என்றென்றும் வாலி : காவியத்தலைவனுக்கோர் கவிதை
எந்நாளும் நலம் வாழ வாழ்த்துச் சொன்னவன்
எல்லோரின் மனம் ஆளும் பாட்டைத் தந்தவன்
காவேரித் தாய்மடியில் பிறந்து வளர்ந்தவன்
கவி வரியால் தமிழ் மடியில் வளர்ந்து சிறந்தவன்
பொன்னம்மாள் கருவறையில் உதித்து எழுந்தவன்
பொன்னான வரியெழுதிப் புகழை அடைந்தவன்
பொய்க்கால் குதிரை ஏறிச் சிகரம் தொட்டவன்
கண்ணதாசனுக்குச் சரிநிகராய்ப் பாட்டை ஆண்டவன்
ராமனுக்குப் பாட்டெழுதிக் கோட்டை ஈன்றவன்.
எம்.ஜி ராமனுக்குப் பாட்டெழுதி கோட்டை ஈன்றவன்..
எதுகை மோனை எழுதுவதில் புலமை பெற்றவன்
எண்ணியதை வரியில் தரும் வளமை மிக்கவன்
வெற்றிலையில் புத்துணர்வைப் பருகி மகிழ்ந்தவன் - அதைக்
கற்றறிந்த சபையினிலே அள்ளித் தெளித்தவன்
பாமரரும் கொண்டாடும் பல பாட்டை வடித்தவன்
பாண்டவர்க்கோர் பூமிதனை எழுதி முடித்தவன்
தனித்தமிழால் அனைவரையும் ரசிக்க வைத்தவன்
தனக்கென ஓர் சிறப்பிடத்தை மனதில் வென்றவன்
தலைமுறைகள் கடந்துவெள்ளித் திரையில் நிற்பவன்
பல தலைமுறைகள் கடந்தும் வெள்ளித் திரையில் நிற்பவன்..
காதலையும் காமத்தையும் சொல்லில் விடுத்தவன்
கவித்துவமாய்ப் பாடலிலே எழுதிக் கொடுத்தவன்
மெல்லிசைக்கும் மயிலிறகாய் மனதைத் தொடுபவன்
துள்ளலிசைப் பாடலிலும் வள்ளல் போன்றவன்
வாலிபத்தின் சேட்டையெல்லாம் வரியாய்த் துளிர்ப்பவன்
வாலித் தமிழ் என்றதொரு நடையைப் படைத்தவன்
அவதாரப் புருஷனாக மண்ணில் அவதரித்தவன்
தச அவதாரிக் கிருஷ்ணனோடு விஜயம் புரிந்தவன்
திரையுலகைத் தன்னெழுத்தால் ஆட்சி புரிபவன்...
தமிழ்த் திரையுலகைத் தன்னெழுத்தால் ஆட்சி புரிபவன்
அழகர்மலைக் கள்ளனதில் முதலடியை வைத்தவன்
அன்புக்கரம் நீட்டியதால் பெரும் பணம் படைத்தவன்
கற்பகத்தின் மன்னனுக்கும் கண்ணீர் துடைத்தவன்
கலங்கரை விளக்கமேறிக் கவிதை
கொடுத்தவன்
எங்கள் வீட்டுப் பிள்ளையென ஆணையிட்டவன்
எதிர்நீச்சல் போட்டுத் தினம் வெற்றி கொண்டவன்
பாட்டுக்குப் பாட்டெடுத்து தனிப் படகோட்டியே
பட்டிக்காட்டு ராஜாவுக்கும் உரிமைக்குரல் கொடுத்தவன்
பாரத விலாசத்திற்குப் பாடலாலே விலாசம் தந்தவன்
அந்தப் பாடல் தந்த (தேசிய)விருதைக்கூட ஏற்க மறுத்தவன்...
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வைத்தவன்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்தவன்..
காற்றோடு கரைந்தாலும், பல காலங்கள் கடந்தாலும்,
பாட்டாக எம்மோடு பல்லாண்டு வாழ்பவன்..
எம் பாட்டுடைத்தலைவன் வாலியெனும் வாலிபக் கவிஞன்...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்