எங்களுக்கும் வேண்டும் எண்ணிலடங்கா தங்கமெடல் : கனவில் ஏழை இந்தியன்
தங்கங்களை அள்ளிக் குவித்து
அரைசதம் கடக்கிறது சீனா...
வெள்ளியும் வெண்கலமும் வென்று
வீருநடைபோடுகிறது அமெரிக்கா...
ஆஸ்திரேலியா இங்கிலாந்தென
அணிவகுப்புகள் தொடர்கிறது...
அணுகுண்டால் அழிந்துபோன
ஜப்பான் தேசம் கூட,
அணுஅணுவாய் முன்னேறி,
மூன்றாம் இடத்தில் ஜொலிக்கிறது..
அடிப்படை வசதியில்லாத,
ஆப்ரிக்க தேசங்கள் கூட,
ஓடியே வென்றுவிடுகிறது....
ஒப்பற்ற தங்கங்களை....
உலக வரைபடத்தில்
உற்றுநோக்கித் தேடினால் கூட,
கண்ணுக்குப் புலப்படாத
கடுகளவு தேசமெல்லாம்,
முன்னணியில் நிற்கிறது,
ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில்...
மக்கள் தொகையில் இரண்டாமிடம்,
மொத்த நிலப்பரப்பில் ஏழாமிடம்,
இருந்தும் ஏனோ தள்ளாடுகிறது...
ஒற்றைப் பதக்கத்திற்காக...
ஒரு வெண்கலம் கிடைத்தால் அற்புதம்...
ஒரு வெள்ளி கிடைத்தால் அதிசயம்....
ஒரு தங்கம் கிடைத்தால் வரலாறு....
வீதிக்கு வீதி திறமையிருந்தும்,
வீணாய் போவது எவ்விடத்தில்???..
விழலுக்கு மட்டுமே நீரிறைத்தால்,
விளைச்சலது வீடு சேருமோ???...
நகரவாசிக்கு கிடைப்பதெல்லாம்
கிராமவாசிக்கு கிடைப்பதில்லை...
ஏழையென்று பிறந்துவிட்டால்,
ஏறிவர ஏணியில்லை...
ஏணியொன்றில் ஏறிவந்தால்,
எள்ளிநகையாடல் குறைவுமில்லை...
வசதிகள் இருப்பவருக்கே
வாய்ப்புகள் கிடைக்கிறது...
வளைந்து கொடுப்பவருக்கே
வசதிகள் நிறைகிறது...
அதிலும் பெண்ணென்றால்
அவமானங்கள் குறைவில்லை...
திறமையில் போராடி,
தட்டுத்தடுமாறி மேலே வந்தால்,
தரங்கெட்ட அரசியலும்,
விளையாடி துரத்துகிறது...
விதியென்ற பெயரில்....
ஆனாலும்,
எதிர்பார்த்து காத்திருப்போம்...
எண்ணிலடங்கா தங்க மெடல்...
எங்களுக்கும் வேண்டுமென்று...
வெறுங்காலுடன் ஓடுபவனுக்கு
காலணிக்கு உதவமாட்டோம்....
பயிற்சியின்றித் தவிப்பவனுக்கு
பயிற்சிபெற உதவமாட்டோம்...
தகுதி பெற்று நிற்பவனுக்கு,
தோள்கொடுத்து நிற்கமாட்டோம்...
போட்டிக்கு செல்பவனுக்கு,
பொருளுதவி செய்யமாட்டோம்....
ஆனாலும்,
எதிர்பார்த்து காத்திருப்போம்...
எண்ணிலடங்கா தங்க மெடல்..
எங்களுக்கும் வேண்டுமென்று...
ஊக்குவிக்க ஆள் இருந்தால்,
ஊக்குவிற்றுப் பிழைப்பனும்,
தேக்கு விற்று வாழ்ந்திடுவான்..
வாலி சொன்ன வார்த்தையிது...
வாழ்க்கைக்கான வார்த்தையிது...
உன்னத உலகமிதில்,
ஊக்குவிக்க ஆட்களில்லை...
உறுதிகுலைக்க ஆட்களுண்டு...
நம்பிக்கையை சிதைத்துவிட்டு
நாங்களும் காத்திருப்போம்...
எண்ணிலடங்கா தங்க மெடல்..
எங்களுக்கும் வேண்டுமென்று...
சாதிக்காக குரல் கொடுப்போம் - பலர்
சாதிக்காது குரல் அறுப்போம்...
சாதித்து வந்தவனின்,
சாதியென்ன தேடிடுடுவோம்...
கீழிருந்து மேலே வந்தால்,
கிழக்கில் கூட அஸ்தமிப்போம்...
மேலிருந்து உதவுவதாய்,
மேலோட்டம் செய்திடுவோம்...
ஆனாலும்,
எதிர்பார்த்து காத்திருப்போம்...
எண்ணிலடங்கா தங்க மெடல்..
எங்களுக்கும் வேண்டுமென்று...
படிப்பு படிப்பென்று,
பந்தாய் உதைத்திடுவோம்...
பந்துதைக்க நேரம் கேட்டால்,
சிந்தை கெட்ட மனிதரென்போம்...
பணம் கொட்டும் பணிதேட
பணத்தையெல்லாம் கொட்டிடுவோம்...
பயனான விளையாட்டை,
பயிற்சிபெற மறுத்திடுவோம்...
ஆனாலும்,
எதிர்பார்த்து காத்திருப்போம்...
எண்ணிலடங்கா தங்க மெடல்..
எங்களுக்கும் வேண்டுமென்று...
இன்றல்ல... நேற்றல்ல..
இதுதான் நடக்கிறது...
இருநூறு ஆண்டுகளாய்...
இருந்தும்,
எதிர்பார்த்து காத்திருப்போம்...
எண்ணிலடங்கா தங்க மெடல்..
எங்களுக்கும் வேண்டுமென்று..
இந்நிலை மாறிடுமா...
இந்தியா ஒளிர்ந்திடுமா..
பதக்கப் பட்டியலில்
தங்கங்கள் வென்றிடுமா...
ஏக்கத்துடன் காத்திருக்கிறான்..
ஏழை இந்தியன்...
பதக்கமின்றி....
✍️ கவிஞர் விஜயநேத்ரன்