Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

பீனிக்ஸ் பறவைகள் : நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகள்

Copied!
Kavignar Vijayanethran

பீனிக்ஸ் பறவைகள் : நடுத்தரக் குடும்பத்து பிள்ளைகள்

     வாழ்வென்னும் பயணத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், பொருளாதாரத்தைப் பொறுத்தே மக்களின் வாழ்க்கைத்தரம் அமைந்துள்ளது. வசதியானவர்களுக்குத் தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் வேளையில், ஏழைகளின் வாழ்வில் அத்தியாவசியமானப் பொருட்கள் கூட எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.  அளவுக்கதிகமாக எல்லாம் கிடைக்கும் மேல்தட்டு வர்க்கத்திற்கும், எதுவுமே முழுமையாய்க் கிடைக்காத அடித்தட்டு வர்க்கத்திற்க்கும் இடைப்பட்ட மக்களின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. 

    நடுத்தர வர்க்கம் (Middle Class People) என்றழைக்கப்படும் இந்தப் பிரிவினர்  தங்களுக்குக் கிடைத்ததைக் கொண்டு சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களின் மொத்த வாழ்க்கையும் திட்டமிடல் என்னும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடுகிறது. அன்றாடச் செலவுகள் முதல் குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகள் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் என எல்லாவற்றிற்கும் பல மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டால் மட்டுமே அதைச் சரியாகக் கையால இயலும். 

 இவர்களின் வாழ்வானது பிரச்சனைகளால் பிணைக்கப்பட்ட சிலந்தி வலை போன்றது. உளியின் தாக்குதலைத் தாங்கும் கல்லானது சிலையாக மாறுவதைப் போல, ஒவ்வொரு நாளும் பிரச்சனைகளைச் சந்தித்து அதிலிருந்து மீண்டெழுந்து வருவதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலை இயல்பாகவே பெற்றுவிடுகின்றனர் நடுத்தர வர்க்கத்து குழந்தைகள். 

       இந்தியாவில் வாழும் சரிபாதி மக்கள் இந்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே. இந்தக் குடும்பங்களை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தனித்தனியாக இருப்பது போல் தோன்றும்.  ஆனால் கண் பார்வைக்குத் தெரியாத உணர்வுகளால் அவர்கள் ஒருவரோடு ஒருவர்    பிணைக்கப்பட்டிருப்பர். அவர்களுக்கு  உள்ளத்திலிருக்கும் அன்பினை அவ்வளவு எளிதில் வெளிக்காட்ட தெரியாது.

  திருமணநாள், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் வாழ்த்துக்களை  வார்த்தைகளால் வெளிப்படுத்தும் மேல்மட்ட மக்களைப் போல கட்டியணைத்து, முத்தமிட்டு அன்பை வெளிப்படையாகக் காட்டி  கொண்டாடத் தெரியாது. எதிர்காலத்தை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கையில் கொண்டாட்டங்களை பற்றிய எண்ணங்களுக்கு இடம் இருப்பதில்லை. திருமண நாட்களும், பிறந்த நாட்களும் கோவில்களின் அர்ச்சனையோடு நின்று விடும். சற்றே முடிந்தால் புத்தாடை கிடைக்கும்.    

      ஆனால் அவர்களின் உள்ளங்களில் அந்த ஏக்கங்களின் குரல் கேட்டுக் கொண்டேதானிருக்கும். அதனையும் தாண்டி நாளைய செலவுகள் கண்முன்னே வந்து போகும்.ஆனால் கஷ்டங்கள் என்று வரும்போது ஒருவருக்கொருவர் உறுதுணையாக நின்று தோள் கொடுப்பதில் இவர்களுக்கு இணையாக யாரும் இருக்க முடியாது‌.

     ஒரு நடுத்தர வர்க்கத்தில் பிள்ளைகளின் சிறு சிறு சந்தோசங்களை நிறைவேற்ற, அவர்களின் பெற்றோர்கள் பல தியாகங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. மேல்மட்ட பிள்ளைகளுக்கு எளிதாய் கிடைக்கும் சின்னஞ்சிறு விஷயங்கள்/பொருட்கள் கூட நடுத்தர வீட்டுப் பிள்ளைகளுக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஒவ்வொரு பொருளுக்கு பின்னும் ஒரு கதையும், பெற்றோரின் தியாகமும் கண்டிப்பாக இருக்கும்.

      நடுத்தர வர்க்கத்தில் பெற்றோரின் பல விருப்பங்களின் தியாகங்களால்தான் பிள்ளைகள் பள்ளியிலேயே அடி எடுத்து வைக்கிறார்கள். அப்படியே அது காலப்போக்கில் பிள்ளைகளின் விருப்பங்களாகவே மாறி விடுகிறது. பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் நினைத்து ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து எடுத்து வைக்கின்றனர். வெளியிலிருந்து பார்ப்பதற்கு பிள்ளைகளின் மேல் பெற்றோருக்கும், பெற்றோரின் மேல் பிள்ளைகளுக்கும் பெரிதாகப் பாசம் இருப்பதாய்ப் பார்வைக்குத் தோன்றாவிட்டாலும், அவர்களின் நினைப்பும் செயலும் அதைச் சார்ந்ததாகவே இருக்கும்.

    அதனால் தான் பெரும்பாலும் 90'களில்  அப்பாவுக்கும் பிள்ளைகளுக்குமான  உணர்வுகள் கள்ளுக்குள் ஈரமாக மறைந்தே இருந்தது. அப்பாக்கள் பெரும்பாலும் தோற்றத்தில் கண்டிப்பானவர்களாகத்  தெரிவார்கள். பிள்ளைகள் தங்கள் விருப்பங்களுக்கு அம்மாவையே தேடுவார்கள். எல்லா செய்திகளும் அம்மாவின் மூலம் அப்பாவுக்கு சென்றடையும். அப்பாவிற்கும் பிள்ளைகளுக்கும் ஒரு பாலமாக அம்மாக்கள் மாறிவிடுவார்கள்.  அப்பாக்களிடம் விருப்பங்களைச் சொல்வதற்கு கூட பெரும் தயக்கங்கள் இருக்கும். அவரை நேருக்கு நேர் பார்த்து பேசுவது அரிதான ஒன்றாகும். அம்மாக்களும் பிள்ளைகளைக் கண்டிப்பதற்கு அப்பாவிடம் சொல்லி விடுவேன் என்றும் அப்பா வருகிறார் என்றும் சொல்லி பிள்ளைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பர்.

   ஆனால் அந்த அப்பாக்களின் பாசத்திற்கு  முன்னால் உலகில் வேறேதும்  நிற்க முடிவதில்லை. அவ்வளவு ஏன் அம்மாக்களின் பாசங்களே சில சமயங்களில் தோற்றுத்தான் போகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த நிலையில், பிறந்தநாட்களே ஆர்பாட்டமில்லாமல் வந்து போகும் போகும் போது,  அன்னையர்தினம், தந்தையர் தினம், ரக்சா பந்தன் இதையெல்லாம் கேட்கவா வேண்டும்.

      ஆனால் இது போல  உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருந்தாலும், அத்தகைய நடுத்தர குடும்பத்தில் உள்ள பாசப்பிணைப்பு எந்த கோடீஸ்வர குடும்பத்திற்கும் கிடைக்கப் பெறாத வரமாகும்.  ஒருவரின் விருப்பத்திற்காக மற்றொருவர் விட்டுக்கொடுக்கும் அந்த பாசத்திற்கு முன் எதுவும் நிற்க முடியாது. அவர்களின் பாசத்தை இந்த ஒரிரு நாட்களில் சொல்லி விடமுடியாது. இந்த கொண்டாட்டங்களின் அர்த்தமாய் வாழ்ந்து காட்டும் அவர்களே அதன் உண்மையான எடுத்துக்காட்டுகள்.

    இந்தக் குடும்பத்திலிருந்து வரும் பிள்ளைகளுக்கு வெற்றிகள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.வெற்றியை நோக்கிப் பயணிக்கும் ஒவ்வொரு அடியிலும், பல சோதனைகளைக் கடந்தே வர வேண்டியுள்ளது. வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்தாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தங்களது பங்களிப்பை முடிந்தவரையில் முழுமைக்கும் அதிகமாகக் கொடுக்கப் போராடுகிறார்கள். ஏனெனில் கிடைக்கும் வாய்ப்புகளின் அருமை அவர்களுக்கு நான்றாகவே தெரியும். ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கை அவர்களைப் பட்டித்தீட்டிக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் மேலமட்டத்திற்கு வரும்போது அவர்களால் எளிதில் பிரகாசிக்க முடிகிறது. 

     நடுத்தர வர்க்கத்தில் ஒருவர் வெற்றியைத் தொடும்போது, மற்றவர்களும் அதைத் தங்களின் வெற்றியாகவே நினைத்துக் கொண்டாடுவார்கள். தன்னைப் போல போராடுபவர்களுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை அளித்து, அவர்கள் வெற்றி பெற உதவும் மனப்பக்குவம் அதிகமாக இருக்கும். சேலத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சிராஜ் ஆகியோரின் சமீபத்திய வெற்றிகளே அதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள். 

        வாழ்க்கையில் தோல்விகள் துரத்தும் போதோ, ஏமாற்றங்களை எதிர்கொள்ளும் போதோ, அதனை முழுப் பலத்துடன் எதிர்கொள்ளும் இவர்களின் மனோதிடம் பாராட்டுக்குரியது. சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர்கொள்ளவே பயந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் விட்டில் பூச்சிகள் போல இல்லாமல், எவ்வளவு ஏமாற்றங்கள், தோல்விகள் வந்தாலும் அதனால் துவண்டு விடாமல், தோல்வியை அடித்தளமாக்கி அதன் மேல் தங்கள் பயணத்தை தொடர்ந்து வெற்றி என்னும் எல்லைக் கோட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருப்பார்கள். 

வாழ்க்கை எவ்வளவு வலிகளைத் தந்தாலும், அதை புன்னகையுடன் கடந்து பீனிக்கஸ் பறவையாய், வெற்றியைத் தொடும் ஆற்றல் நடுத்தரக் குடும்பத்து பிள்ளைகளுக்கே உரிய சிறப்பு....

நட்புடன்

உங்கள்

✍️ கவிஞர் விஜயநேத்ரன் 

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரருக்கு அன்பில் ஓர் கடிதம்

யார் கடவுள் : கடவுளைக் கண்டா வரச் சொல்லுங்க

Copied!

தவறு சட்டத்தில் இல்லை; அதைப் பயன்படுத்தும் விதத்தில்தான்- என்னங்க சார் உங்க சட்டம்

கவிஞர் விஜயநேத்ரன்

ஏட்டில் உள்ள சமத்துவம் எண்ணத்தில் எப்போது வரும் : ஜெய் பீம் - ஒரு மனித சுயபரிசோதனை

கவிஞர் விஜயநேத்ரன்

உள்ளத்தால் வாழ்வோம் : உனக்கும் கீழே உள்ளவர் கோடி

கவிஞர் விஜயநேத்ரன்

நவராத்திரி : பேரரக்க மனதழித்து பெண்மையைப் போற்றுவோம்!!!!

கவிஞர் விஜயநேத்ரன்

சமூகநீதி போதித்த சாதனையாளர் : தந்தைப் பெரியார்