யார் கடவுள் : கடவுளைக் கண்டா வரச் சொல்லுங்க
கடவுளைக்
கண்டால் வர சொல்லுங்கள்...
நாங்கள்,
காண வேண்டுமென்று
வரச் சொல்லுங்கள்...
கடவுள்...
இருக்கிறாரா உலகத்தில்..
இருந்தால்,
அழைத்து வாருங்கள்....
கடவுள்..
எப்படி இருப்பார் தோற்றத்தில்???
பார்த்தால்,
பதில் சொல்லுங்கள்...
முறுக்கு மீசை திருகியிருப்பாரா??
முரட்டுத் தாடிக்குள் முகம் புதைப்பாரா??
ஆளுயர அருவாள் வைத்திருப்பாரா??
வானளவில் வளர்ந்து நிற்பாரா??
கோபத்தில் கண் சிவந்திருப்பாரா??
புன்னகையில் மகிழ்ந்திருப்பாரா??
குழலெடுத்து இசைத்திடுவாரா??
குளக்கரையில் ஓய்வெடுப்பாரா??
குன்றின் மேல் அமர்ந்திருப்பாரா??
பாம்பின் மேல் படுத்திருப்பாரா??
சாம்பலைப் பூசியிருப்பாரா??
சடைமுடித் தரித்திருப்பாரா??.
சிலுவைகள் சுமந்திருப்பாரா??
சிறகுகள் முளைத்திருப்பாரா??
பார்வைக்குத் தெரிந்திருப்பாரா??
பாடங்கள் படித்திருப்பாரா??
கடவுள்..
எப்படி இருப்பார் தோற்றத்தில்???
பார்த்தால்,
பதில் சொல்லுங்கள்...
பலருக்கும் உதிக்கலாம்...
பல்லாயிரம் கேள்விகள்...
இதைப்போல இதயத்தில்...
கடவுள் இருக்கிறாரா? இல்லையா??
கேள்வியைக் கடந்து செல்வோம்...
கடவுளைப் பார்க்க முடியுமா??
ஏன் முடியாது...
பார்ப்பது மட்டுமில்லை..
கடவுளாய் ஆகலாம் நீங்களும்....
எப்படி???
தொடர்ந்து வாருங்கள்..
கடவுளைக் காண்போம்...
கடவுளாய்த் தெரிவோம்...
நண்பகல் வேளை..
நீண்டதொரு சாலை...
சுட்டெரிக்கும் சூரியன்...
சுமையாய் பையில் கொஞ்சம்..
நடந்தே செல்லும் நபருக்கு,
கடந்து செல்லும் மனிதனொருவன்
கடவுளாய்த்தான் தெரிவார்...
"எங்கே போக வேண்டும்?? வாருங்கள்,
அங்கே, நான் கூட்டிச் செல்கிறேன் "
என்று சொல்லும் வார்த்தையில்...
கடவுளாய்த்தான் தெரிவார் கண்களுக்கு...
அங்கே,
கூட்டிச் சென்றவர் கடவுளாய்த் தெரிவார்...
கூடச் சென்றவர் கடவுளைக் காண்பார்...
நீங்கள்,
கடவுள் ஆக வேண்டுமா??
கடவுளைக் காண வேண்டுமா??
பதில் உங்களிடமே...
அன்றாட தடத்தில்,
ஏதோவோர் இடத்தில்,
அவசரமாய் இயங்கும்
அந்தவொரு கூட்டத்தில்,
விழிகளின் மறைவில்
வயிறொன்று இருக்கும்...
பசியென்ற நோய்தாக்கி,
பரிதவித்துத் தவிக்கும்..
ஓய்ந்து ஒதுங்கியங்கு,
கடும்பசியில் காத்திருப்பவனுக்கு,
கடவுளாய்த்தான் தெரிவார்..
" சங்கடமாய் எண்ணாமல்,
சாப்பிடுங்கள் இதனை நீங்கள்"
என்றன்பாய் அருகில் வந்து,
அன்றொரு வேளை பசிதீர்த்தவர்.
கடவுளாய்த்தான் தெரிவார் கண்களுக்கு...
அங்கு,
உணவைக் கொடுத்தவர் கடவுளாய்த் தெரிவார்...
உணவைப் பெற்றவர் கடவுளைக் காண்பார்.
நீங்கள்,
கடவுள் ஆக வேண்டுமா??
கடவுளைக் காண வேண்டுமா??
பதில் உங்களிடமே...
உள்ளத்தில் பெருங்கனவு....
உயரத்தில் அதன் முடிவு...
வறுமையே ஒரு தடைக்கல்...
தொடர்ந்திட இல்லை படிக்கல்..
தன் கனவான இலட்சியத்தில்
கால்பதிக்க நினைப்பவனுக்கு,
கடவுளாகத்தான் காட்சியளிப்பார்...
" நான் பார்த்துக் கொள்கிறேன்.,
உனக்காகும் செலவினை" என்று
வறுமையில் பிறந்தவன் கனவினைத்தொட,
வாழ்க்கையில் ஏணியாய் உதவியவர்.,
கடவுளாய்த்தான் தெரிவார் கண்களுக்கு..
அங்கு,
கனவிற்கு உதவிபெற்றவர் கடவுளைக் காண்பார்...
கருணையோடு உதவியவர் கடவுளாய்த் தெரிவார்...
நீங்கள்,
கடவுள் ஆக வேண்டுமா??
கடவுளைக் காண வேண்டுமா??
பதில் உங்களிடமே...
நடந்ததோர் விபத்து...
உயிருக்கு ஆபத்து...
அதைக் கடப்போர் ஏராளம்...
கண்டு நிற்போர் தாராளம்...
நேரம் கடந்துவிடும்..
உயிர்ப்பேரம் நடந்துவிடும்..
அந்தவொரு நொடியினில்,
அங்கொருவன் வந்திடுவான்...
கூட்டத்தில் உள்நுழைந்தவரை,
கூட்டிச் செல்வான் உயிர்காக்க...
செத்து உயிர் பிழைத்தங்கு
மறுபிறவி எடுத்த அந்த மனிதனுக்கு,
மனதிற்குள் கடவுளாய்த்தான் தோன்றிடுவார்....
" பயங்கொள்ள வேண்டாம்,
பிழைத்திடுவீர் நீங்களென்று"
சரியான நேரத்தில் அழைத்து வந்தவரும்,
சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவரும்,
இரத்தம் கொடையளித்து சொந்தம் ஆனவரும்...
கடவுளாய்த்தான் தெரிவார் கண்களுக்கு...
அங்கு,
உயிர் பிழைத்தவர் கடவுளைக் காண்பார்..
உயிர் அளித்தவர்கள் கடவுளாய்த் தெரிவார்கள்..
நீங்கள்,
கடவுள் ஆக வேண்டுமா??
கடவுளைக் காண வேண்டுமா??
பதில் உங்களிடமே...
பரபரப்பான உலகம்...
பறந்திடும் ஒரு பயணம்...
மனதிற்குள் பல நினைவோடு,
மறந்திடும் கவனக்குறைவோடு,
சாலையில் பயணத்தைத் தொடங்கிடும்
சாரதியவருக்கு கடவுளாய்க் காட்சியளிப்பார்..
மகிழுந்துப் பயணத்தில் மறந்து செல்பவரிடம்,
"உங்க கதவு சரியாய் மூடவில்லை" என்று
விரைந்து வந்து சொல்பவரும்,
இருசக்கர வாகனத்தில் செல்பவரிடம்,
" சைடு ஸ்டேண்ட் எடுக்கவில்லை " என்று
சமயத்தில் வந்து சொல்பவரும்...
மகிழுந்துக் கதவை மூடவில்லை என்றவரும்,
பக்கவாட்டு நிறுத்தக் கம்பி எடுக்கவில்லை என்றவரும்
கடவுளாய்த்தான் தெரிவார் கண்களுக்கு...
அங்கு,
வாகனச்சாரதி வரமளித்தக் கடவுளைக் காண்பார்..
வந்துசெய்தி சொன்னவர்கள் கடவுளாய்த் தெரிவார்கள்...
நீங்கள்,
கடவுள் ஆக வேண்டுமா??
கடவுளைக் காண வேண்டுமா??
பதில் உங்களிடமே...
மானிடர் பிறப்பரிது..
மகளிரோ அதிலரிது..
மகளாய்ப் பிறந்தவளை
மணமகளாய்ப் பார்ப்பதற்கு,
வரமாய்க் கிடைத்தவளின்
வரனுக்கு கொடுப்பதற்கு,
தடுமாறும் தந்தையவருக்கு,
கடவுளாய்த்தான் தெரிவார்...
" இதை வைத்துத் திருமணத்தை நடந்துங்கள்"
என்று பொன்னும் பொருளும் கொடுத்துதவுபவர்,
கடவுளாய்த்தான் தெரிவார் கண்களுக்கு...
அங்கு,
மக்களைப் பெற்றவர் கடவுளைக் காண்பார்...
மனமாறக் கொடுத்தவர் கடவுளாய்த் தெரிவார்...
நீங்கள்,
கடவுள் ஆக வேண்டுமா??
கடவுளைக் காண வேண்டுமா??
பதில் உங்களிடமே...
தெரியாத ஊரில் தானாக உதவுபவர்,
முடியாத நிலையில் துணையாக நிற்பவர்,
யாருமில்லா குழந்தைக்கு யாதுமாகி வாழ்பவர்,
என்பதில் தொடங்கியிந்த வாழ்க்கையில்,
அன்றாடப் பயணத்தில் அறியாமலும்
திண்டாடும் நிலையில் தெரியாமலும்
உதவிடும் ஒவ்வொருவரும் கடவுளே இங்கு....
இதைப் போல நீளும்...
வாமனனாய், வானரனாய்,
விசாலமான விஸ்வரூபமாய்,
நம்மோடு வாழும் கடவுளின் பட்டியல்...
ஆண்டவன் யாரென்று சொன்னதும்
அடுத்தொருவன் கேட்டான்..
காசில்லாப் பக்தனுக்குத் தொலைவிலும்
காசு கொடுத்தவனுக்கு அருகிலும்,
கடவுளின் தரிசனம் ஏனோ என்று..
அன்னையும் பிதாவும் தெய்வமென்ற
ஔவை சொல்லதைக் கேட்கவில்லை...
தாயை வணங்கென்றால் காதிலும் வாங்கவில்லை
தந்தை சொல் கேளென்றால் மந்தியாய் கேட்கவில்லை
ஏழைக்கு உதவுயென்றால் ஏளனமாய்ப் பார்த்துவிட்டு
இயற்கையே இறை என்றால் இதயமின்றி விற்றுவிட்டு,
கடவுளைத் தேடிச் சென்றால் காட்சிக்குத் தெரிவாரோ???
கல்லைக் கடவுளாக்கிக் கருவறைக்குள் தாழிட்டு,
காண்பதற்கு நேரமதைக் கணக்கீடு செய்து விட்டு,
வணங்கிடும் முறையென்று வகைவகையாய் வகுப்பெடுத்து,
உலாவரக் கூட உகந்த நேரமதைக் குறித்தெடுத்து,
உருவமதைத் தரிசிக்க கட்டணங்கள் விதித்து விட்டு,
கடவுளே காட்சி கொடுயென்று கேட்டால்
காண முடியுமோ கடவுளவரை...
விடைகளையெல்லாம் நம்மிடமே வைத்துக்கொண்டு,
வினாவதனைத் தொடுத்தால் மட்டும் விடை வருமோ??
அவரவர் பார்வையில்
ஆயிரம் கடவுள்...
நம்பிக்கையே கடவுளாய்
சிலருக்கு...
கடவுளே நம்பிக்கையாய்
சிலருக்கு...
அவரவர் நம்பிக்கையை
அவரவர் வைத்துக் கொள்ளுங்கள்..
அடுத்தவர் நம்பிக்கையை
அவநம்பிக்கையால் சிதைக்காமல்...
உலகில் இருக்கும் ஒவ்வொருவன்
உள்ளதிலுமிருக்கிறான் கடவுளவன்..
அதை உணர்ந்த பின்னே தேடிப்பார்...
உனக்கும் காட்சியளிப்பான் ...
உருவமாய்க் கடவுள்....
உங்கள்
✍️ கவிஞர் விஜயநேத்ரன்