சமூகநீதியைப் போதித்த சாதனையாளர் : தந்தை பெரியார்
திராவிட இயக்கத்தின் முன்னோடி - கருத்தில்
சமரசம் செய்திடாத கண்ணாடி - யாவரும்
சரிசமம் என்றுரைத்த வெண்தாடி - அற்ப
சாதியை எறியச் சொன்ன உயிர்நாடி
பிறந்தவுடன் குழந்தைதான் அனைவரும் -உயிர்
பிரிந்தவுடன் பிணம்தான் முடிவினில் - இதனால்
ஒவ்வொரு மனிதனும் சமமென்றுரைத்து - அதில்
உயர்வும் தாழ்வும் குறையென்றுரைத்து
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென்று - கையில்
பிரம்பெடுத்து முழங்கிய சிந்தனைவாதி
பிறப்பால் மறுத்த உரிமைக்கெல்லாம் - தன்
கருத்தால் உயிர்தந்த பெரும் காரியவாதி
ஆணும் பெண்ணும் ஜீவனில் ஒன்றதனால்
அவரவர் விருப்பே வாழ்வில் முதலென்றுரைத்து
இணையர் என்றே மணம் முடித்து - அவர்
இணையே வாழ்வில் என்றுரவர்க்குரைத்து
அடுப்பங்கரைக்குள் முடங்கிய பெண்ணையெல்லாம்
அடுத்த நிலைக்கு அழைத்து வந்த சமத்துவவாதி
அவர் எண்ணங்களுக்கு ஏணியிட்டு மேலேற்றி
அழகு வண்ணங்கள் கொடுத்த பொதுநலவாதி
மனிதனைப் பிரிக்கும் மதத்தை இகழ்ந்துரைத்தாய்
மனிதத்தைக் குலைக்கும் சாதியை இழிந்துரைத்தாய்
ஆணுக்கும் பெண்ணுக்கும் தினம் எடுத்துரைத்தாய்
அதுவே வாழ்க்கையென வாழ்ந்து முடித்தாய்...
பகுத்தறிவும் சுயமரியாதையும் இருகண்ணென்றாய் - அதைப்
படித்திடப் பற்பல நூலைப் படியென்றாய்...
பள்ளிக்கல்வியே உயிர் மூச்சென்றாய் - அந்தப்
படிப்பே சமத்துவ உயர்வென்றாய்...
சுயநல வாழ்க்கை கேடென்றாய் - தான்மட்டும்
சுகமாய் வாழ்வது கொடிதென்றாய்..
பொதுநலன் நினைப்பது நலமென்றாய் - அதை
பொறுப்பாய்ச் சுமப்பதே வாழ்வென்றாய்...
புத்தகத்தில் அச்சடித்துப் புகழுரைத்தாலும்
புகழுடையோர்ப் புதிதெனச் செவியுரைத்தாலும்
புரட்சியென நானே முழங்கியிருந்தாலும் - உன்
புத்திக்கும் அறிவுக்கும் பொருந்தாத எதையும்
பகுத்தறிவு என்றெங்கும் பரப்பி விடாதே
பகட்டாக நீ அதனை நம்பி விடாதே - என்று
நீர் சொன்ன இவ்வார்த்தை கல்வெட்டாகும்
நீங்காது நினைக்கின்ற பொன்மொழியாகும்...
உன் கருத்தை மொழிகின்ற பல்லாயிரம் பேருண்டு
உன் சித்தாந்தம் சுமக்கின்ற சில ஆயிரமுண்டு
உன்னைப் போல் புரிதலுள்ள மனிதரென்று
உன்னைத் தவிர ஒருவருமே பிறக்கவில்லையே...
நீர் கற்பித்த பாடத்தை மறந்துவிட்டு
கையினிலே புகைப்படத்தை சுமந்திங்கு
கரன்ஸிக்கு கையேந்தும் கூட்டத்திற்குள்,
காணாமல் போகிறார்கள் கடைமட்டத்தில்...
கருத்தியலாய் உன்வாழ்வை வாழ்பவர்கள்...
நீர்
எதையெதிர்த்து முழங்கினீரோ,
எதைவெறுத்து கலங்கினீரோ,
அதுவே உருமாறி நிற்கிறது...
உள்ளுக்குள் இருக்கும் புல்லுருவிகளால்...
கருத்தியலை வி(ற்று)ட்டுவிட்டு,
கருஞ்சட்டையை வெறுஞ்சட்டையாய்,
மாட்டிக்கொண்டு சுற்றிவருகிறார்கள்..
உன் பெயரைச் சொல்லிக்கொண்டு...
ஊரை ஏமாற்றும் சில வேடதாரிகள்...
இன்று மட்டும் நீர் இருந்திருந்தால்,
மேடையேறி முழங்கவேண்டி இருக்கும்..
கரைபடிந்த அந்தக் கருஞ்சட்டைக்கெதிராகவும்....
ஆனால்,
ஒன்று மட்டும் உண்மை...
நீர் கற்றுத்தந்த சமூகநீதியை,
நெஞ்சில் சுமந்திருக்கும் ஒருவன்,
நிலத்திலிருக்கும் வரை,
நின் கருத்தியல் உயிர்த்துக்கொண்டே இருக்கும்...
எத்தனை தடைகள் எதிர் வந்தாலும்..
புதிய தளிராய்....