சென்னை : இது வெறும் ஊர் மட்டுமல்ல....
வடகோடி வங்கத்தில்
கூவம் கடல்சேரும்...
வரலாற்றில் மெரினாவாய்
தெற்கில் புகழ் கூறும்...
அடையாறின் தெற்கதனில்
எலியட்(பெசன்ட்) எழிலாகும்..
அவ்வாற்றின் வடக்கினில்
சாந்தோம் நடைபோடும்...
மயிலாப்பூர் கபாலீசர்
மங்கலம் அருளிடலாம்..
மவுண்ட்ரோடு தர்காவில்
மனதால் தொழுதிடலாம்..
சாந்தோம் ஆலயத்தில்
சங்கடங்கள் தீர்த்திடலாம்..
திருவல்லிக்கேணியதில்
திருப்பங்கள் தந்திடலாம்....
அழகான தமிழ்கூட
அரிதாரம் பூசிநிற்கும்..
அது சென்னைத் தமிழாக
புதுவேடம் பூண்டிருக்கும்...
பெரம்பூர் கொளத்தூரில்
பெரும் ஆலை தொழில் சிறக்கும்..
இராயபுரம் துறைமுகத்தில்
மீனவரின் கொடி பறக்கும்..
திநகர் வணிகத்தில்
தீயாய் அனல் பறக்கும்...
தினமது கூட்டத்திலே
திகட்டாது அது ஜொலிக்கும்...
சோழிங்க நல்லூரில்
தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும்..
சோர்வின்றி இரவு பகல்
சுயமாக விழித்திருக்கும்...
சிக்ஸரும் பவுண்ட்ரியுமாய்
சேப்பாக்கம் ஆர்ப்பரிக்கும்..
சென்னை சிங்கமென
தன்பெயரை அது பொறிக்கும்...
தெற்கில் பயணம் செல்ல
எழும்பூர் ரயில் இருக்கும்...
வடக்கில் பயணம் செல்ல
சென்ட்ரல் வழி திறக்கும்...
கோயம்பேடு வந்தால்
கோலாகலமது பிறக்கும்...
குறைவில்லா பேருந்தில்
குதூகலத்தில் அது கிடக்கும்...
கிண்டியில் கல்வியகம்
மானாய்த் துள்ளியெழும்..
வண்டலூரில் வன உயிர்கள்
வகைவகையாய்ப் பள்ளி கொள்ளும்..
தெருவெங்கும் பலமொழிகள்
திருவிழா அரங்கேற்றும்...
திரையரங்கும் படப்பிடிப்பும்
தினந்தோறும் பறைசாற்றும்...
முகவரிகள் தொலைந்தாலும்
புதுவழியில் பிழைக்க வைக்கும்..
அடையாளம் இழந்தாலும்,
அதன் வழியில் உயிர்க்க வைக்கும்...
புதியவரும் பழையவரும்
புகழ்தேடி வருபவரும்,
காதலில் கரம்பிடித்து,
கரைதாண்டி வென்றவரும்...
வேலை வெட்டி தேடியதை,
வீராப்பில் வந்தவரும்,
காலமதை வெல்வதற்கு,
காலடி வைக்குமிடம்...
வந்தாரை வாழவைக்கும்
வாழ்வெல்லாம் பேசவைக்கும்..
சிங்காரச் சென்னையினு
சீர்தூக்கும் ஊரிதுடா....
வங்கக்கரை மீதமர்ந்து
வாழ்வளிக்கும் ஊரிதுடா...
தூங்கா விழிகளோடு
துயர் துடைக்கும் ஊரிதுடா...
ஊராடா இதுவென
ஊரெல்லாம் தூற்றினாலும்,
பேரெடுத்து வாழ்வதற்கும் - பல
பேரிங்கு வாழ்வதற்கும்,
உயிரளித்து நிற்கின்ற
உன்னத ஊரிதுவே....
சென்னை...
இது வெறும் ஊர் மட்டுமல்ல...
பல உணர்வுகளின் சங்கமம்...