ஏம்மா - கவிஞர் புதியவன் வாழ்வின் வலி பேசும் புத்தகம்
இரவும் பகலும் சரிபாதியெனச் சுழலும் பூமியாய், மனித வாழ்க்கையும் இன்பதுன்பம் என்ற இரண்டையும் கலந்தே படைக்கப்பட்டுள்ளது. மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் இவ்விரண்டுடன் பின்னிப்பிணைந்து வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாய் இருந்தாலும், அதன் விகிதங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுகிறது. சிலருக்கு இன்பங்கள் அதிகமாக இருக்கும். சிலருக்கு துன்பங்கள் அதிகமாக இருக்கும். வேறு சிலருக்கோ, இன்பமும் துன்பமும் ராட்டினமாய் சுழன்றடிக்கும். இப்படி ஏதோ ஒரு விகிதத்தில் நம்மை தினமும் நகர்த்தி கொண்டே இருக்கும்.
இப்படிப்பட்ட வாழ்க்கையில், இலக்கை நோக்கிப் பயணிக்கும் பாதையில் சிலருக்கு மலர்ப் பாதைகள் அமையலாம். இலகுவாக உச்சத்தைத் தொடலாம்.
ஆனால் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பெரும்பாலானவர்களுக்கு அப்பாதை முட்களும், கற்களும் நிறைந்தே இருக்கிறது. வெற்றியை ருசிக்க விரும்புபவர்கள், அந்தப் பாதையைக் கடந்து, அது தந்த வலிகளையும், வடுக்களையும் சுமந்து தொடர்ந்து முன்னேற வேண்டும்.
அப்படியொரு பாதையில் பயணித்து, இன்று தனக்கான இலக்கின் பாதையில் ஒரு நிலையை எட்டியுள்ள #கவிஞர்_அன்பரசு என்னும் #புதியவன், படைத்துள்ள சிறு சிறு சிற்பங்களின் தொகுப்பே '#ஏம்மா'.
உளி தந்த வலிகளை உள்ளுக்குள் சுமந்து, அதன் வடுக்களை நமக்குள் கடத்தி நேர்த்தியாகப் புன்னகைக்கிறது அந்த அழகான சிற்பங்கள்.
நம்பிக்கை என்பது கண்ணாடி போன்றது. அதன் மீது சந்தேகம் என்ற சிறுகல் பட்டாலும் விரிசலை உண்டாக்கும். அவ்விரிசல் மாளிகையைக்கூட நொடியில் தரைமட்டமாக்கும். உடைந்ததை ஒட்டவைக்க முடியாதூ. அப்படியே முயன்று, அதை ஒட்டவைத்தாலும், விரிசல்களைச் சரிசெய்ய இயலாது. #ஏம்மா சிறு கல் உடைத்த பெருங்கண்ணாடி மாளிகையையும், அது ஏற்படுத்திய இரணத்தையும் பதிவு செய்திருக்கிறது.
" ஏம்மா.. அப்பா ஏம்மா என்னை அடிச்சாரு"
என்ற வரிகள் நம்பிக்கையை உடைத்த கருப்பனின் இதயங்களில் மட்டுமல்ல, நம் இதயத்திலும் எதிரொலிக்கும் என்பதை மறுக்க முடியாது.
மகனுக்காகவே வாழும் , விவரம் அறியாத ஒரு கிராமத்துத் தாயின் வலிகளைச் சொல்கிறது இரண்டு ரூபாய். பேச்சியின் தியாகத்தை உணரும் அதே வேளையில், அத்தனை வருடங்களில் ஒருமுறை கூட வந்து பார்க்காத சின்னத்துரையின் மீது எழும் கோபத்தையும் அடக்கமுடியவில்லை.
அன்று மட்டுமல்ல.. இன்றும், பணம் இருப்பவர்கள் செய்யும் தவறுகளை உலகமே அறிந்தாலும், அதை எதிர்த்துக் கேட்பதற்கு யாரும் தயாராய் இருப்பதில்லை என்பது நிகழ்கால நிதர்சனம். #இரண்டு_ரூபாய் கு(டி)ளித்த குருதியினைக் கழுவிய ஒற்றைமழைத்துளி என் இதயத்தையும் நனைத்தது.
கசாப்புக்கடையில் வெட்டி எறியும் இறைச்சித் துண்டுகளை வெறித்து எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாயாக, பெண்ணின் உடலை வெறும் சதைப்பிண்டமாகப் பார்ப்பவர்களின் மலம் தின்னும் குணத்தை ஒருபுறம் காட்டினாலும், அதே உலகத்தில் பெண்மைக்கு காவலாகும் பெரியவர்களும் உண்டென்பதை #அந்த_இரவு_இன்னும்_விடியவில்லை, வலியோடு உதிக்கிறது.
காதலைத் தேடிச்செல்வதில் தவறில்லை. அந்தக் காதலுக்கு அவர் தகுதியானவராய் இருந்தால் மட்டுமே. காதல் உள்ளத்திலும் இருக்க வேண்டும். வெறும் உடலைச் சார்ந்தது மட்டுமல்ல.
" இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்.
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்று விடும் "
என்ற கவிப்பேரரசின் வரிகளை காதலிக்கும் முன் நினைவில் நிறுத்த வேண்டியது காதலுக்கு அவசியம்.
"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்."
இந்தக் குறளின் சாராம்சத்தைச் சுமந்து எதிரொலித்த #வாசல்படி , ஒவ்வொரு வீட்டிக்குள்ளும் செல்ல வேண்டியது அவசியம்.
தாய்மையின் பிரதான குணம் பிள்ளையின் பசியறிந்து உணவிடுவது. அதைச் செய்பவர் யாராய் இருந்தாலும் தாய்க்கு நிகராகவே தோன்றுவர். அப்படியொரு தோழியின் தாய்மையை " #சாப்டியா" கண்ணுக்கு முன் காட்டியது. எவ்வளவு பேர் வாழ்த்தினாலும், நாம் எதிர்பார்க்கும் வாழ்த்து கிடைக்காதவரை, அது வெறுமையாகவே இருக்கும் என்பதையும் கண்ணாடியாய் எதிரொலிக்கிறது.
" காதலைச் சுமந்துகொண்டுதான்
கண்ணுறங்குகின்றன...
கல்லறைகள் அனைத்தும்....
மன நிறைவுகளோடோ...
மறவா நினைவுகளோடோ...."
என்ற எனது கவிதையினை நினைவுபடுத்தியது உசுரு மற்றும் #பிரியதாசா கதைகள். காலங்கள் கடந்தாலும், பசுமரத்தாணியாய்ப் பதிந்த காதலின் சுவடுகள் இதயத்தில் என்றும் புதிய மலராய் மணம் வீசுமென்பதை ப்ரியமாய் எழுதியுள்ளார் கவிஞர் புதியவன். இதைப் படிக்கும்போது , அவரது கடந்த காலமோ என்று எண்ண வைப்பதில், கவிஞர் அன்பரசு புதியவன் ஆகிவிட்டார்.
நம் ஊர்களில் ஒரு சொலவடை உண்டு. "வயலை விற்று வரப்புக்கு வழக்கு நடத்தினனாம் " என்று. அதை உரக்கச் சொல்கிறது #ஒரு_ரோசாப்பூவின்_விலை_ரூபாய்_ஏழு_லட்சம்.
நடைபாதை முழுமதியின் அமாவாசை நாட்களைச் சொல்லி நம் மனதின் இருள் நீக்குகிறது #சாலையோர_நிலவு.
மகளென்னும் தேவதைகளின் வரவு ஒரு ஆணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமென்பதை #கோபத்தின்_எல்லை வரை சென்று உணர்த்துகிறார் #உயிரோடு_உயிராக...
இப்படியாக 12 கதைகளின் மூலமாக வாழ்வில் தான் கடந்தவற்றை கண்டவற்றை காட்சிப்படுத்தி உள்ளார் கவிஞர் புதியவன்.
நல்ல எழுத்தாளன் தான் அனுபவித்ததை, தன் சுற்றம் அனுபவித்ததை, தான் கண்டவற்றை, கேட்டவற்றை, தன்னுடைய படைப்பில் நிலைநிறுத்த வேண்டும். அதில் தன் கற்பனைத் திறனையும் ஏற்றினால், அது வாசிக்கும் வாசகனின் உள்ளத்தை நிச்சயமாகத் தொடும். கற்பனையை சேர்க்கும் போது, இயல்புத்தன்மை கெடாமல் படைப்பவரின் படைப்புகளை ருசிக்க இங்கே இன்னும் வாசகர்கள் ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதனை தன்னால் இயன்றவரை மிகச்சரியாகப் படைத்துள்ளார் கவிஞர் புதியவன். ஏம்மா இந்த தலைப்பே பல கதைகளை சொல்லும். பல உணர்வுகளை நமக்குள் கடத்தும். அந்த ஒற்றை வார்த்தைக்குள் செல்லம், சிணுங்கல், வலிகள்,ஏமாற்றம், நினைவுகள் என அத்தனையும் அடக்கம். இந்த ஒரு புத்தகத்திலும் அவை அத்தனையும் இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் வாசித்து உணரலாம்.
இதனைப் புத்தகமாக வெளியிட்ட #அறிவோம்_அறிவை குழுவிற்கும் ஆசிரியர் கவிஞர் புதியவனுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
இருவரும் இன்னும் பல புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்புக்கட்டளை இடுகிறேன்.அதை செய்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
நல்வாழ்த்துகளுடன்,
உங்கள்
கவிஞர் விஜயநேத்ரன்