போலி அறிவுரைகள் போதும்!! தூரம் செல்லுங்கள்!!!
முகமூடிகள் அணிந்து கொண்டு
முகஸ்தூதி பாடுகின்ற,
உங்கள் போலி அறிவுரைகள்,
தேவையில்லை எனக்கு...
முன் வந்து அன்பை தெளிப்பதாய்,
அறிவுரைகளை வீசிவிட்டு,
முகம் மறைந்ததும்,
எள்ளி நகையாடி மகிழும்,
உம் போலி அறிவுரைகள்
தேவையில்லை எனக்கு...
இலவசமாய் கிடைக்கின்ற காரணத்தால்,
இறக்கி வைக்க வேண்டாம்...
என்மீது...
அதுவும் உங்கள் நேரம் போவதற்கு...
உள்ளத்திலிருந்து வராமல்.
உதடுகள் மட்டுமே உச்சரிக்கும்...
அதை குப்பைத் தொட்டியில் கூட,
கொட்டி விடாதீர்கள்...
மறந்தும்...
ஏனெனில்,
எந்த வேகத்தில் நீங்கள் தூக்கி எறிந்தீர்களோ,
அதே வேகத்தில் தூக்கி எறியலாம்..
குப்பைத் தொட்டியும்..
வேடமிட்ட அறிவுரைகளை...
குப்பைக்கும் தகுதியில்லையென்று...
அறியாமல் செய்த தவறுகளையும்,
எதிர்பாராமல் வந்த தோல்விகளையும்,
விஷம் கொண்ட தேளின் கொடுக்காய்,
கொத்திக் கொண்டே இருக்கிறீர்கள்...
அறிவுரை என்ற பெயரில்...
அது என் மேல் உள்ள கரிசனத்தால் அல்ல...
உங்கள் உள்ளிருக்கும் வஞ்சத்தால்...
அங்கலாய்ப்பை தீர்த்துக் கொள்கிறீர்கள்...
அறிவுரை என்ற பெயரில்...
கைதட்டி உற்சாகப்படுத்தவோ,
கரம் கொடுத்து உயர்த்தவோ,
தோளோடு தோள் நிற்கவோ,
ஒருபோதும் வருவதில்லை...
உபதேசம் வழங்கும் உத்தமர்கள்...
உங்களுக்குத் தேவை....
என் கண்ணீரும் தோல்விகளும் மட்டுமே...
அறிவுரை என்ற பெயரில் அங்கலாய்க்க...
உங்களுக்காக ஒன்றுதான் சொல்கிறேன்...
இப்பொழுதும்... எப்பொழுதும்....
சிறு காயத்திற்கு மருந்திருக்கு போல்,
பெருங்காயங்களை உண்டாக்கும்,
உங்கள் மருத்துவம் தேவையில்லை..
விலகியே இருங்கள்...
என் விழிகளின் பார்வையில்..
உள்ளிருந்து வரும் கடுஞ்சொல்லையும்
உள்ளன்போடு ஏற்றுக் கொள்வேன்...
உதடுகள் மட்டுமே உச்சரிக்கும்,
வெற்று அறிவுரைகளை தேவையில்லை...
விலகியே இருங்கள்..
இன்று மட்டுமல்ல..
என்றும்...
விழுந்தாலும், எழுந்து கொள்வேன்...
தொலைந்தாலும், மீண்டு வருவேன்...
என் நம்பிக்கையில்...
கவிஞர் விஜயநேத்ரன்..