ரக்ஷா பந்தன் - உலகம் போற்றும் உன்னத உறவு : உள்ளம் நிறைந்த உடன்பிறந்தோர் நினைவு
தங்கையென்று தமக்கையென்று
தாய் மடியின் வாசமுண்டு...
தம்பியென்று தமையனென்று
தந்தையின் பாசமுண்டு...
தொப்புள் கொடி பந்தமதில்
தொடர்ந்து வரும் சொந்தமுண்டு...
தொலைதூரம் போனாலும்,
தொலையாமல் நிற்பதுண்டு..
அன்பாய் உணவெடுத்து
அன்னையாய்ப் பகிர்வதுண்டு..
அழகாய் விரல் பிடித்து,
அகரம் சொல்லித் தருவதுண்டு..
துள்ளி விளையாடி
தோளோடு சுமப்பதுண்டு
பள்ளிப்பையதை தூக்கி,
பருவங்கள் கடப்பதுண்டு...
நமக்கின்னல் நேரும்போது
துடித்து வருவதுண்டு...
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நம்மோடு நிற்பதுண்டு..
அவரவர் குடும்பமென,
தனித்தனியாய்ப் பிரிந்தாலும்,
அழகான உறவதிலே,
அழகியல் நூறு உண்டு...
அண்ணன்தம்பி நம்பிக்கையே
பெண்ணிற்கு பலமாகும்...
அக்கா தங்கை பாசமதே
ஆணிற்கு உரமாகும்...
தாய்மாமன் உறவதுவே
தரணியிலே சிறப்பாகும்...
ஊர்கூடி நின்றாலும்
உரித்தான சொந்தமாகும்...
சகோதரப் பந்தமதே
சகலத்தின் ஆதாரம்...
சரியாய் நமைதாங்கும்
வரலாற்றின் பூகோளம்...
அழகான உறவிதுவின்
ஆணிவேராய் வாழ்கின்ற
உடன்பிறந்த சொந்தங்களை
உளமார வாழ்த்துகிறேன்...
உதிரத்தால் உருவான
சொந்தங்களுக்கும்,
சகோதர உணர்வினால்
பிணைக்கப்பட்ட உள்ளங்களுக்கும் சகோதர தின நல்வாழ்த்துகள்....
வாழ்த்துக்களுடன்,
உங்கள்,
கவிஞர் விஜயநேத்ரன்