கவிஞனின் கவிஞன்
இயந்திர வாழ்க்கை நகர்வில் பல வித இசைகள் நம் செவிகளைத் தீண்டுகிறது. அவற்றுள் சில பாடல்களும் அடக்கம். எங்கே அந்த பாடல் ஒலித்தாலும் நம் மனம் அங்கேயே இருக்கும் நாம் அவ்விடம் நகர்ந்த பின்பும் கூட..
சில பாடல்கள் இசைக் கோர்ப்பினால் நமக்குப் பிடிக்கிறது. ஆனால் ஒரு சில பாடல்கள் அதன் வரிகளுக்காகவே நமக்கு பிடித்துப் போகும். நம்மை அறியாமல் நம் உதடுகள் அந்த வரிகளை எப்போதும் முனுமுனுக்கும்.
அப்படிப்பட்ட பெரும்பாலான வரிகளுக்கு சொந்தக்காரர் நா.முத்துக்குமார்.
சாதாரண வார்த்தைகள் இவர் எழுதும் போது தேனாய்த் தித்திக்கும். அந்த தேனின் சுவை நம் ஆழ்மனதிலும் ஆர்பரித்துக் கொண்டே இருக்கும். அத்துனை எளிமையான வார்த்தைக்கு இவ்வளவு வீரியம் எங்கிருந்து வந்தது. அதுதான் நா.முத்துக்குமார் என்ற படைப்பாளியின் சிந்தனை. அவன் பேனா சிந்திய வியர்வைத் துளிகளின் வெளிப்பாடு. அதுதான் அந்த கலைஞனின் வெற்றியும் கூட...
அந்த வெற்றிதான், அவரை குறுகிய காலத்தில் உச்சம் தொட வைத்தது. அந்த எளிமைதான் உச்சத்திலேயே தொடர்ந்து இருக்க வைத்தது..
எல்லா வரிகளுமே இதயத்தை வென்றாலும், என்றும் இதயத்தில் நிற்கின்ற பாடல்களை ஏராளமாய்த் தந்து சென்றிருக்கிறார் இந்த கவிஞானி. அப்படி
வெவ்வேறு தளங்களில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் சிலவற்றை வரிசைப்படுத்துகிறேன்..
"கதை பேசி கொண்டே
வா காற்றோடு போவோம்...
உரையாடல் முடிந்தாலும்
உன் மௌனங்கள் போதும்.... "
இதை விடவா காதலியை ஒருவன் ரசிக்க முடியும்.. இந்த பாடல் முழுமையும் அந்த காதலின் அற்புதத்தை அவர் அள்ளித் தெளித்து இருப்பார். அதில் நனைந்தவர்களுக்கு மட்டுமே அந்த அழகியல் புரியும்.
"நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே...
அதைப் போல வாழ்க்கை கூட போராட்டமே...
.
.
மழைத்துளியிலே வெயில் சேர்ந்த பின் தானே வானவில் தோன்றும்...
"
நான் நம்பிக்கை இழக்கும் போதெல்லாம் எனக்கு நம்பிக்கை தருகின்ற வரிகள் இவை...
அடுத்தது காதலின் பிரிவு.
"கடல் மூழ்கிய தீவுகளை
கண் பார்வைகள் அறிவதில்லை
அது போலே உன்னில்
மூழ்கிவிட்டேன்.
உன் கை கோர்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்
என்றே கேட்கிறதே
உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு
நெருப்பாய் எரிக்கிறதே...
நிழல் நம்பிடும் என் தனிமை
உடல் நம்பிடும் உன் பிரிவை
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே "
காதலின் பிரிவை, வலியை இதைவிட எப்படி சொல்வதென்று தெரியவில்லை.. இந்த வரிகள் இதயத்தை தொடும் போதெல்லாம் கண்ணீர் கண்ணங்களைத் தீண்டும்...
"வேரின்றி விதையின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே....
எந்த உறவு இது
எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல்
பேர் கூட தெரியாமல் இவளோடு
ஒரு சொந்தம் உருவானதே
ஏன் என்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும்
மனம் போகுதே... "
காதல் பூக்கும் நிமிடங்களைக் காதலாய் வரைந்து காட்டி இருக்கும் இந்த கவிஞனின் வரிகள் காதலின் நினைவுச்சின்னங்கள்.
"விழி ஓரமாய் ஒரு நீர் துளி
வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால்
போதும் போதும் போதும்
..
..
கல்லரை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலை போய் தான் சேராதே ..."
ஒரு தலைக் காதலையும் அழகாய் சொல்லும் உன்னதமான வரிகள்... இலங்கை அடையாவிட்டாலும், இதயத்தில் எப்போதும் அதன் வாசனை இருந்துகொண்டுதான் இருக்கும்.
தங்க மீன்கள் என்று சொன்ன உடனே பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது ஆனந்த யாழை பாடல் தான். ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாத பாடலொன்றும் அந்த படத்தில் உண்டு..
நதிவெள்ளம் மேலே என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்…
முன் அந்தி நிலவில் என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்…
அலைந்திடும் மேகம் அதை போல,
இந்த வாழ்க்கையே காற்றின் வழியில் போகின்றோம் !
கலைந்திடும் கோலம் என்ற போதிலும்,
அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம் !
உயிரே உன்னை பிரிந்தேன்,
உடனே நானும் இறந்தேன்…
உடல் தான் அங்கு வாழும்
நீதானே – எந்தன் உயிரே !...
கவிதையை ரசிப்பவர்களுக்கு இப்பாடல் ஒரு விருந்து. மகளைப் பிரிந்த ஒரு தந்தையின் வலியை, வறியவனின் வாழ்வியலை இதை விட அற்புதமாக முத்துக்குமாரை விட யாராலும் சொல்லி விட முடியாது ...
காலத்தை வென்ற வரிகளை ஈன்ற இந்த கவிதையின் தாயுமானவனுக்கு ஏனோ காலத்தை வென்று வாழ இறைவன் வாய்ப்பளிக்கவில்லை...
மகளுக்காக ஆனந்த யாழை மீட்டி
மனதில் நின்ற மகளதிகாரன்
மனதால் வாழ வைக்கும் தந்தைக்கும்
மனதில் நிற்க ஒர் தேசியகீதம் தந்த தங்கமகன்....
சுடும் மழையையும் சுடாத வெயிலையும் தந்த கவிவித்தகன்
எழுதும் வரிகளால் உயிரளிக்கும்
எழுத்துசித்தன்
காலத்தை வென்ற கவிதைகளின்
தாயுமானவன்
கவிஞர்களும் ரசித்திடும் கவிதைகளால் கவிஞனின்கவிஞன்
கவிதைகளே விரும்பிடும் கவிஞானி
என்றும் உன் கவியின் நிழலில்...
உன் கவிதைகளின் ரசிகன்...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்