சௌரவ் கங்குலி : ஆக்ரோச கிரிக்கெட்டின் ஆதர்ச நாயகன்
அகிலத்திலுண்டு ஆயிரம் துறைகள்..
அதில் வருவோர் போவோர் பல்லாயிரமுண்டு,
அதிலொரு வரமாய், அத்துறையின் முகமாய்
தனக்கெனவொரு இடத்தைப் பிடித்து
தன் பொன்சுவடுகளையதில் பதித்து,
வரலாற்றில் வாழ்பவர் வெகு சிலரே..
அப்படியொரு பெயர்...
சௌரவ் கங்குலி...
கிரிக்கெட் உலகின் கிங்மேக்கர்..
இந்தியக் கிரிக்கெட்டின் அக்ரெஷர்...
அவர்தான் சௌரவ் கங்குலி...
இன்று தோனி கோஹ்லி என்று
உச்சம் தொடுபவர் யாராகவும் இருக்கலாம்...
அதற்கு விதை போட்டவர்...
கங்குலி என்னும் வங்கப்புலி..
இன்று கெயில் டிவில்லியர்ஸ் பொலார்டு என்று
ஆளாளுக்கு அனல் பறக்க சிக்சர் அடிக்கலாம்..
அன்று சிக்சரென்றால் கங்குலி மட்டுமே...
இடது கை ஆட்டக்காரர்களில் கில்லி...
இறங்கி வந்து அடிப்பான் சொல்லி...
இன்றும் ரசிகர் கூட்டம் உண்டு...
இவனடித்த பிரமாண்ட சிக்ஸர்களுக்கு....
களத்தில் முன்னிறங்கி, காலை நகர்த்தி
பௌலரின் தலைக்குமேல் பறக்கவிடும் சிக்சர்களை
காணக் கண் கோடி வேண்டும்...
ஆம்....
பாயிண்ட் திசையில் பவுண்ட்ரிகள் பறக்கும்...
ஸ்ட்ரெயிட் திசையில் சிக்சர்கள் தெறிக்கும்..
கண்களைச் சிமிட்டிக் கொண்டே, ஆப்சைடில் விளாசும் அழகுக்கே,
தனியாய் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு..
சச்சினுடன் களமிறங்கி இவன் வெடிக்கும் சரவெடிக்கு,
சரிநிகராய் வேறொன்று கிடைக்காது...
சரியானவர்களைக் கண்டறியும் சாணக்கியன்
கண்டறிந்தவர்களை மெருகேற்றும் துரோணன்
அசராமல் அடிக்கும் சேவாக்,
அதிரடியில் யுவராஜ் சிங்,
பினிஷிங்கில் தோனி,
பீல்டிங்கில் கைஃப்,
சுழலுக்கு ஹர்பஜன்,
ஸ்விங்குக்கு ஜாகீர்கான்
என்று இவன் கண்டெடுத்த வைரங்கள்தான்,
பிரகாசமாய் ஒளிர்ந்தது பின்னாளில்..
தன்னம்பிக்கையின் நாயகன் ...
தலைமையேற்றதில் முதல்வன் ..
தடமாற்றத்தால் தலைகுனிந்த அணியை
தலை நிமிர செய்த தலைவன் ...
ஆட்டத்தின் போக்கை அணு அணுவாய் மாற்றிய
ஆக்ரோச நாயகன்..
அந்நிய மண்ணிலும் வென்று காட்டிய
அசத்தல் மன்னன்...
ஆக்ரோஷமென்றாலே ஆஸ்திரேலியாவென்று
அறிந்திருந்த காலம் அது...
மற்ற அணிகளெல்லாம்
அவர்களுக்கு கீழ்தான்..
அந்த மரபுகளை உடைத்தெறிந்து
இந்திய அணிக்கு இளரத்தம் பாய்ச்சி,
இளமையாய், புதுமையாய் வடிவம் கொடுத்தான்..
சூதாட்டப் புயலால் சிதைந்து...
தந்தையில்லாக் குடும்பமாய்த் தடுமாறியது...
இந்திய அணி...
தலைசிறந்த பேட்ஸ்மேனாய் இருந்தாலும்
தண்ணீர் காட்டியது தலைவன் பதவி....
சச்சினுக்கு....
மூத்த பிள்ளைக்கே மூச்சுமுட்ட,
இளையவன் எழுந்து நின்றான்....
எழுந்தவன் துணிந்து நின்றான்...
துணிந்தவன் வென்று நின்றான்....
ஊசலாடிக் கொண்டிருந்த அணிக்கு
இள ரத்தங்களால் புத்துயிர் கொடுத்தான்....
அடிபணிந்து மட்டுமே பழக்கப்பட்ட அணியை
ஆக்ரோஷமாய் மாற்றிக் காட்டினான்...
அடிக்கு அடி.... உதைக்கு உதையென
ஆஸ்திரேலியா இங்கிலாந்திற்கே
தண்ணீர் காட்டினான்....
தன் தனித் திறமையால்.....
அயல்நாட்டில் கூட வெற்றிக் கொடி ஏற்றினான்...
அடுத்தடுத்த வெற்றியால் உச்சம் தொட உயர்த்தினான்....
உலகக் கோப்பை ஆட்டத்தின்
இறுதி வரை சென்று தோற்றாலும்
உறுதி குறையாமல் பார்த்துக் கொண்டான்....
அவன் இட்ட அடித்தளத்தில்....
அடுத்த தலைமுறை கட்டிடம் எழுப்பியது...
கனவாய் இருந்த கோப்பையை ஏந்தி....
உன்னால் என்னை வெல்ல முடியுமென்றால்
என்னாலும் உன்னை வெல்ல முடியுமென்ற
உத்வேகத்தை உணர்வுக்குள் ஊட்டியவன்...
இந்திய வெற்றிகளுக்கு அன்றே நீர் விட்டவன்...
இன்றைய வெற்றிகளின் வேரிவன்...
இவனன்றி வேறெவன்...
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த தலைவனிவன்...
இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்க,
அன்று வித்திட்ட ஒருவன்...
அவனே சிறந்த தலைவன்...
கங்குலி என்னும் முதல்வன்..
ஹேப்பி பர்த்டே தாதா....
பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா....
வாழ்த்துக்களுடன்
கவிஞர் விஜயநேத்ரன்