? .
நம் மனதில் தோன்றுவதை, பேச்சாக வெளிப்படுத்த மூளை கட்டளையிடும். அது பேச்சாக வெளிப்படும். இதில் சிலருக்கு மூளையின் கட்டளைக்கு பேச்சுறுப்புகளான வாய், நாக்கு, தொண்டை போன்றவை கிரகித்துக் கொள்ளத் தடுமாறும். உச்சரிக்க வேண்டிய அல்லது சொல்ல வேண்டிய சொற்களை தெளிவாகவும், சீராகவும், கோர்வையாகவும் சொல்ல இயலாது தடுமாறும் நபரை திக்குவாய் என்று கூறுகிறோம். . திக்கு வாயை ஆங்கிலத்தில் STAMMERING அல்லது SHUTTERING என்று சொல்கிறார்கள்
உடல் சார்ந்த ஒன்றா?
இதை மருத்துவர்களிடம் கேட்டால் அதிகபட்ச விழுக்காடு உடல் சார்ந்த பிரச்சனை இல்லையென்று தான் பதில் கிடைக்கிறது.
அப்படியென்றால் அது மனம் சார்ந்த ஒன்றா என்று உங்களுக்கு தோன்றினால், அது உண்மைதான்.
ஒரு சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையால் தோன்றலாம். தாய் மற்றும் தந்தையின் மரபணுக்குறைபாடுகளால் ஏற்படலாம்.
இரண்டாவது வகை :
தாயின் கருவில் இருக்கும் போதோ, இல்லை பிறந்த பிறகோ ஏதோ ஒரு சூழலில் நடக்கும் ஒரு நிகழ்வு அவர்களை மனதளவில் பாதித்து இந்த குறைபாட்டை உண்டாக்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
குழந்தை கருவில் இருக்கும் போது, தாய் மோசமான சூழலில் இருந்தாலோ,
பேசிப் பழகும் காலகட்டத்தில் மகிழ்ச்சியற்ற சூழலில் குழந்தை வளர்ந்தாலோ, அவர்களை அதிகமாக அச்சமடையச் செய்யும் சம்பவங்கள் நடந்தாலோ,
திக்குவாய் உண்டாகும் நிலைக்கு அக்குழந்தை தள்ளப்படலாம்.
இது எப்போது தெரியவரும்:
குழந்தைகள் 2 முதல் 5 வயது வரையிலான காலகட்டத்தில், தன்னைச் சுற்றி உள்ளவர்கள் பேசும் மொழியை உணர்ந்து பேசத் தொடங்குகிறார்கள். இப்படிப் பேசத் தொடங்கும் காலகட்டத்தில் குறைபாடு தெரியவரும். வெகு சிலருக்கு இளமைப்பருவ காலத்தில் கூட திக்குவாய் ஏற்படக் கூடும். பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கே இந்த குறைபாடுகள் அதிகம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
இதற்கு பெற்றோர்கள் குழந்தைகளின் மீது திணிக்கும் அழுத்தமும் முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
ஒருவேளை, குழந்தைக்கு திக்குவாய் பிரச்சனை இருப்பதை உணர்ந்தால், அதை உடனடியாக சரியான மருத்துவரின் பார்வைக்கு கொண்டு சென்று, அவரின் அறிவுரைகளை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். கண்டவர் சொல்லும் மருந்துகளையோ, அறிவுரைகளையோ குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது.
திக்குவாய் பிரச்சனை உள்ளவர்களின் குறையைக் கிண்டல் செய்வது அவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்கு கொண்டு சென்று முழுவதுமாக பேசும் ஆற்றலை இழக்க வைக்கும்..
நண்பர்களுக்கோ, மற்றவர்களுக்கோ இக்குறைபாடு இருந்தால் அவர்களை தயவு செய்து கிண்டல் செய்யாதீர்கள்.
திக்குவாய் குறைபாடு உள்ளவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை, அவர்கள் பேசுவதை யாரும் கேட்கத் தயாராய் இல்லை என்பதுதான்... பெற்றோரும் சுற்றத்தாரும், நண்பர்களும்
அவர்களைப் பேச அனுமதியுங்கள். திக்கு வாய் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். அவர்களை கேலி கிண்டல் செய்யாமல், இயல்பாக உணரச் செய்யவேண்டியது அவசியமாகும். இதன் மூலம், அவர்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கும். இதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கை உயரும். அது அவர்களது செயல்களில் மட்டுமல்ல பேச்சிலும் பிரதிபலிக்கும்.
அவர்களுக்கு சரியான பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும். திக்குவாய் குறைபாடு உள்ள குழந்தைகள், பாடும் போது சரளமாக தடங்கலின்றி பேசுவதை கவனிக்கலாம். அதற்கு காரணம் பயிற்சிதான். அவர்கள் அந்த வரிகளை திரும்ப திரும்ப படித்து மனனம் செய்து விடுவதால், அவர்களால் சாதரணமாகப் பாட முடிகிறது.
வரலாற்றில் கூட நிறைய அறிஞர்களுக்கு இந்த குறைபாடு இருந்திருக்கிறது. கிரேக்க அறிஞரான மெகஸ்தனிஸுக்கு இந்த குறைபாடு இருந்திருக்கிறது. சரியான பயிற்சியால் அவர் அதிலிருந்து மீண்டு, புவியியல் வள்ளுநராகி உலகத்தை வலம் வந்ததோடு, இண்டிகா என்ற நூலையும் எழுதியுள்ளார்.
ஆனால் இன்றைய திரைப்படங்கள், நாடகங்கள், நகைச்சுவை துணுக்குகள் போன்றவற்றில் திக்குவாய் குறைபாடு உள்ளோரை கேலிப்பாத்திரமாக வடிவமைப்பது பரவலாக இருந்து வருகிறது. அது கூட நம் மனங்களில் அவர்களை ஒரு கேலிப் பொருளாக்க காரணமாக இருக்கலாம்.
இதில் விதிவிலக்காக, சபாபதி, மை டியர் பூதம் போன்ற திரைப்படங்கள் , அவர்களின் மனக்குறையைச் சொல்வதோடு, நமது தவறுகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. அதிலும் மை டியர் பூதம் படத்தின் இறுதிக் காட்சியில், அந்த சிறுவன் பேசும் வசனங்கள் பெற்றோரின் அறியாமல் செய்யும் தவறைக் கண்ணாடியாய்ப் பிரதிபலிக்கிறது.
" நான் எங்கும் அசிங்கப்படக்கூடாது என்று, எனது குறையை மறைக்கவே முயற்சி செய்தீர்கள். அதைச் சரி செய்ய நினைக்கவில்லை. என்னைப் பேச அனுமதிக்கவில்லை. அதைக் கேட்பதற்கும் நீங்கள் தயாராக இல்லை. என் மனதில் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துங்கள் . என்னைப் பேச விடுங்கள். நான் பேசுவதை அமர்ந்து கேளுங்கள். ."
இப்படி 1000 மருத்துவர்கள் சொல்ல நினைப்பதை, சில நிமிடக் காட்சியில் வைத்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நீங்கள் செய்ய வேண்டியதும் அதுதான்.
செய்வீர்களா???...
முறையான பயிற்சியும், சரியான கவனிப்பும், உடன் இருப்பவரின் நம்பிக்கையும் துணை இருந்தால் இக்குறைபாடு மறைந்து, அவர்களும் சரளமாகப் பேசும் நிலை உண்டாகும் என்பது நிதர்சனம்.
சிந்தித்து_செயலாற்றுங்கள்
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்