மரங்களின் காதலன் விவேக்கிற்கு மனதால் ஒரு வாழ்த்து.
விழுமின்; எழுமின்; உழைமின்; அதை
விதைகளாய் விதைத்திட்ட விண்மீன்
கதைகளில் நல் கருத்து சொல்லி
காண்போர் வியக்கும் காவியத்தலைவன்
சிந்தனையில் சிகரம் தொட்ட
சின்னக்கலைவாணன்
மாற்றத்தை உருவாக்கிய
மக்களின்(ஜனங்களின்) கலைஞன் - அந்த
மனதினால் நீரென்றும் மாசற்ற இளைஞன்
கலாமின் இதயம் வென்ற புதுமை நாயகன்
அவர் காலடி தொடரும் பசுமை காவலன்
விடியலை பரப்பிடும் விவேகானந்தனின்
வெள்ளித்திரை வெளிச்சங்கள் சில...
விஜயநேத்ரனின் வரிகளில்....
பாலசந்தர் பாசறையில் பக்குவமாகி
மனதில் உறுதி வேண்டுமென
வெற்றித் திரையில் அறிமுகமானாய்...
புதிதாய் திரையில் தோன்றினாலும்,
புதுப்புது அர்த்தங்களாய்த் தோன்றினாய்!!
அந்த புத்தம் புது பயணத்தின் இதயவாசல்
எம்.ஜி.ஆர் நகரிலிருந்து தொடங்கியது...
வெற்றிமுகமாய் .....
"வாலி" விக்கியாய் மனதைக் குஷியாக்கி,
'தல'க்கும் "தளபதி"க்கும் தோள்கொடுத்து,
மின்னலே சொக்கலிங்கமாய் தனியாய் ஒளிர்ந்து
மெகா சீரியல் மாதவனாய் "தில்"லாக நின்று,
கருத்து கந்தசாமியாய் "யூத்" களை ஈர்த்து
"ரன்" மோகனாய் காண்போரை ரணகளம் செய்து
"சாமி " வெங்கியாய் தனி சரித்திரம் படைத்து
"பேரழகன்" குழந்தையாய் இதயங்களை வென்று
அருசுவை அம்பியென அதகளம் பல புரிந்து
அசால்ட் ஆறுமுகமாய் ஆந்திராவை அலரவைத்து,
ஏட்டு எரிமலையாய் சிங்கமென பொங்கியெழுந்து
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய் எமோசனில் சிறகடித்து ,
எங்கள் உள்ளம் கவர்ந்த அழகு சுந்தரமாய்
எல்லோர் மனதை(யும்) திருடி விட்டாய்....
வெகு ஜனங்களை சிரிக்க வைத்தாய்...
அவர் மனங்களை மகிழ வைத்தாய்....
மகா கலைஞனாய் உயர்ந்து நின்றாய்..
கலாமின் கனவிற்கு உருக் கொடுத்தாய்...
மண்ணில் மரங்களை நட்டு வைத்தாய்...
நல்ல மனிதனாய் சிறந்து நின்றாய்...
நீர் நட்ட மரங்களின் நிழல்களெல்லாம்
நின் புகழ்க்கதைப் பேசி வீசும் நிலத்திலிருக்கும்வரை.....
சின்னக் கலைவாணரே....
நீர் இறந்தாலும் என்றும் இருப்பீர்..
எங்கள் இதயங்களில்...
நீர் விதைத்த சிந்தனைகளாய்..
ஜனங்களின் கலைஞனாய்....
கண்ணீர் சிந்துபவர் எவராயினும்
மண்ணில் ஒரு மரக்கன்றை(யாவது)
நட்டு வளருங்கள்....
காற்றாய் வந்து கைகுலுக்குவார்...
காலமெல்லாம் உங்களோடு...
இந்த கலாமின் காதலன்...
மரமொன்றை நடுவோம்...
முடிந்தால்,
தினமொன்றாய் நடுவோம்...
இந்த மாமனிதனுக்காக....
மண்ணை விட்டு நீ சென்றாலும்,
நீ நட்டு வைத்த மரங்களின் சுவாசமாய்,
எங்கள் மனதோடு உறவாடுவாய்...
என்றும்..
கவிஞர் விஜயநேத்ரன்