இரவில் நிறமாறும் இ(தி)ருட்டுக் குப்பைகள்
அலங்கரித்த அடுக்குமாடிகள்,
அணிவகுக்கும் உணவகங்கள்,
இடையிடையே மெத்தை வீடுகள்,
எங்கோ ஓரிரு குடிசைகளென
நாகரீகத்தை சூடிநின்றது
நகரென்ற பெயரோடு...
கதிரவன் கண்ணுறங்க,
காரிருள் விழித்தெழுந்து,
கைப்பற்றிய நகரதனை,
மீட்டெடுக்கும் முயற்சியில்,
மின்விளக்குகள் களமிறங்க,
விடுதலை முழக்கமிட்டன..
வீதிவாழ் நாயினங்கள்...
இருளும் ஒளியும் இணக்கமாய்,
இரண்டறக் கலந்தொன்றாய்,
சங்கமித்தத் தெருவொன்றில்,
நிழலுருவமாய் நின்றதொன்று..
அழுக்கடைந்த உடையோடு,
அரைபாதி உயிரோடு...
அவளும் பெண்ணென்று..
பகலெல்லாம் அலைந்து,
கடும் பசியோடு திரிந்து,
கேட்டுப் பார்த்தாலும்,
ஏதும் கிடைக்கவில்லை,
தட்டிப் பார்த்தாலும்,
ஒன்றும் திறக்கவில்லை..
பத்தும் பறந்தாலும்,
பசி மட்டும் தீரவில்லை...
அச்சம் மடம் நாணமெல்லாம்
அங்கங்கே தேடுவோர்க்கு,
கடுகளவும் இருக்கவில்லை,
கருணையது மனதினிலே...
உணவென்று கேட்டவளை
உதைத்து தள்ளினார்கள்...
பசியென்று நின்றவளை
பரிகாசம் செய்தார்கள்..
காலில் விழுந்தாலும்,
காரி உமிழ்ந்தார்கள்..
அருகில் போனாலே,
அருவருப்பாய்ப் பார்த்தவளை,
அடச்சீ போயொன்று,
அடித்து விரட்டினார்கள்..
கண்ணிரண்டும் மங்கலாக,
காலிரண்டும் தடுமாற,
அடிவயிற்று அமிலங்கள்,
எரிமலையாய்ப் பொங்கியெழ,
எப்படியோ ஒருவழியாய்,
எங்கேயோ சென்றவளை,
வரவேற்று அழைத்தது,
வாசனையால் குப்பைத்தொட்டி...
காலிரண்டும் மறுத்தாலும்,
காய்ந்த அவள் வயிறதை,
காது கொடுத்துக் கேட்காமல்,
அதுதானாய் நடந்தது..
அழைத்த திசைவோக்கி..
காகிதங்கள் வைத்த புள்ளியில்,
கண்ணாடித் துகள்களோடு - அழுகிய
காய்கறித் துண்டுகள் கோடிட,
உடைந்து நொறுங்கி உருக்குலைந்து
வேண்டாமென்று தூக்கியெறிந்த,
வீட்டுப் பொருட்கள் வண்ணமிட,
நெகிழிப்பைகளின் அலங்கரிப்பில்,
சிந்தி சிதறிக் சிதைந்து கிடந்த,
தெருவோரத் தொட்டிக்குள்,
தேடலைத் தொடங்கினாள்...
வயிற்றுப் பசி தீர்க்கும்,
வரமொன்றை மனதில் வேண்டி...
கண்ணில் பட்டதெல்லாம்
கரத்தினில் கடைந்தெடுத்தாள்
கைகள் தொட்டதெல்லாம்
கால்நொடியில் பிரித்தெடுத்தாள்..
முழுதையும் தேடிவிட்டாள்.,
ஒற்றை நிமிடத்திற்குள்..
ஒன்றும் கிடைக்கவில்லை
ஒருவேளைப் பசியாற...
கலங்கி எழுந்தவளின்
கண்ணில் பட்டதொன்று..
நெருங்கி தொட்டவளின்
நெஞ்சிற்குள் சந்தோஷம்...
அரைகுறை வெளிச்சத்தில்,
அவசரமாய்ப் பிரித்து,
அதிலிருந்த சோறதனை,
வயிற்றுக்கு அனுப்பினாள்...
நாற்றத்தின் வாசனை,
நாவதற்குத் தெரியாமல்...
களைப்பில் உண்டவள்,
கால்வயிறு நிரம்பியதும்,
நிமிர்ந்து எதிர் பார்த்தாள்..
நிழலாய்த் தெரிந்திடவே..
பார்வைக்குத் தெரிந்தது,
பசியோடு இரு உருவம்,
இவளைப் போலவே,
அடித்து துரத்தப்பட்ட
விரட்டி எறியப்பட்ட
வீதி நாய்கள் ரெண்டு...
பசியின் வலியறிந்தவள்,
பாதியைப் பகிர்ந்தளிக்க,
மூவரும் வயிற்றை நிரப்பினர்
சமத்துவப் பந்தியில்,
எவரோ எறிந்த மிச்சங்களால்..
வயிற்றுப் பசி தீர்ந்ததும்,
வாலால் நன்றி சொல்லி,
விருந்தினராய் வந்தவர்கள்,
விடைபெற்றுச் சென்றிட,
தொடர்ந்தாள் பயணத்தை..
களைப்பில் இளைப்பாற..
கண்களால் இடம்தேடி...
குப்பைகள் தாண்டியொரு
குவிந்த மேடொன்று,
வரவேற்று இடமளிக்க,
விழிமூடி ஓய்வெடுத்தாள்...
இருண்ட தெருவோரம்...
அயர்ந்து களைப்பினில்,
அசைவற்று கிடந்தவளின்,
அழுக்குயுடை கலைந்து,
அவசரமாய்க் கிழித்தெறிந்து,
அந்தரங்கம் தேடியது...
வேட்டை விலங்கிரண்டு..
இறந்த உடலுண்ணும்
நெழிந்த புழுப்போல...
அந்த அழுக்குக் குப்பைக்குள்,
அசைவற்றுத்தான் கிடந்தாள்,
எதிர்க்கும் ஆற்றலின்றி..
இவளின் பலவீனத்தாலும்,
அவர்களின் பலத்தாலும்..
மிரண்ட விழிகளுக்கு,
மிருகங்கள் தெரிந்தது..
கடந்து சென்ற வெளிச்சத்தில்,
காலையில் அருவருப்பாய்,
வெள்ளையுடையில் விரட்டியவனும்..... வெறுப்புடன் துரத்தியவனும்...
✍️ கவிஞர் விஜயநேத்ரன்