வேள்விப் பூக்களில் இருந்து : பிறந்த வீட்டின் ஞாபகங்கள் - திருமணத்திற்கு முன் மணமகளின் மனவோட்டம்
கல்யாணப் பெண்ணின்
கடைசி நிமிடங்கள்..
பிறந்த வீட்டில்...
தகுதிக்கு வரன் தேடி
தன்கடமை நிறைவேற்ற
தயாராகிக் கொண்டிருந்தார்
தந்தை...
தங்க ஆபரணங்கள்
பண்ட பாத்திரங்கள்
பார்த்துப் பார்த்து வாங்கிய
பரவசத்தில் தாய்...
சுற்றத்தை அழைத்திட
சுழன்றான் சுறுசுறுப்பாய்
சக்கரம் கட்டிக் கொண்டு
சகோதரன் ..
மொத்த வீடும்
திளைத்திருக்க
ஒத்த உயிர் மட்டும்
தத்தளித்தது தனிமையில்...
நாளை திருமணம்
நடந்து பார்த்தாள்
இல்லை இல்லை...
அளந்து பார்த்தாள்...
அன்புடன் தான் வாழ்ந்த வீட்டை..
அவள் நட்டு வைத்த பூச்செடி..
அவளுடன் வளர்ந்த மாமரம்..
ஓங்கி வளர்ந்த தென்னை
ஓடி விளையாடிய திண்ணை..
நித்திரையில் சாய்ந்த ஊஞ்சல்
நிலாச் சோறுண்ட மாடி...
இத்தனையும் கண்முன்னே வந்தது..
பிள்ளையாய்ப் பிறந்து
முல்லையாய் மலர்ந்து
பெண்ணாய் வளர்ந்த
பழக்கப்பட்ட பிறந்தவீடு
புதிதாய்த் தெரிந்தது ..
பேதையவள் கண்களுக்கு...
அன்று மட்டும்...
தொட்டிலில் ஆடி
தத்தித் தவழ்ந்து
தாய் மடியில் தாங்கி
தந்தையின் தோள் சாய்ந்து
தமையன் விரல் பிடித்து
தங்கையுடன் சண்டையிட்டு
குழந்தை முதல் குமரி வரை
குதூகலித்த நாட்கள் எல்லாம்
இதயத்தின் நினைவுகளாய்
இருவிழியில் எட்டிப் பார்க்க,
மையிட்ட கண்களையும் தாண்டி
மயிலிறகாய்க் கன்னம் வருடியது..
கண்ணீர்த் துளிகள்...
தன் வீடாய் இருந்தது
தாய் வீடாய் மாறப் போகிறது
நாளை முதல்....
சின்ன சின்ன ஆசைகளுக்கு
செல்லமாய்ச் சண்டையிட்ட
தங்கை...
அனைத்தையும் செய்தாலும்
அன்புடன் சண்டையிடும்
அம்மா...
நெருக்கம் இல்லாவிட்டாலும்
உருக்கமாய் நினைக்கும்
அப்பா...
எல்லா நேரத்திலும்
தன் பக்கத்திலே இருக்கும்
தம்பி...
இத்தனை உறவுகளையும்
இங்கேயே விட்டு விட்டு- இனிய
இல்லத்தின் நினைவுகளை
இதயத்தில் சுமந்து கொண்டு
புகுந்த வீட்டிற்கு
புறப்படப் போவதை எண்ணி
பொங்கி எழுகிறது கண்ணீர்...
மாடி மீது நடந்தாள்..
படிகளில் அமர்ந்தாள்..
திண்ணையில் சாய்ந்தாள்..
ஊஞ்சலில் படுத்தாள்..
வீடு முழுவதும்
தேடித் தேடி அலைந்தாள்.
உள்ளுக்குள் தோன்றிய
உள்ளத்தின் உணர்வினை..
அணு அணுவாய்ப் பரிசித்தாள்..
அவள் ரசித்த நினைவுகளுடன்...
இடம் மாறி அமர்ந்தாலும்
இதயம் அமரவில்லை
அமைதியில்...
அரிதாரம் பூசி
அடையாளம் மாறி
தோழமை மறந்து
தொலைதூரம் போகிறாயென
உள்ளம் உரைத்ததும்
உணர்ந்தாள் அதன் வலியை...
அம்மாவை அழைத்தாள்...
அப்பாவை அழைத்தாள்...
உயிராய் எனை நினைக்கும்
உறவுகள் இங்கிருக்க
நினைவுகளைச் சுமந்து கொண்டு
நீண்ட தூரம் சென்றிடவே
நெஞ்சில் துணிவில்லை ..
இருக்கிறேன் இங்கேயே
திருமணம் எனக்கு வேண்டாம்
இருமனதாய் அவள் பேச
ஒருமனதாய்த் தேற்றியே...
ஆறுதல் தந்தனர்
அன்பான உறவுகள்....
மகளின் பிரிவிற்காக
உள்ளுக்குள் அழுதார் அப்பா...
உதட்டால் ஆறுதல் சொன்ன அம்மா...
பாசத்தோடு அணைத்த பாட்டி..
பார்வையில் தேற்றிய தாத்தா..
கண்ணீர் துடைத்த சகோதரன்
கலங்கி நின்றாள் தங்கை...
ஆனாலும்...
உள்ளத்தில் உண்டானது.
உவகையின் வெளிப்பாடு..
பிள்ளையாய் எண்ணியவள்
பெரியவளாய் மாறி நின்றதை
மனதில் எண்ணியதால்..
மனதால் எண்ணியதால்..
புதிய உறவொன்று
மலரப்போவதை எண்ணி..
கண்ணீரைத் துடைத்துவிட்டு
கட்டியணைத்து மகிழ்ந்தாள்..
அன்னையவள் பெற்ற மகளை..
அந்த நினைவுகளையெல்லாம்
அள்ளி அள்ளிச் சேர்த்தாள்..
இதய அறைகளுக்குள்..
நாளை முதல்
ஞாபகங்களாய்ச் சுமந்திட..
மணமகளாய் நின்ற மகள்..
வளமான மண்ணில்
வளர்ந்த இளங்கன்றை
வேரோடு பிடுங்கி
வேறிடத்தில் நட்டு வைத்து
இருக்குமிடம் பெயர்த்து
இருப்பிடத்திற்கு ஏற்றவாறு
பாலையோ சோலையோ
கரிசலோ காய்ந்த பூமியோ
துளிர்க்கச் சொல்வதே
திருமண பந்தமோ...
வாழ்ந்த சொர்க்கத்தை விட்டு
வலிகளைச் சுமந்து கொண்டே
புகுந்த வீட்டை நோக்கி
புறப்பட்டுச் செல்கிறார்கள்
புதுப் பெண்கள் அனைவருமே...
இணைவது இருமணம்
இழப்பதோ பல மனம்
இதுதான் திருமணம்....
வாழ்த்திடுவோம் பெண்ணினையே ...
வணங்கிடுவோம் பெண்மையையே...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்