வளர்ந்து வரும் 'வாடி' 'போடி - ✍️ கவிஞர் விஜயநேத்ரன்
வரலாற்றின் பக்கங்களிலும், கலாச்சாரப் பண்பாடுகளிலும் சிவகங்கைச் சீமைகென்று தனித்த இடமுண்டு. இங்குள்ள பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், கோவில்கள் என்று ஒவ்வொரு விடயத்திலும் அது எதிரொலித்துக் கொண்டே இருக்கும். இதே நிலைதான் தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளிலும் இருந்திருக்க வாய்ப்புண்டு.
அதிலொன்றுதான் பெண்களுக்கு அளிக்கும் மரியாதை. இங்கு பொதுவாக வயதில் குறைந்த ஆண்களை வாடா போடா என்று அழைக்கும் மக்கள், தங்களை விட வயதில் குறைந்த பெண்களை அவ்வாறு 'வாடி' 'போடி ' என்று அழைக்க அனுமதிப்பதில்லை. சிறு பிள்ளையாய் இருந்தாலும், பெரும் மூதாட்டியாய் இருந்தாலும், அவர்களை அழைப்பதில் அந்த மரியாதை வெளிப்படும். தான் பெற்ற மகளாகவே இருந்தாலும், தந்தை பெயர் சொல்லி மட்டுமே அழைப்பார். வாடி போடி என்று அழைப்பதில்லை.
பெற்ற தந்தைக்கே இப்படி என்றால், மற்றவர்கள் அப்படி அழைத்தால் நினைத்துப்பாருங்கள். ஆண் உறவுகளில் கட்டிய கணவனுக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு. அவனைத் தவிர யாராவது அப்படி அழைத்தால், அங்கு ஒரு உலகப்போரே நடக்கும். சில இடங்களில் முறைப்பையனோ, அல்லது தாத்தா உறவுகளோ அப்படி அழைத்து கேலி செய்வார்கள்.
வீட்டில் அண்ணனோ தப்பியோ, அக்காவையோ தங்கையையோ டி போட்டு பேசி விட்டால், அன்று அவனுக்கு வீட்டோடு விருந்து நிச்சயம் உண்டு. அம்மாவின் விளக்கமாற்று அடிமுதல், அப்பாவின் இடைவார் அடி வரை அனைத்தும் பாரபட்சமின்றி ஊட்டப்படும். அதோடு நில்லாமல் , ஓரிரு நாட்களாவது அவனை ஒரு கொலைலைக்குற்றம் செய்தவனைப் போல பார்ப்பார்கள்.
இலக்கண வழக்கப்படி அவள் இவள் என்பது பெண்பாலுக்கு உரிய விகுதி என்றாலும், அக்காவையோ அம்மாவையோ அல்லது தன்னை விட வயதில் பெரியவரையோ அவள் என்று கூறாமல் அவர் என்று மரியாதையுடன் அனைத்தும் வந்தனர்
ஆனால் சமீப காலமாக இந்த மனப்பாங்கு மாறிவருகிறது. உடன் பிறந்த சகோதரியை சாதாரணமாக வாடி போடி என்று அழைக்கத் தொடங்கி உள்ளனர். வேறு சிலரோ சக தோழி யையும் அப்படியே அழைக்கிறார்கள். இன்னும் சிலரோ, பெற்ற அம்மாவையே அவள், வந்தாள் என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். அப்படி அழைப்பது தவறென்றும் யாரும் சொல்வதுமில்லை. இதற்கான உந்துதல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.
மேற்கத்திய முறையில் இருந்து உயர் வர்க்கம் கற்றுக்கொண்டது.அதை இப்பொழுது நடுத்தர வர்க்கத்தை தாண்டி அனைத்து தரப்பினரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அப்படியான காட்சி அமைப்புகள் அதிகம் வருவதும் ஒரு காரணமாக இருக்கலாம். சமீபத்தில் தந்தையைக் கூட அவன் இவன் என்று ஒருமையில் அழைப்பது போல நிறைய காட்சிகள் இருந்தது. அதைக் காணும் குழந்தையும் அப்படியான முறையைத் தானே கையாளும். அதற்கு அது தவறென்று புரிய வைப்பது நம் கடமைகளில் ஒன்று.
தந்தையை எப்படி அவன் என்று கூறுவதில்லையோ, அதைப்போல தாயையும் அவள் என்று அழைக்காமல் இருப்பதே சிறந்தது ஆகும். அதைத்தான் நம் பண்பாடுகளும் பறைசாற்றுகிறது.
ஏன் இதிலென்ன தவறு என்று பலரும் கேட்கலாம்.ஆங்கிலத்தில் எல்லாமே He, She தானே. ஆம். ஆனால், தந்தை தாய்க்கு பிறகு அங்கு எல்லாமே Uncle aunty க்குள் அடக்கம். Brothers, Sisters க்கு பிறகு Cousins தான். ஆனால் நமக்கு சித்தி சித்தப்பா, மாமா, அத்தை வேறுபாடு உண்டு. அக்கா, அண்ணன், மச்சான், மைத்துனன், அண்ணி என்று உறவுமுறை இருக்கிறது அல்லவா..
அதைப் போலதான் இதுவும் . மேற்கத்திய கலாச்சாரங்களிலும், பொதுவுடைமைக் கொள்கைகளிலும் வளர்ந்து விட்ட நமக்கு அது தவறாகத் தெரியாமல் போனால், உலகே வியந்து நிற்கும் நமது பண்பாடுகளும் வலுவிழந்து போகும். அது சிறிது சிறிதாக நம்மையும் சிதைக்கத் தொடங்கும்..
பழமையாக இருந்தாலும், நல்லவற்றைக் கடைப்பிடிப்பது தவறொன்றும் இல்லை..
சிந்தித்து செயலாற்றுங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்