வாழ்வென்னும் ஆசிரியரும் வாழ்க்கைப் பாடமும் : ஆசிரியர் தினக் கவிதை
கற்றுக்கொள்வதெல்லாம்
பாடமாகிறது நம் பார்வையில்..
கற்றுக்கொடுப்பவரெல்லாம்
ஆசிரியர்தான் அதன் பாதையில்..
பெரியவரோ சிறியவரோ
பருவங்கள் மாறினாலும்..
படிப்பினை தருகிறார்கள்...
ஆயிரம் முறை நம்மை...
அன்றாட வாழ்க்கையில்..
உயர்திணையோ அஃறிணையோ
உருவங்கள் மாறினாலும்,
உள்ளத்தால் உணர்த்துகிறார்கள்...
ஏதோ ஒரு பாடத்தை...
ஆண்பாலோ பெண்பாலோ,
அவரவர் வழிதனில்,
அர்த்தம் தருகிறார்கள்...
வாழ்க்கை தத்துவத்தை..
அன்னையும் தந்தையுமாய்
அன்பை பொழிந்தாலும்,
சகோதர சகோதரியாய்
சங்கடம் தீர்த்தாலும்,
தாத்தா பாட்டியாய்
தன் நெஞ்சில் சுமந்தாலும்,
அத்தை மாமாவாய்
அற்புதங்கள் செய்தாலும்,
கணவனாய் மனைவியாய்
கடைசி வரை இருந்தாலும்,
மகளாய் மகனாய்,
மறுவாழ்வை அளித்தாலும்,
பெயரானாய் பேத்தியாய்
பெயரெடுத்துக் கொடுத்தாலும்,
உயிரான நண்பனாய்
உடனிருந்தாலும்,
உள்ளத்தின் எதிரியாய்
எதிர் நின்றாலும்,
உள்ளுக்குள் துரோகியாய்ப்
முகம் மறைத்தாலும்,
கற்றுத் தருகிறார்கள்...
ஏதோ ஒன்றை...
வருவோரும் போவோரும்,
இருப்போரும் மறைந்தோரும்,
அறிந்தவரும் அறியாதவரும்,
எவராய் இருந்தாலும்,
தவறாமல் கற்றுத் தருகிறார்கள்...
வாழ்க்கைப் பாடத்தை...
எதிர்ப்படும்போதெல்லாம்
எல்லாவற்றையும் கற்பித்து
பெரும் ஆசிரியராய்...
பெருமை கொள்கிறது
வாழ்க்கை...
நாம் எதையும்
கற்றுக்கொள்ள
மறுத்தாலும்,
நமக்கது
எல்லாவற்றையும்
கற்றுக்கொடுக்க
மறப்பதில்லை....
ஆர்ப்பரிக்க
நாம் மறந்தாலும்,
ஆச்சரியப்படுத்த
மறப்பதில்லை
வாழ்க்கை...
நொடிக்கொரு
படிப்பினையுடன்
வழியெங்கும்
காத்திருக்கிறது....
வாழ்க்கைப் பாடங்களாய்...
மாற்றங்களோ ஏமாற்றங்களோ
தடுமாற்றங்களோ தடம்மாற்றங்களோ
வெற்றியோ தோல்வியோ
இன்பமோ துன்பமோ
ஏதோவோர் வடிவில்
கற்றுக்கொடுக்கிறது
வாழ்க்கை...
கற்றுக்கொள்ள
நாம் மறுத்தாலும்....
எதிர்ப்படும்
எல்லாவற்றிலும்
ஏதோ ஒன்றைத்
தருகிறது....
படிப்பினையாய்..
படிப்படியாய்...
கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடியும்,
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்,
படிப்பினைதான்..
கற்றுக்கொள்ளும்
மனம் இருந்தால்,
வெட்டவெளி கூட
கல்விக் கூடமே..
அன்றாட வாழ்க்கையில்..
ஆம்...
வாழ்க்கை
மிகப்பெரிய ஆசான்....
வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள் ...
✍️கவிஞர் விஜயநேத்ரன்