வெற்றியின் வேர்களைத் தோல்வியில் கண்டறியுங்கள்....
முகம் தெரியாதவனும்
நண்பனாவான்..
உறவினர் எண்ணிக்கை
அதிகமாகும்..
ஊர்ப்பெருமையை
உலகம் சொல்லும்..
கைதட்டல்கள் விண்ணைப்
பிளக்கும்..
கரம் கொடுத்து
கைகள் சிவக்கும்...
பூங்கொத்துகள்
வாசனை பரப்பும்...
புகழ்பாடல்
மழையெனப் பொழியும்.
மாலைகளின் பாரத்தில்
தோள்கள் வலியெடுக்கும்..
காலைகள் விடியும் முன்னே ,
தொலைபேசி விழித்துக் கொள்ளும்..
இத்தனையும் உன்வசமாகும்..
வெற்றியின் தருணங்களில்..
ஆனால்.,
தோல்வி தழுவும் போது...
தோப்புக்குள் இருந்தாலும்
தனிமரம் என்றாவாய்..
ஆறு வழிச் சாலையிலும்
போகும் வழி குழம்பிடுவாய்..
வெறும்வாய்க்கு அவலாவாய்..
வீண்கதைக்கு ஊறுகாயாவாய்...
அன்றே தெரியுமென்ற
ஆருடங்கள் ஆயுதங்களாகும்.
சூறாவளிக் காற்றாகி
சுழன்றுன்னைத் தாக்கும்..
தண்ணீரில் அழும் மீனாவாய்..
தடம் தெரியாத வேராவாய்...
அவ்வளவுதான் எல்லாம் முடிந்ததென்று,
ஆழ்மனதில் தோன்றும் நொடியில்,
தோள்களின் மீது ஒரு கை இருக்கும்..
உன்னால் முடியுமென்று
உற்சாகம் விதைக்கும்..
உள்ளத்தின் இரணங்களுக்கு
மயிலிறகாய் மருந்திடும்..
உனக்கானப் பாதைக்கு
ஊக்கத்தின் உரமிடும்..
உன் கண்ணீர்த்துளிகளுக்கு
உடனடியாய் விடைதரும்..
அதுதான்...
உன் வெற்றிக்கான கை..
உன் வெற்றியைக் காண விரும்பும் கை...
பற்றிய அந்தக் கைகளைமறந்துவிடாதே...
வெற்றிகள் கை சேரும் போது...
வாழ்த்துகளுடன்
கவிஞர் விஜயநேத்ரன்