ஹர்காரா - நம்மில் ஒருவரே நாட்டார் தெய்வங்கள்
ஆலமர விழுதுகளாய்
ஆழ்தேக நரம்புகளாய்
புகையிரத வழித்தடமாய்
குக்கிராமத்திலிருந்து
குபேரபுரி வரை
பரவி இருக்கிறது
பாரத அஞ்சல்துறை...
பாரெங்கும் நிறைந்தாலும்
ஊரெங்கும் இருந்தாலும்
தொடக்கமொன்று இருக்கும் தனே...
முதலடியாய்... முதற் புள்ளியாய்...
அன்னைத் தமிழ் அகரமாம்
அந்தவொரு தொடக்கமாம்...
அதுவே ஹர்காரா கதைக்கரு..
வரலாற்றை மெய்ப்புலமாய்
வாழ்வியலை உயிர்த்துமாய்
வெள்ளித் திரைவடிவாக்கி
விருந்தளித்திருக்கிறார்..
திரை இலக்கிய நாயகன்...
ஆம்..
அவரே இயக்க நாயகனும்...
#ராம்_அருண்_காஷ்ட்ரோ..
கல்லுக்கும் மண்ணுக்கும்
காண்கின்ற மரத்திற்கும்
கதைநூறு இங்குண்டு...
புல்லிற்கும் பூவிற்கும்
புதையுண்ட சாவிற்கும்
புதுக்கதைகள் இங்குண்டு...
நடுகல்லாய் நெடுமரமாய்
நட்டுவித்த அருவாளாய்,
திரிசூலமாய் திசைக்காவலாய்
காலங் கடந்து நிற்கின்ற
கதநாயகர்களுக்கு
கதை மட்டும் இருக்காதா....
இரத்தமும் சதையுமாய்
நித்தமிந்த பூமியிலே,
உன்னைப் போல,
என்னைப்போல,
உயிருடன் வாழ்ந்து,
ஊருக்காக உயிர்விட்ட,
உத்தமர்கள் அவர்கள்தானே...
அப்படி,
குலம் காக்கும் தெய்வத்திற்கு ,
ஊர் காக்கும் காவலர்களுக்கு
உன்னத கதைகள் உண்டு...
ஊரெங்கும் விதைகள் உண்டு...
செவிக்குள்ளே நினைப்பதற்கு
சிந்தனையில் உரைப்பதற்கு
சிகரமேறும் நம்மிடமோ
சிறு நேரம் அதற்குயில்லை..
அதைத்தான் சொல்கிறது
ஹர்காரா காவியமும்.
பெரும் மதங்கள் விழுங்கிய
அருந்தெய்வ உயிர்த்துவத்தை
உயரப் பிடித்தே துவங்குகிறது...
உன்னதமாய் தொடக்கமும்...
தொலைத்தொடர்புக்கு தொடர்பில்லாதொரு
தொலைதூர மலை கிராமம்..
அங்கும் இருக்கிறதோர் அஞ்சல் நிலையம்.
அதன்அனைத்துமாய் காளி (வெங்கட்)..
வகைவகையாய் இரகரகமாய்,
வெள்ளந்தி மனிதர்களை
வீடெங்கும் சுமந்திருக்க,
வேறென்ன செய்வதென்று
விழி பிதுங்கி நின்றபடி,
கன்னிவெடி தேடுகின்றகாவலராய்
சமிக்ஞைகளைத் தேடுகிறார்..
அஞ்சலகப் பரிவர்த்தனைக்கு
அன்றாடம் வலைவீசி
அரசு வேலை கிடைத்தால்,
அடுத்தது என்ன திருமணம் தானே..
முப்பத்திமூன்றைத் தொட்டுவிட்டு
மும்முரமாய் பெண் தேட,
ஒன்றும் அமையவில்லை...
கட்டமிட்டு காய் நகர்த்தி,
திட்டமிட்டு செயலாற்ற,
வட்டமிடும் விதியது
பட்டமதை திசை திருப்ப,
பரிதவித்து நிற்கின்றோம்...
அவரைப் போலவே...
மலையெல்லாம் வழியிட்டு
மக்கள் வாழ வழிவிட்ட
மாதேஸ்வரத் தெய்வமான
ஈசன் மலைக் காவலனில்
நேசங்கொண்ட அவ்வேளை
மனிதனாய் தொடங்கி,
மனிதத்துடன் நிறைகிறது...
காட்சியும்... காண்பவர் விழியும்...
அளவாய் உப்பிட்ட
அற்புதசத்துணவாய் ,
நிறைவாய் இருக்கிறது ..
நெஞ்சத்தில் நிற்கிறது...
ஆம்...
இது செயற்கை உரமிடாத,
இயற்கை விளைபொருள்....
உண்டு மகிழுங்கள்....
உணர்வுக்குள் கடத்துங்கள்...
இதுவரைக் கடந்தது பரவாயில்லை...
இனியேனும் தேடிடுவோம்..
நம் வரலாற்றையும் வாழ்வியலையும்...
இதைத்தானே சொல்கிறது...
இத்திரைப்படமும்...
வாழ்த்துகள் அனைவருக்கும்.
வாழ்த்துங்கள் அனைவரையும்....
வாழ்த்துகளுடன்,
✍️கவிஞர் விஜயநேத்ரன்..