சிம்மக்குரலோனின் கர்ஜனைகள் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
வானம் பொழிகிறது பூமிவிளைகிறதென
வரி தரமறுத்தக் கட்டபொம்மனை
வெள்ளித்திரையில் நமக்கு ஊட்டியவன்.
வாழ்வையே தானமிட்டு வள்ளலெனப் பெயரெடுத்து
வாரிக் கொடுத்த கர்ணனையும் - திரையில்
வாழ்ந்து நின்ற சாட்சியிவன்.
சொந்தப் பணத்தில் சுதேசிக் கப்பல்விட்டு,
சிறையில் செக்கிழுத்த செம்மலையும் - நம்
விழியின் பார்வையில் காட்டியவன்.
சுந்தரத் தமிழில் சொர்க்கம் படைத்த
சுப்ரமணிய பாரதியவனையும்,
அட்சர சுத்தமாய் அழகாய்த் தந்தவன்.
நலந்தானா வாசித்து நாதஸ்வரமதில்,
சிக்கல் சண்முகமாய் நம் இதயத்தில் நின்றவன்,
சீர்மிகு பெரிய தேவனாய்
தலைமுறையை வழிநடத்திய தேவர்மகன்,
நெற்றிக்கண் திறப்பினும் குற்றமென திருவிளையாடல் புரிந்தவன் ,
நெறியால் உயர்ந்து விஸ்வாமித்ரனாய் ராஜரிஷி ஆனவன்.
வீரவல்லனாய்க் கவிபாடி சரஸ்வதி சபதம் இட்டவன்
வீரவாகுவாய்ப் போர்புரிந்து கந்தன் கருணை பெற்றவன்.
நாடகக் கலைவளர்த்த ராஜபார்ட் ரங்கதுரையாய்,
நவரசம் பொழிந்து நம்மனதில் நுழைந்தவன்,
நம்மில் ஒருவனாய் மலைச்சாமியாய் முதல் மரியாதைக்கு உரியவன்.
உடன்பிறந்த தங்கைக்கு பாசமலர் ஆனவன்,
உள்ளம் வென்ற காதலிக்கு அம்பிகாவதியானவன்,
மார்தட்டி வசனம் பேசி தாய்நாட்டின் அடிமை விலங்குடைத்த அருமை மனோகரன்.
ஒன்பது வேடத்தில் உன்னதம் புரிந்த நவராத்திரி நாயகன்,
ஒப்பற்ற தமிழுக்கு உழைத்த நாயன்மாரின் திருவருட்செல்வன்.
உலகைக் கட்டியாண்ட முத்தமிழ் அரசனவன் ராஜராஜசோழன்,
உயர்பதவிக்கு சௌத்ரியாய் தங்கப்பதக்கம் வென்ற மரியாதைக் காவலன்.
நம் பார்வைக்கு விருந்தளித்து திரையுலகை ஆள்பவன்
பராசக்தி அருள் பெற்ற நடிப்புலக நாயகன்.
இவனை மிஞ்சிடும் நடிகனுமில்லை
இவன் போலொருவன் இனி பிறப்பதுமில்லை..
✍️ கவிஞர் விஜயநேத்ரன்