உயிரும் உடலும் இணைந்திருப்பதே வாழ்க்கை... அப்பொழுதுதான் நாம் அனைத்தையும் உணர முடியும்..
இசையும் ஒரு வாழ்க்கைதான். அப்படி இசையில் உயிரும் உடலுமாய் இணைந்து நமக்கு உணர்வுகளை அள்ளி தெளித்தவர்கள் இருவர்....
ஒருவர் #மெல்லிசை_மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் .
இன்னொருவர் #கவியரசர் கண்ணதாசன்.
இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள்...
கவியரசர் பிறந்தது 1927-ம் ஆண்டு செட்டி நாட்டில் உள்ள சிறுகூடல்பட்டியில். பிறந்த தேதி ஜூன் 24.
மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் பிறந்தது இதே ஜூன் 24-ம் தேதி பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில்.
இருவரும் இணைந்து தான் மகிழ்ச்சி, துக்கம், ஆறுதல், காதல், பாசம், நட்பு, துரோகம், வலி என அனைத்தையும் பாடலாய் பரிசளித்து நம்மை அதை உணரச் செய்தார்கள்...
கண்ணதாசனின் தாக்கம் இல்லாத ஒரு கவிஞனையும், எம்.எஸ்.வி யின் தாக்கம் இல்லாத ஒரு இசையமைப்பாளரையும் தமிழகத்தில் காண முடியாது. எங்கேனும் அவர்களின் சாயல் உள்ளுக்குள் உயிர்த்து கொண்டுதான் இருக்கும்.
வாழ்க்கையை தொலைத்தவனுக்கு
"மயக்கமா கலக்கமா" ,
வாழ்க்கையை தேடுபவனுக்கு
"மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்"
காதலில் வாழத் துடிப்பவனுக்கு
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் "
காதலின் பிரிவின் வலியைச் சொல்லும்
"இங்கு நானொரு பாதி நீயொரு பாதி"
வாழ்வில் கரையேற நினைப்பவர்க்கு
"வாழ நினைத்தால் வாழலாம்...
வழியாய் இல்லை பூமியில்"..
அண்ணன் தங்கை பாசத்திற்கு இன்றும் தேசிய கீதமாய் ஒலிப்பது
"மலர்ந்தும் மலராத பாதி மலர் போல...." தான் .
இயலாமையை சொல்லும்
"பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது"
"நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா....,
திராவிட இயக்கத்தின் பாடலாக பட்டி தொட்டி எங்கும் ஒலித்த "அச்சம் என்பது மடமையடா..."
ஆன்மிகத்தில் ஆறுதலாய் ஒலிக்கும்
"ஆறு மனமே ஆறு ஆண்டவன் கட்டளை ஆறு"
என்று இவர்கள் தந்த வாழ்வியல் பாடங்களை சொல்லிக்கொண்டே போகலாம்...
அதிலும் இந்த பாடலுக்கு இணையாக வேறு பாடலை சொல்லவே முடியாது..
தமிழில் இரு பொருள் பட பாடுவதை சிலேடை என்று கூறுவர். அவ்வாறு எழுதுவது சிறப்பான யுக்தி. அதில் ஒன்றுதான் இந்த அத்திக்காய் காய் காய்.
"அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ"
இத்தனை காய்களை கவியாக்கிய கண்ணதாசனை என்னவென்று சொல்வது... அந்த காய்களையும் கனியவைத்து இசையமைத்த மெல்லிசை மன்னரை எப்படி போற்றுவது....
அவர்களின் நட்பை பற்றி நான் படித்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. இந்நிகழ்வு #தி_இந்து இதழில் கண்டது...
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்குமிடையே நட்பில் விரிசல் விழுந்த நேரத்தில், எம். ஜி ஆர் படங்களுக்கு மற்ற கவிஞர்கள் பாடல் எழுதி வந்தனர். அதன்படி, எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்த படம் உரிமைக்குரல் படத்திற்கு ஒரு காதல் பாடல் தேவைப்பட்டது.
அதை பல்வேறு கவிஞர்களை வைத்து எழுதி, எம்.ஜி.ஆரிடம் காட்ட, அவருக்கு எந்தப் பாடலும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. வேறு என்ன செய்யலாம் என்று யோசித்த எம்.எஸ்.விக்கு ஒரு யோசனை வந்தது. அதன்படி கண்ணதாசனை அழைத்தார். அவரை அந்தப்பாடலை எழுதுமாறு சொல்ல, கவியரசர் " இந்த சூழலில், நான் எப்படி எழுதுவது " என எம்.ஜி.ஆருடன் இருந்த விரிசலால் மிகவும் தயங்கினார்.
எம்.எஸ்.வி " அதை நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று சொல்லவே, சற்று நேரத்தில், வழக்கம்போல் அற்புதமான வரிகளை எழுதிக் கொடுத்தார். அது இயக்குனர் ஸ்ரீதருக்கும், விஸ்வநாதனுக்கும் பிடித்துப் போக, மக்கள் திலகத்திடம் காட்டினர். வரிகளைப் படித்ததுமே அவருக்கு தெரிந்துவிட்டது " இது கவியரசருடையது " என்று.
"அற்புதமாக இருக்கிறது. அவரால் மட்டும்தான் இப்படி எழுத முடியும். இது அவர் எழுதியதா " என்று எம்.எஸ்.வியை நோக்க, அவரும் 'ஆமாண்ணே.. இது கவிஞர் எழுதியதுதான்... நீங்க கோவிச்சிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கையில எழுதச் சொன்னேன்.. இனி உங்க அபிப்பிராயம்,' என்றாராம்.
மக்கள் திலகமும் இதுதான் சரியாக இருக்கிறது என்று அந்தப் பாடலே படத்தில் இருக்கட்டும் என்றாராம்.
அன்றைய சூழலில் எம்.ஜி.ஆரை எதிர்த்து அவருக்கு பிடிக்காத விஷயத்தை செய்து பாராட்டைப் பெற்றவர் மெல்லிசை மன்னர் மட்டுமே. அதற்கு காரணமாக அமைந்தது மாற்று இல்லாத கவியரசின் வரிகள்தான்.
அப்படி அவர்கள் வியந்த அந்த வரிகள்
'விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!'.
இது அன்றைய காதலர்களின் தெய்வீக ராகம்....
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இணையராய் திகழ்ந்தனர். இறந்தாலும், தங்கள் பாடல்களால், இன்றும் நம்முடன் இருக்கின்றனர்.
இசையால் இணைந்து இசையாய் நம் இதயத்தில் வாழும் இருவரையும் இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் நினைவு கூறலாம்..
அன்புடன்...
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்
#HappyBirthdayKannadasan
#HappyBirthdayMSVishwanathan