பெருந்தலைவர் காமராஜர் : கல்விக்கண் திறந்த படிக்காத மேதை
சிவகாமி வயித்துக்குள்ள
சிலையொன்ன உருவாக்கி,
கந்தகப் பூமிமேல,
காந்தமொன்ன பெத்தெடுத்தா..
கருப்புத் தங்கமொன்னு,
கண்ணு முழிச்சிடுச்சாம்,
காஞ்சு போன பூமியில ,
ஈரம்பட பொறந்திடுச்சாம்.
கொலசாமி காமாட்சி,
கொலங்காக்க அருளோடு,
கொடுத்த புள்ள நீதானு,
கொலசாமி பேரதையே,
வச்சாங்க ஒனக்குத்தான்...
ஆத்தா அவ கூப்புட்ட,
ஆசையா ராசானு,
அவளோட நெனப்பாலே.
அதுவே நிலைச்சதால
காமராச மாறிடுச்சு..
யாரோட கண்ணுபட்டோ,
பாதில நின்னுடுச்சு...
பள்ளிக்கொடம் போறதுக்கு,
முற்றுப்புள்ளி வச்சிடுச்சு..
பள்ளிக்கொடம் போகலேன்னு
உள்ளுக்குள்ள புழுங்குனியோ..
பாடத்தப் படிக்கலேன்னு
உள்ளத்துள குமுறுனியே..
தேசத்தோட அரசியல,
தேடி நீ படிச்சா - பெருங்
கூட்டத்தோட விடுதலைக்கு,
கூடிக் கொடி புடிச்ச..
தேசத்தோட சகவாசம்,
சிறைவாசம் அனுபவிச்ச..
ஜெயிலுக்குள்ள இருந்துகிட்டே
நகராட்சி தலைவரான..
சத்திய மூர்த்திய நீ
குருவாக ஏத்துக்கிட்ட..
சந்து பொந்து எல்லாம்
காங்கிரச வளர்த்து விட்ட..
குலக் கல்வித் திட்டத்துல
கொடை சாஞ்ச ராஜாஜி,
குள்ளநரி வேலைப்பாத்தும்
வெல்லத்தான் முடியலையே...
உன்ன வெல்லதான் முடியலையே..
ராஜாஜி இறங்கிப் போக,
ராசாவா நீ ஜெயிச்ச...
ராஜ்ஜியத்த புடிச்சாலும்
ராப்பகலா நீ உழைச்ச...
எதிர்த்துன்ன நின்னவர
நிதித்துறைய பாக்க வச்ச..
முன்மொழிஞ்ச நல்லவர
உள்துறையில் அமரவச்ச...
குடிக்கக்கூட கஞ்சியில்ல
படிக்கவொரு வசதியில்ல.
ஆடு மாடு மேச்சாச்சும்
அரை வயிற கழுவுறோனு
ஊருக்குள்ள இருந்தவன
உள்ளத்துல நினைச்சுப்பாத்து
பள்ளிக்கொடங் கட்டிவச்ச...
சாப்பாடு போடுறேன்னு
கூப்பாடு போட்டு நீயும்
படிக்க வரச் சொன்ன..
ஒருவேளை சோத்துக்காக
ஓடிவந்து படிச்சாங்க பலபேரு...
அந்தவொரு வேளை,
சோத்த தின்னு,
ஊருக்குள்ள உசுர் வளத்து,
காலேச்சுப் போய்ப்படிச்சு
ஆனாங்களே ஆபிசர...
அதுல பலபேரு..
பட்டி தொட்டி புள்ளயெல்லா
படிக்க நீ வைச்சதால - உன்னப்
படிக்காத மேதையினு
படிச்சவங்க சொன்னாங்க..
ஆத்துத்தண்ணி தேக்கிவைக்க
அணை நிறைய கட்டி வச்சா..
நீ கட்டி வச்ச அணையால
நீர்வளத்த பெருக வச்சா...
தொழிற்துறைய பெருகவச்சு,
பொதுத்துறைய மிளிர வச்ச..
தமிழ்நாட்ட நிமிர வச்ச,
தலையெழுத்த மாத்தி வச்ச...
தலையெழுத்த மாத்தி வச்ச
தலைமகனே உன்னக்கூட,
பொறந்த மண்ணு தோக்கடிச்சு,
பொதைகுழியத் தோண்டிக்கிச்சு
ஆத்தா அவளுக்கும்
அளந்துதான் படியளந்தா..
அளவுக்கு மீறிகேட்ட,
அக்கரையா பதில்சொல்வ...
பேச்சு மாறலையே
மூச்சு நிக்கும் வரை..
சொன்ன பேச்சு மாறலையே
உன் மூச்சு நிக்கும் வரை..
நாட்டையே ஆண்டாலும் - சொந்த
வீடொனக்கு அங்கு இல்லை..
வாடகை வீட்டுக்குள்ள
வாழ்ந்தாயே கடைசி வரை
நாலு செட்டு கதராடை ,
நாலஞ்சு நாற்காலி,
முழுசா சேத்து வச்ச
முந்நூத்தி அம்பதுந்தான்,
உன்னோட சொத்துனு
வீட்டுக்குள்ள வச்சிருந்த...
பெருந்தலைவன் நீதானு
பெருமையா சொல்ல வச்ச....
காலங்கடந்தாலும்
காமராச நினைக்க வச்ச...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்