இதயம் வென்ற இம்சை அரசன் : வைகைப்புயல் வடிவேலு
வடிவேலு
இது வெறும் ஒரு பெயரல்ல...
பல உள்ளங்களின் வெறுமையை வென்றெடுத்து,
உதட்டினில் புன்னகையை உண்டாக்கும் ஒரு அருமருந்து...
பசியை மறந்து,
கவலைத் துறந்து,
வலிகளை விடுத்து,
புன்னகை என்னும் தேவாமிர்தத்தை
மனதிற்குள்
மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ச்சி,
மகிழ்வினை உண்டாக்கும் அரியதோர் வரம்...
பச்சைக்குழந்தை முதல்,
பல்போன முதியவர் வரை,
பாகுபாடின்றி,
ஆழ்மனதில் புகுந்து,
அற்புதங்கள் புரிந்து,
முழுமனதாய்ச் சிரிக்க வைக்கும்,
மாயவித்தைகளின் உருவம்...
ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்...
திரைக்கு வெளியில்...
ஆனால்,
திரையில் தோன்றினால் போதும்...
திகட்டாத காமெடிக்குச் சொந்தக்காரன்...
வாய்மொழி ஏதும் பேசக்கூடத் தேவையில்லை....
உடல்மொழியாலேயே உள்ளத்தை இலகுவாக்கும் கலைஞன்...
தினசரி வாழ்க்கையில் ஏதோ ஒரு இடத்தில்,
நம் வார்த்தைகளில் வடிவேலு வசனம் வந்து போகும்...
நாம் அறிந்தோ அறியாமலோ....
அதுதான் அந்த சிரிப்பு மருத்துவனின் மகத்துவம்....
ஆஹான் என்பது ஆல் இந்தியா மொழியானது...
வடை போச்சே என்பது போஸ்ட் வாண்டாடானது...
ஆணியே புடுங்க வேணாம் அனைவருக்கும் பொதுவானது...
அவ்வ்வ்வ்வ் என்பது அழுகையின் குரலானது..
மறுபடியும் முதல்ல இருந்தா மறுளலின் வடிவானது....
நானும் ரவுடிதான், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில் ஜங் ஜக் என பேசிய வசனங்கள் திரைப்பட பெயர்களாய் மாறியது...
நடையிலும் உடையிலும் நர்த்தனம் செய்து
நம் உள்ளத்தை ரணகளம் செய்த
கைப்புள்ளையை கண்டு மகிழாதவர் யாருமில்லை இங்கு....
கண்ணத்தா எப்படிச் செத்தா என்று கேட்டு
கண்ணாபின்னாவென சிரிக்க வைத்த,
சூனாபானாவைக் கண்டு சிரிக்காமல் கடந்தவர் யாருமில்லை..
பச்சைக்கிளியாய் லெட்டர் படித்து முழித்து,
பத்து மணிக்கு மொட்டை மாடிக்கு வரச் சொல்லி பாட்டாய் படித்து,
வெள்ளைச்சாமியாய் பல பஞ்சாயத்துகளை சிதறவைத்து
நம் உள்ளங்களை ஜில்(லுனு ஒரு காதல்)லென்ற ஆக்கி
ஸ்டைல் பாண்டி, திகில் பாண்டி,
புலிப்பாண்டி, புல்லட்பாண்டி
படித்துறை பாண்டியென பல பரிமாணம் காட்டி
சிங் இன் தி ரெய்ன் என ஸ்டீவாய் நம் மனதை திருடி விட்டு(டாய்)
சுடலையாய் சுற்றி தன் சிலுக்கு சட்டை பந்தாக்களால் வெற்றிக் கொடி கட்டி,
சலூன் கடை சண்முகம், வக்கீல் வண்டுமுருகன் என தொழில் அடைமொழியாய்,
ஸ்நேக் பாபு, நாய் சேகர் என விலங்கு அடைமொழியாய்,
வௌவால், பச்சைக்கிளி என பறவையின் பெயராய்,
ஆறாங்கிளாஸ் அறிவழகனாய் அறியிமை காட்டி,
காண்ட்ராக்டர் நேசமணியாய் கரிபூசி மாறி,
பேக்கரி வீரபாகுவாய் பெரும்பேச்சு பேசி,
கிரேட் கிரிகாலனாய் மேஜிக்கல் காமெடியில் கலக்கி,
கைப்புள்ளயாய் உள்ளத்தில் கலவரம் செய்து,
கீரிப்புள்ளையாய் நம் புன்நகை யைத் திருடி,
பென்சிலில் மீசை வரைந்த கட்டபொம்மனாய் வசீகரித்து,
ஆறு மணிக்கு மேல் ஆள்மாறும் குழந்தை வேலுவாய்,
ஆண்டுகள் கடந்தாலும் அங்கேயே படிக்கும் ஐடியா அய்யாச்சாமியாய்...
பிளான் பண்ணி பண்ணும் சங்கி மங்கி பாடிசோடாவாய்,
பிளானே இல்லாமல் ஊர்சுற்றும் தீப்பொறி திருமுகமாய்,
மாரியம்மன் பேங்க் தொடங்கிய அலார்ட் ஆறுமுகமாய்,
மனதெல்லாம் நிறைந்து நிற்கும் என்கவுண்டர் ஏகாம்பரமாய்,
திரும்பிய இடமெல்லாம் இந்த காமெடி மன்னனின் திருமுகம் தான்..
நம் கவலைகளை கலைக்கும் ஒரே முகம்...
வேலைப்பழுவிலும் வெந்து வருபவனுக்கும்,
மன அழுத்தத்தில் நொந்து கிடப்பவனுக்கும்,
தோல்வியில் துவண்டு இருப்பவனுக்கும்,
வெற்றியைக் கொண்டாட நினைப்பவனுக்கும்
பொதுவான ஒரே முகம்...
அது வைகைப்புயலின் ஒரே முகம்...
உள்ளத்தில் குடிகொண்டு உருக்குலைக்கும்
கவலையென்னும் சூரனை அழித்த வடிவேலனே...
எங்கள் வலிகளை மறக்க வைக்கும் இம்சை அரசனே....
நீ பல்லாண்டு வாழ வேண்டும்..
உன் காமெடியால் எம் மனதை என்றென்று ஆள வேண்டும்...
இனிய பிறந்தநாள் நால்வாழ்த்துகள் வைகைப் புயல் வடிவேலு அவர்களே...