சிறுகதை என்பது வெறும் கதை மட்டுமல்ல. அன்றாட வாழ்க்கை சம்பவங்களின் ஒரு சிறு பிரதிபலிப்பே ஆகும். அப்படி பல கதைகள் நம் அன்றாடம் சந்திக்கும் பல பிரச்சனைகளை கதைக்களமாக கொண்டு அதனை விவாதித்து அதற்கான தீர்வையும் உள்ளங்கை நெல்லிக்கனியென எடுத்துரைத்திருக்கிறது. அப்படி ஒரு சிறுகதையைப் பற்றித்தான் இன்று பேசலாம் என்று நினைக்கிறேன்.
இன்று #அண்ணா அவர்கள் எழுதிய #செவ்வாழை பற்றி எனது பார்வையை பதிவிடுகிறேன். பொதுவாக அண்ணாவின் படைப்புகளில் திராவிட சிந்தனைகள் மேலோங்கி இருப்பதால், அது சமூகப் பிரச்சனைகளை விவாதிக்க மறுப்பதில்லை... அதை இந்தக் கதையிலும் அதற்கு சற்றும் குறைவில்லாமல் பேசியிருக்கிறார்.
இப்பொழுது கதைக்கான தளத்தைப் பார்க்கலாம்...
கதையின் நாயகனுக்கான இடத்தைப் பிடிப்பது செவ்வாழை மரம் தான். அதன் பயணத்தில் தான் கதை நகர்கிறது... ஒரு ஏழைக்குடும்பம் அதைக் கஷ்டப்பட்டு வளர்த்து அதன் பலனை அடையும் நேரத்தில் அது எவ்வாறு மேல் வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்பதை அழகாக பதிவு செய்திருப்பார். வாழ்க்கையில் கைக்கு அருகிலேயே இருந்தாலும் ஏழைக்கு அது எட்டாக்கனியாகவே இருக்கிறது என்பதை உணர்த்தி இருப்பார்.
அந்த மரத்தை மொத்த குடும்பமும் வளர்க்கும் விதமும், அந்தக் குழந்தைகளின் கனவும் தான் இன்றைய நடுத்தர மக்களின் நிலை... ஆனால் முடிவில் அது பண்ணையார் குடும்பத்தாரால் பறிக்கப்படுகிறது. அது அவர்களுக்கு தேவையே இல்லைதான். ஆனால் இடைத்தரகரான கணக்குப்பிள்ளை தன் சுயலாபத்துக்காக, தன் முதலாளியிடம் நல்ல பெயரை வாங்குவதற்காக, ஒரு ஒட்டு மொத்த குடும்பத்தின் கனவை அழித்து விடுகிறார். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், பண்ணையார் வீட்டிற்கு சென்றதை விட இவர் பதுக்கி தின்றதே அதிகம். இதுதான் இன்றைய நாட்டின் நிலைமையும் கூட..
இக்கதையில் அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஏழைகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் சமூக அமைப்புக் காட்டப்படுகிறது. உழைப்பின் பெரும்பகுதி ஆண்டைக்குச் செல்வதால் உழைப்பவர்கள் பலனின்றி, பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆளாவது காட்டப்படுகிறது. செங்கோடன் கஷ்டப்பட்டு வளர்த்த செவ்வாழையின் பயனைப் பிறர் அடையும் நிலையில் அவனும், அவன் குழந்தைகளும் அதைக் கொஞ்சமும் அனுபவிக்காமல் அவலத்திற்கு ஆளாகும் சிக்கல், சமுதாயச் சிக்கலாகிறது. 'செங்கோடனின் செவ்வாழை தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணம்’ என்பதன் மூலம் தொழிலாளர்களின் சிக்கல்கள் வெளிப்படுகின்றன. பிறரின் துன்பத்தில் இன்பம் காணும் சுந்தரம் போன்றவர்கள், சமூகச் சிக்கல்களுக்குக் காரணமானவர்களாகக் காட்டப்படுகின்றனர். அதிகார வர்க்கத்தை விட அவர்களின் தவறுக்கு துணை நின்று, சலாம் போட்டு தங்கள் வயிற்றையும் வாழ்க்கையையும் நிரப்பி கொள்பவர்கள் தான் சமுதாயத்திற்கு அதிக ஆபத்தை உண்டாக்குகிறார்கள்
நாட்டின் நலன் என்று சொல்லி நடுத்தர குடும்பங்கள் தங்கள் கனவுகளைத் தியாகம் செய்து வரியாக செலுத்தும் பணமானது, அதிகார வர்க்கத்திற்கும், அதற்கு சலாம் போட்டு வாலாட்டுபவர்களுக்கும் மட்டுமே செலவிடப்படுகிறது. மக்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள். வளர்ச்சி என்பது அவர்களுக்கு என்றுமே எட்டாக்கனி தான் என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டியிருப்பார்..
தன் வீட்டில் வளர்த்த செவ்வாழைப் பழத்தைக் கடையில் பார்த்து அதனை வாங்கும் வழியின்றி வறுத்த கடலை வாங்கிக் கொண்டு வந்த கரியனின் நிலைதான் இன்றைய விவசாயியின் நிலை.. தான் விளைவித்த நெல்லை விற்று விட்டு, நியாய விலைக் கடை அரிசியை வாங்கி உண்ணும் அவனது நிலைதான் இங்கு எனக்கு தோன்றுகிறது.
மொத்தத்தில் செவ்வாழை நடுத்தர வர்க்கத்தில் வாழ்க்கைப் பதிவு..
✍️கவிஞர் விஜயநேத்ரன்
இதுவரைப் படிக்காதவர்களுக்கா கதை :